அழியா நினைவகம்
அழியா நினைவகம் (Non-volatile memory) என்பது கணினிக்கான மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், தன்னுள் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை இழக்காமல், தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்ட, கணினிச் சேமிப்பக வகையாகும்.[1] இதற்கு நேர்மாறாக, தன்னுள் உள்ள தரவுகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளத் தொடர்ச்சியான மின்சாரம் தேவைப்படும் நினைவகங்கள் அழியும் நினைவகங்கள் என அழைக்கப்படுகின்றன. அழியா நினைவகத்திற்கான பொதுவான எடுத்துக்காட்டுகளில், மின்சுடர் நினைவகம்), படிக்க மட்டுமேயான நினைவகம் மாற்றவியலா நினைவகம், வன் தட்டு நிலை நினைவகம் ஆகியவை அடங்கும். மின் துண்டிப்பு ஏற்படும் சுழற்சிகளிலும், தரவுகளின் நிலைத்தன்மையையும் (Data persistence) நம்பகத்தன்மையையும், உறுதி செய்வதன் மூலம், இக்கால கணினியியலில் அழியா நினைவகம், மிக முக்கியமான பங்காற்றுகிறது.
நோக்கம்
[தொகு]அழியா நினைவகம் (NVM) என்பது இக்காலத்து கணினிச் செயல்பாட்டிற்கு, இன்றியமையாத சேமிப்பக முறையாகும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் தரவுகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பது இதன் அடிப்படைச் செயலாகும். இந்தத் தனித்துவமான பண்பே, தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்படாவிட்டால், தன்னுள் உள்ள தரவுகளை உடனடியாக இழந்துவிடும் அழியும் நினைவகங்களில் இருந்து (எடுத்துக்காட்டு :நேரடி அணுகல் நினைவகம்) இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.
முக்கிய பண்புகள்
[தொகு]அழியா நினைவகங்கள் அடிப்படையில் இரண்டு முக்கியப் பண்புகளைக் கொண்டுள்ளன.
- தரவுத் தேக்கம் (Data Retention): இந்த நினைவகத்தில் சேமிக்கப்படும் தரவுகள் நிரந்தரமாகத் தக்கவைக்கப்படுகின்றன. பயனர் அல்லது கணினி அமைப்பு அத்தரவுகளை வேண்டுமென்றே அழிக்கும் வரை அல்லது அதன் மீது மாற்றுத் தரவுகளை எழுதும் வரை (Overwritten) இவை பாதுகாப்பாக இருக்கும்.
- மின் தேவை: அழியும் நினைவகங்களைப் போலன்றி, அழியா நினைவகங்களுக்குத் தரவுகளைத் தக்கவைத்துக்கொள்ளத் தொடர்ச்சியான மின்சாரம் தேவையில்லை. மின்சாரம் நிறுத்தப்பட்ட நிலையிலும் தரவுகள் எவ்வித இழப்புமின்றிப் பாதுகாக்கப்படுகின்றன.
வகைகள்
[தொகு]பல்வேறு வகையான அழியா நினைவகங்கள், கணினிகள், மின்னணுக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் வகைகளும், விளக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
மின்சுடர் நினைவகம்
[தொகு]மின்சுடர் நினைவகம் என்பது மின்னணு முறையில் தரவுகளை அழிக்கவும், மீண்டும் புதிதாக நிரல்படுத்தவும் (Reprogrammed) கூடிய ஒரு வகையான அழியா நினைவகமாகும். எடுத்துக்காட்டுகள்: யுஎஸ்பி நிலைவட்டுகள் (USB drives), திண்ம நிலை இயக்கிகள் (SSDs).
படிக்க மட்டுமேயான நினைவகம்
[தொகு]மாற்றவியலா நினைவகம் அல்லது படிக்க மட்டுமேயான நினைவக வகையான நினைவகத்தில், தரவுகள் உற்பத்தி செய்யப்படும்போதே, நிரந்தரமாக எழுதப்படுகின்றன. அதன் பின்னர், இதில் உள்ள தகவல்களை எளிதாக மாற்றவோ அல்லது திருத்தவோ இயலாது. எடுத்துக்காட்டுகள்: நிலைப்பொருள் சேமிப்பகங்கள் நிலைபொருள் சேமிப்பகம்.
வன்வட்டு இயக்கிகள்
[தொகு]வன் தட்டு நிலை நினைவகம் (HDD) என்பவை காந்தப் பதிவுக் கொள்கைகளைப் பயன்படுத்தித் தரவுகளை, நிரந்தரமாகச் சேமிக்கும் எந்திரவியல் சேமிப்புச் சாதனங்களாகும். எடுத்துக்காட்டுகள்: கணினிகளில் பயன்படுத்தப்படும், பாரம்பரிய வன்வட்டுகள் (Traditional hard drives).
இ. இ. பி. ஆர். ஓ. எம்.
[தொகு]இ. இ. பி. ஆர். ஓ. எம்.(EEPROM - Electrically Erasable Programmable Read-Only Memory) என்பது, மின்சாரத்தால் அழிக்கப்படக்கூடியதும், நிரல்படுத்தக்கூடியதுமான படிக்க மட்டுமேயான நினைவகமாகும். இது நினைவகத்தில் உள்ள தரவுகளை, மீண்டும் புதிதாக எழுத அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டுகள்: கணினித் தாய் பலலகைகளில் உள்ள பயாசு என்றழைக்கப்படும், தொகுசுற்றுகளைக் கூறலாம்.
பயன்பாடுகள்
[தொகு]தற்போது மின்னணுவியல், கணினியியலில், அழியா நினைவகங்கள் பல முக்கியப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. அவை முதன்மையாகப் பின்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
- நீண்ட காலத் தரவுச் சேமிப்பு: இயங்குதளங்கள், மென்பொருள் பயன்பாடுகளுக்காகவும், பயனர்களின் தரவுகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கவும், இந்நினைவகம் மிகவும் உகந்ததாகும்.
- காப்புநகல் தீர்வுகள் : இதன் அமைப்புகளுக்குத் தேவையான நம்பகமான தரவுத் தேக்கத்தை, இவை வழங்குகின்றன.
- பொதிக்கப்பட்ட அமைப்புகள்: திறன் பேசிகள், கைக் கணினிகள் போன்ற கருவிகளில், அவற்றின் இயக்கத்திற்கான நிலைப்பொருள்களை, சேமிக்க அழியா நினைவகங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.