அழுந்தூர் வரகுணீசுவரம்
அழுந்தூர் வரகுணீசுவரம் என்பது தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி-மேலூர்ச் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். கல்வெட்டுகளில் அழிந்தியூர் என்று முன்பு அழைக்கப்பட்டு இன்று அழுந்தூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]இக்கோயில் முற்காலப் பாண்டிய மன்னனான வரகுணன் பெயரால் அமைந்த ஒரு கோயிலாகும். முற்கால பாண்டியர் காலத்திற்குப் பிறகு இக்கோயில் சிதைவுற்றது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோயிலுக்கு திருப்பணி செய்து, பெருமண்டபம், இடைநாழிகை ஆகியவற்றை கட்டி விரிவாக்கி வழிபாட்டைத் தொடர்ந்தனர். இங்கு அக்காலத்தில் பிச்சியார் மடம் என்ற பெயரிலான திருமடம் இருந்தது அந்த திருமடம் இக்கோயில் திருப்பணிகளில் துணை நின்றதை இங்கு கிடைத்த கல்வெட்டு வழியாக அறியப்படுகிறது. இக்கோயிலில் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது இங்கு கிடைத்த கல்வெட்டுகளின் வழியாக தெரியவருகிறது.[1]
கோயில் அமைப்பு
[தொகு]வரகுணீசுவரம் கோயிலானது கருவறை, முகமண்டபம், இடைநடை, பெருமண்டபம் என்ற கட்டுமானங்களைக் கொண்டுள்ளது. இக்கோயிலின் முதலிரு கட்டமைப்புகளும் பிற்கால சோழர் காலத்தவை. இடைநடையும் அதையடுத்து விரியும் பெருமண்டபமும் இருவேறு காலக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.
வரகுணீசுவரம் கோயில் இறைவன் கருவறைக்கு வடக்கில் தெற்கு பார்த்தவாறு அம்மன் திருமுன் உள்ளது. அம்மன் திருமுன் கருவறை முகமண்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அம்மன் நீள்சடைமகுடமும் தோள், கை வளைகளும் சரப்பளியும் பட்டாடையும் பெற்று சமபங்கத்தில் நின்றுள்ளாள் அம்மனின் வலது முன் கை காக்கும் குறிப்பிலும் இடது முன் கை அருட்குறிப்பிலும் உள்ளன. பின்னிரு கைகளில் வலப்புறம் அங்குசம், இடப்புறம் தாமரையும் ஏந்தியவாறு உள்ளன. கச்சற்ற மார்பகங்களுடன் அம்மன் உள்ளாள். அம்மனின் வலச்செவி பனையோலைக் குண்டலத்துடனும், இடச்செவியில் மகரகுண்டலம் அணிந்தவளாகவும் உள்ளாள்.
கோயில் வளாகத்தின் தென்மேற்கு மூலையில் பிள்ளையார் திருமுன் உள்ளது. இது அண்மைக் காலக் கட்டமைப்பாக உள்ளது. கருவறை மட்டுமே கொண்டுள்ள இந்த சிற்றாலயத்தில் இலலிதாசனத்தில் அமர்ந்துள்ளார் பிள்ளையார். இடம்புரிப் பிள்ளையாரான இவரின் பின்கைகளில் அங்குசம், பாசம். வலது முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இடது முன் கையில் உள்ள மோதகத்தைத் துதிக்கை சுவைக்கிறது. இவரின் இரு தந்தங்களும் உடைந்துள்ளன.[2]
மேலும் இக்கோயிலில் பைரவர், முருகன், சண்டேசுவரர் ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ளன.
குறிப்புகள்
[தொகு]- ↑ "வரலாறு ஒரு கதை போல..." Hindu Tamil Thisai. 2023-03-12. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
- ↑ "Varalaaru - A Portal For South Asian History". www.varalaaru.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.