அழகியல் உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகியல் உளவியல் (The Psychology of Aesthetics) மக்கள் சில இயற்கைக் காட்சிகளையும், பாடல்களையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், அழகானவை என்று எண்ணி, அதன் காரணமாக, மகிழ்ச்சியடைந்து, அழகு அனுபவம் என்பதைப் பெறுகின்றனர்.[1] இந்த அனுபவங்களை வாயால் வருணிக்கவோ, உள்முகப் பார்வையால் பாகுபடுத்திப் பார்க்கவோ முடியாது. அவைகளின் இயல்பையும், காரணத்தையும் ஆராய்ந்து, அறிய உளவியலார் முற்படுகின்றனர்.[2]

அடிப்படை[தொகு]

அழகான இயற்கைப் பொருள்களைக் கண்டு உண்டாகும் இன்ப உணர்ச்சிக்குக் காரணம், அப்பொருள்கள் நன்மை பயக்கும் சூழ்நிலைப் பொருள்களா இருப்பதாகவோ அல்லது இன்பந் தரும் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையனவாகவோ அல்லது அப்பொருள்களிடம் உண்டாகும் ஒற்றுமை உணர்ச்சியாகவோ இருக்கலாம்.[3] ஒரு பொருளுடன், ஒற்றுமை உணர்ச்சி உண்டாவதே, கலைப்பொருள்களை உண்டாக்குவதற்கும் துய்ப்பதற்குமான உளநிலையின் அடிப்படையாகும். சில உளவியலார்கள் அழகு அனுபவத்துக்கு இதனி னும் அடிப்படையான காரணம் உண்டா என்று ஆராய முயன்றுளர். பிராய்டு (Freud) என்பவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் உளப்பகுப்பியலார் கலையை உண்டாக்குவதற்கும் துய்ப்பதற்கும் அடிநிலையாகவுள்ளது பால், உந்தலே என்று கூறுகிறார்கள்.[4]

மனத்தின் மூன்று அமிசங்களில் ஒன்றாகிய 'அறிதல்' என்பதன் ஆராய்ச்சி செய்த பிரிட்டிஷ் உளவியலாளரான, சுபியர்மன்,[5] பொருள்களிடையேயுள்ள தொடர்பு களைக் கண்டுபிடிப்பது ' அறிதல்' என்பதில் மிகவும் முக்கியமாயிருத்தலால், அறிதலும் ஆக்கச் செயலே என்றும், அதனால் பொருத்தமில்லாத தொடர்புகளை நீக்கிவிட்டு, பொருத்தமான தொடர்புகளைக் காண்பதே, கலை ஆக்கத்துக்கும், அனுபவத்துக்கும் அடிப்படை என்றும் கூறுகிறார்.

ஆய்வுகள்[தொகு]

சோதனை உளவியலார்கள் (Experimental Psychologists) அழகைப் பற்றிச் செய்துள்ள சோதனைகள், தனி நிறங்களைத் தேர்தல், நிறங்களைச் சேர்த்தல் போன்றவற்றைப் பற்றியனவாகும். நிறங்கள் தேர்ந்தெடுப்புப் பற்றிய சோதனைகளிலிருந்து, தேர்கின்ற உளவகை நான்கு என்பது தெரியவருகிறது. (1) அறிவுவகை : எந்த நிறம் பொருந்தும் என்று ஆராய்தல், (2) உடலியல்வகை : நிறங்களைக் கண்டு மகிழ்தல், சோர்தல் போன்ற நிலைமை அடைதல், (3) சேர்க்கை வகை : இன்ப நிகழ்ச்சியுடனோ, துன்ப நிகழ்ச்சியுடனோ நிறங்களைத் தொடர்புறுத்தல், (4) ஐக்கியவகை : நிறங்களை மனித குணங்களுடன் தொடர்புறுத்தல். இந்தச் சோதனை முடிவுகளை ஓவியத்தையும்,, இசையையும் கொண்டு செய்யும் சோதனைகள் வலியுறுத்துகின்றன.

அமெரிக்க உளவியலார் கார்ல் சீஷோர் என்பவர் இசையைப் பயில்வதற்கும், நுகர்வதற்கும் வேண்டிய அடிப்படையான புலன் ஆற்றல்களை அளந்து அறிவதற்கானச் சோதனைகளை வகுத்துள்ளார். ஆயினும் கலை ஆக்கத்துக்கும், அனுபவத்துக்கும் புலன் ஆற்றல்களைவிட, உருவக் காட்சி ஆற்றலே மிகவும் இன்றியமையாதது என்று, இப்பொழுது அறியப்பட் டிருக்கிறது. இன்னிசையை உணர்வதற்குச் சுருதிக்கும், சுரத்திற்குமுள்ள வேறுபாட்டை அறியும் ஆற்றலைவிட, இவை அனைத்தும் ஒன்றுபட்டு, ஓர் இசைவடிவை உண்டாக்குகின்றன, என்று காணும் ஆற்றலே தேவையாகும். இதுதான் அழகியல் உளவியலுக்கு, கெசுட்டால்டு(Gestalt) உளவியல் செய்துள்ள சேவையாகும். [6]

ஆண்கள் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற வரிசையிலும், பெண்கள் நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்ற வரிசையிலும் நிறங்களை விரும்புவதாகச் சோதனை வாயிலாக அறிகிறோம். சிறு குழந்தைகள் மஞ்சளையும், சிவப்பையும் விரும்புகின் றனர். பொதுவாக அனைவரும் எந்த நிறமாயினும் அது மிகுந்து தோன்றுவதையே விரும்புகின்றனர். அழகு அனுபவம் பற்றிய சோதனைகள் மக்களிடையே வேறுபாடுகள் உண்டு என்று காட்டுகின்றன. இவ்வேறுபாடுகள் இயற்கையான புலன் வேறுபாடுகள், காட்சி வேறுபாடுகள் ஆகியவற்றின் விளைவுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://plato.stanford.edu/entries/aesthetic-judgment/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-29. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
  3. https://www.psychologytoday.com/us/blog/reading-between-the-headlines/201206/the-psychology-beauty
  4. https://blogs.psychcentral.com/practical-psychoanalysis/2016/02/7-things-sigmund-freud-nailed-about-love-sex/
  5. https://www.britannica.com/biography/Charles-E-Spearman
  6. https://www.britannica.com/science/Gestalt-psychology
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகியல்_உளவியல்&oldid=3542017" இலிருந்து மீள்விக்கப்பட்டது