உள்ளடக்கத்துக்குச் செல்

அவதானிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவதானிப்பு என்பது அறிவியல் நடைமுறை ஒன்றின் ஆரம்பச் செயற்பாடு ஆகும். இது அடிப்படை மூலம் ஒன்றிலிருந்து வினைத்திறனுடன் தகவல்களைச் சேகரிப்பதாகும். உயிரங்கிகளில் அவதானிப்பை மேற்கொள்ளுவதற்கு சிறத்தலடைந்த புலனங்கங்கள் காணப்படுகின்றன. அறிவியலில் புலக்காட்சி மற்றும் தரவுகளைப் பதிவு செய்வதில் அறிவியல் கருவிகள் பயன்படுகின்றன. அவதானிப்பு எனும் பதம் அறிவியல் செயன்முறையின் போது தரவுகள் சேகரிக்கப்படுவதை குறிப்பிடுவதாகும். அவதானிப்பு பண்புசார் தன்மை கொண்டதாக (அதாவது, குறித்த இயல்பு உள்ளதா அல்லது இல்லையா என்பது) அல்லது அளவுசார் தன்மையதாக (அதாவது அவதானிக்கும் தோற்றப்பாட்டின் எண்ணிக்கை அல்லது அளவு) இருக்கும்.

அறிவியல்

[தொகு]

அறிவியல் முறைமையானது கருதுகோள் ஒன்றை ஒருங்கமைத்து பரிசோதிப்பதில் அவதானங்களின் இயற்கை தோற்றப்பாட்டுப் பட்டியல் ஒன்று தேவையாயுள்ளது.[1] இது பின்வரும் படிமுறைகளை உள்ளடக்கும்:[2][3]

 1. இயற்கைத் தோற்றப்பாடு குறித்து வினா ஒன்றை வினவுதல்
 2. தோற்றப்பாட்டை அவதானித்தல்
 3. வினாவுக்கு தோராயமான பதிலாக அமையும் கருதுகோள்களை அமைத்தல்
 4. இதுவரை ஆயாயப்பாடாத தருக்க ரீதியான, அவதானிக்கக்கூடிய, தோற்றப்பாட்டின் விளைவுகளை எதிர்வுகூறல்
 5. கருதுகோள்களுக்கான எதிர்வுகூறல்களை பரிசோதித்தல் (இது பரிசோதனையாக, அவதானிப்பு கற்கையாக, கள ஆய்வாக, மாதிரியாக்கமாக இருக்கும்)
 6. சோதனையில் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு தருக்க ரீதியான முடிவை வரைதல் அல்லது மாற்று கருதுகோள்களை அமைத்து சோதிப்பை மீளச்செய்தல்
 7. நெறிமுறைகளுக்கு அமைவாக கருதுகோள், அவதானம், முடிவுகளை முன்வைத்தல்
 8. இதே தோற்றப்பாட்டை அனுபவமாக கொண்ட சக ஆய்வாளர்களுடன் முடிவுகளைப் பகர்தல்

அறிவியல் முறைமைகளில் இரண்டாம், ஐந்தாம் படிகளில் அவதானிப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. எவ்வாரெனினும் வெவ்வேறு அவதானிப்பாளர்களின் அவதானிப்புகளை ஒப்பிடுவதற்கு மீள்செய்கை அவசியமாகின்றது. மனித புலனங்கங்களின் வெளிப்பாடுகள் அகநிலை சார்ந்ததும் பண்பறிமுறையானதும் ஆகும். இதனை பதிவு செய்வதும் ஒப்பிடுவதும் கடினமானது. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளை பதிவு செய்யவும் ஒப்பிடுவதற்காகவும் பயன்படும் வகையில் அளவீடுகள் உருவாக்கப்பட்டன. அளவீடுகள் அவதானிப்புகளைப் பயன்படுத்தி அவதானிக்கப்படும் தோற்றப்பாடுகளின் நியம அளவீடு ஒன்றுக்கு ஒப்பீடு செய்கின்றன. இந்த நியம அளவீடு எல்லா அவதானிப்பாளர்களாலும் பகரப்பட்ட அல்லது வலிறுத்தப்பட்ட ஒரு கலைப் பொருளாக, செயன்முறையாக, அல்லது வரைவிலக்கணமாக இருக்கும். அளவீட்டில் நியம அலகுகளின் எண்ணிக்கை அவதானிப்புகளின் எண்ணிக்கைக்கு சமனாகும்.

மனித புலன்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் புலக்காட்சியில் ஒளியியல் மாயை முதலான வழுக்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. அறிவியல் கருவிகளான நிறுத்தல் கருவிகள், கடிகாரங்கள், தொலைக்காட்டி, வெப்பமானி, புகைப்படக்கருவி, ஒலிப்பதிகருவி முதலானவை மனித அவதானிப்பு திறனுக்கு உதவுவதற்க்காக உருவாக்கப்பட்டன. அதே போல அகவயத்தன்மை கொண்ட உணர்வுகளான அவதானிக்க முடியாதவைகளை அளவிடப் பயன்படும் கார அமிலக் காட்டிகள், வொல்ட்டு மானி, நிறமாலைமானி, அகச்சிவப்பு காமரா, ஊசல்மானி, குறுக்கீட்டுமானி, கெய்கர் எண்ணி, வானொலி வாங்கி முதலானவையும் உருவாக்கப்பட்டன.

