அலெக்சாந்திரியாவின் மெனலாசு
அலெக்சாந்திரியாவின் மெனலாசு (Menelaus of Alexandria) (/ˌmɛnɪˈleɪəs/; கிரேக்கம்: Μενέλαος ὁ Ἀλεξανδρεύς, Menelaos ho Alexandreus; c. 70 – 140 CE) கிரேக்க[1] கணிதவியலாளரும் வானியல் வல்லுநருமாவார். இவர், புவிமேற்பரப்பின் நேர்பாதைகளை நேர்கோடுகளுக்கு ஒத்தவையாக முதன்முதலாக ஏற்றுக்கொண்டவர்.
"மெனலாசு நிலவுக்குழி"க்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மெனலாசு பற்றி அதிகமான விவரங்கள் இல்லாவிட்டாலும் அவர் இளமைப்பருவத்தில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்து பின்னர் உரோமிற்கு இடம்பெயர்ந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. கணிதவியலாளர்கள் அலெக்சாந்திரியாவின் பாப்பசும், புரொக்ளசும் இவரை அலெக்சாந்திரியாவின் மெனலாசு எனக் குறிக்கின்றனர். மேலும் ரோமில் நடைபெற்ற அறிஞர் லூசியசுடானான இவரது பேச்சு, கிரேக்க புளூட்டாக் என்ற வரலாற்றாசிரியரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தொலெமியும் (2 ஆம் நூற்றாண்டு CE) தனது படைப்பான ஆல்மகெசுட்டில் (Almagest (VII.3)) 98 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் மெனலாசால் கண்டறியப்பட்ட இரு வானியல் நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவை, சில இரவுகள் இடைவெளியில் நிலவால் இரு விண்மீன்களுக்கு நிகழ்ந்த இடைமறைப்பு நிகழ்வுகளாகும். இவற்றைப் பயன்படுத்தி தொலெமி, இரண்டாம் நூற்றாண்டு BCE இல் ஹிப்பார்க்கசால் கண்டுபிடிக்கப்பட்ட சம இரவு நாட்கள் குறித்த கருத்தை தொலெமி உறுதிபடுத்தினார்.
படைப்புகள்
[தொகு]மெனலாசின் படைப்புகளில் எஞ்சியிருப்பது அவரது "இசுபெரிக்கா" (Sphaerica) என்ற நூலின் அரபிய மொழிபெயர்ப்பு மட்டுமே. இந்நூலில் மூன்று தொகுதிகள் உள்ளன. அவற்றில் வானியல் அளவீடுகளுக்கும் கணக்கீடுகளுக்கும் கோள வடிவவியலின் பயன்பாடுகள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. மூன்று பெருவட்ட விற்களால் அமைவுறும் கோள முக்கோணங்கள் பற்றிய கருத்துருக்கள் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோள முக்கோணங்களை மெனலாசு முக்கரங்கள் ("trilaterals") எனக் குறிப்பிடுகிறார். முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் ஒவ்வொன்றின் மீதமையும் மூன்று புள்ளிகள் மற்றும் அப்புள்ளிகளை ஒத்த கோள முக்கோணத்தின் மூன்று கரங்கள் ஒவ்வொன்றின் மீதமையும் மூன்று புள்ளிகளின் ஒருகோடமைவு பற்றிய தேற்றத்தினை (மெனலாசின் தேற்றம்) நிறுவியிருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் இந்நூல் அராபிய கணிதவியலாரும் னானியலாளருமான பிரான்சிசுக்கோ மௌரொலிக்கோவால் இந்நூல் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் "Greek mathematician and astronomer who first conceived and defined a spherical triangle (a triangle formed by three arcs of great circles on the surface of a sphere)."
மேற்கோள்கள்
[தொகு]- Ivor Bulmer-Thomas. "Menelaus of Alexandria." Dictionary of Scientific Biography 9:296-302.
- Pedro Pablo Fuentes González, “Ménélaos d’Alexandrie”, in R. Goulet (ed.), Dictionnaire des Philosophes Antiques, vol. IV, Paris, CNRS, 2005, p. 456-464.
- Roshdi Rashed and Athanase Papadopoulos, Menelaus' Spherics. Early Translation and al-Māhānī / al-Harawī's Version. De Gruyter, Scientia Graeco-Arabica 21. xiv, 874 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-056987-2
வெளியிணைப்புகள்
[தொகு]- O'Connor, John J.; Robertson, Edmund F., "Menelaus of Alexandria", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Halley's Latin Translation from the Arabic and Hebrew Versions (three books) கூகுள் புத்தகங்களில்