உள்ளடக்கத்துக்குச் செல்

அலோஃபித் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹூர்ன் தீவுகள் (புட்டூனாவும் அலோஃபியும்); அலோஃபி தீவு தென்மேற்கில் உள்ளது

அலோஃபி (Alofi) அமைதிப் பெருங்கடலில் உள்ளதோர் தீவாகும். இது பிரான்சிய கடல்கடந்த திணைக்களத்தைச் சேர்ந்த வலிசும் புட்டூனாவும் ஆட்புலத்தின் அங்கமாகும்.

மேலோட்டமாக

[தொகு]

இது பெரிதும் மனிதர் வசிக்காத தீவாகும்; 2003ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் மேற்கிலுள்ள அலோஃபிடாய் சிற்றூரில் இருவர் வாழ்வதாக பதியப்பட்டுள்ளது. இது புட்டூனா தீவின் அலோ உள்ளாட்சிப் பகுதியில் அடங்கியுள்ளது. ஆனால் ஐரோப்பியர்கள் இங்கு குடியேறும் முன்னர் இங்கு புட்டூனா தீவுக்கு இணையாக, 1900 மக்கள், அடர்ந்த மக்கள்தொகை இருந்துள்ளது. சோலோகா (வடக்கு), சாவாகா (தென்கிழக்கு), அலோஃபிடாய் (மேற்கு), முவா (வடமேற்கு) ஆகியன அப்போதிருந்த சிற்றூர்களாகும். சில நிலப்படங்களில் வடக்கில் கெய்னோ என்ற சிற்றூரும் காட்டப்பட்டுள்ளது.

அலோஃபி தீவு புட்டூனாவிலிருந்து தென்மேற்கில் 2 கி.மீ தொலைவில் உள்ளது. அலோஃபியில் தங்கள் தோட்டங்களை கொண்டுள்ள புட்டூனியர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு சென்று தங்கள் தோட்டங்களை பராமரிக்கின்றனர். புகையிலை இங்கு பெரும்பாலும் பயிரிடப்படுகின்றது. ஒரு வாரத்திற்கு புகைப்பதற்குத் தேவையான புகையிலை இலைகளை எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர்.

தீவின் பரப்பளவு 32 கிமீ² ஆகும். இங்குள்ள உயரமான சிகரம் மோன்ட் கோலோஃபோ 410 மீட்டர் உயரமுள்ளது. புட்டூனா தீவும் அலோஃபி தீவும் கூட்டாக ஹூர்ன் தீவுகள் எனபடுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோஃபித்_தீவு&oldid=2004314" இலிருந்து மீள்விக்கப்பட்டது