அறிவியல் களங்களில் எதிர்கொள்ளப்படும் ஒரு பிரச்சினை அவதானிப்புகள் அவதானிக்கப்படும் போது அவை அவதானிக்கப்படாத வேளைகளை விட மாறுபட்ட விளைவுகளைத் தருவது. இது அவதானிப்பாளர் தாக்கம் எனப்படும். எடுத்துக்காட்டாக, வாகனங்களின் சில்லுகளில் உள்ள காற்றழுத்தத்தை சோதிக்கும் போது சிறிதளவு வளி வெளியேறுவது தவிர்க்கமுடியாதது. ஆகவே அவதானிக்கப்படுவது மாற்றமுற்ற அழுத்தம் ஆகும். ஆகவே சிறந்த கருவிகளை உபயோகிப்பதன் மூலம் இந்த குறைபாடு தவிக்கப்படுகின்றது.

முரண்பாடுகள்

[தொகு]

அறிவியலின் சில துறைகளில் அவதானங்களின் பெறுபேறுகள் நாளாந்த அவதானிப்புகளில் முக்கியத்துவம் பெறாத காரணிகளைப் பொறுத்து மாறுபடும். இவை பொதுவாக முரண்பாடுகளுடன் அதாவது இரண்டு வேறுபட்ட நிலைமைகளில் வித்தியாசமாகத் தோன்றுவதான நிகழ்வாக பொதுப்புலனை மீறியதாக விபரிக்கப்படும்.

 • சார்பியல்: சார்பு இயற்பியலில் ஒளியின் கதிக்கு நெருங்கிய வேகங்களை கருதினால் வெவ்வேறு அவதானிப்பாளர்கள் வெவ்வேறு பெறுமான முள்ளதாக நீளம், நேரவீதம், திணிவு, மற்றும் பல பொருளொன்றின் இயல்புகளை அவதானிப்பர். ஏனைய இயல்புகள் பொருளின் வெகத்திற்கு ஏற்ப மாறுபடும். எடுத்துக்காட்டு: இரட்டையர் முரண்பாடு ஒரு இரட்டையர் ஒளியின் வேகத்தில் பயணம் செய்து வீடு திரும்புகிறார். மற்றவர் வீட்டிலே இருக்கின்றார். வீட்டில் இருந்தவர் மற்றையவரை விட வயது முதிர்ந்தவராக இருந்தமை காட்டப்படுதல்.
 • துகள் பொறியியல்: துகள் பொறியியலில், அதாவது மிகச் சிறிய பொருட்களினியல்புகள் பற்றிய ஆய்வுகளில் தொகுதி ஒன்றை அதனை சிதைக்காமல் அவதானிக்க முடியாது. அவதானிப்பாளர் இது பகுதி பெறுபேறு என்பதனை கருத வேண்டும்.

கோடல்கள்

[தொகு]

மனிதனின் புலனங்கங்கள் நிகழ்படப் பதிகருவி போல செயற்படாது, பக்கச்சார்பின்றி எல்லா அவதானிப்புகளையும் பதியும்.[4] மனிதனின் கருத்துகள் சிக்கலான, சாராம்சங்களின் சுயாதீன செயற்பாடாக நிகழும். என்ன பேணப்பட்டது, என்ன வீசப்பட்டது என்பது உள்ளக மாதிரியில் அல்லது உலக பிரதிநிதித்துவத்தில் தங்கியிருக்கும். இது உளவியலில் திட்டம்(அ)விதி எனப்படும். இதுவே ஒருவரின் வாழ்க்கை முழுவதையும் தீர்மானிக்கும் ஒன்றாகும்.

உறுதிப்படுத்தல் கோடல்

[தொகு]

அவதானிப்பவரின் சுய உணர்வுடனான அல்லது சுய உணர்வற்ற எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் உலகப் பார்வைக்கு ஏற்பவும் மனித அவதானங்கள் அதை உறுதிப் படுத்துவதில் கோடலுறுகின்றன. நாம் எதை எதிர்பார்கின்றோமோ அதையே காண்கின்றோம். [5] உளவியலில் இது உறுதிபடுத்தல் கோடல் எனப்படும்.[5] ஓர் அறிவியல் ஆய்வு ஒன்றின் இலக்கு ஒரு புதுப்பொருளைக் கண்டுபிடிப்பதாயின், இந்த கோடல் புதிய கண்டுபிடிப்பு மீது மிகையான திணிப்பு ஒன்றாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Kosso, Peter (2011). A Summary of Scientific Method. Springer. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9400716133.
 2. Mendez, Carl Cedrick L.; Heller, H. Craig; Berenbaum, May (2009). Life: The Science of Biology, 9th Ed. USA: Macmillan. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1429219629.
 3. Shipman, James; Wilson, Jerry D.; Todd, Aaron (2009). Introduction to Physical Science, 12th Ed. Cengage Learning. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0538731877.
 4. Shaw, Julia (Aug 12, 2016). "Not all memories really happened: What experts wish you knew about false memories". Scientific American. Nature America, Inc. பார்க்கப்பட்ட நாள் August 13, 2016.
 5. 5.0 5.1 Shermer, Michael (2002). Why People Believe Weird Things: Pseudoscience, Superstition, and Other Confusions of Our Time. MacMillan. pp. 299–302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1429996765.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவதானிப்பு&oldid=3404661" இலிருந்து மீள்விக்கப்பட்டது