அலாஸ்கா முயல்
அலாஸ்கா முயல் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Kingdom: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
Class: | பாலூட்டி |
Order: | லகோமோர்பா |
Family: | லெபோரிடே |
Genus: | முயல் |
இனம்: | L. othus |
இருசொற் பெயரீடு | |
Lepus othus மெரியம், 1900 | |
![]() |

அலாஸ்கா முயல் (Lepus othus) அல்லது தூந்திர முயல் என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும்.[2] இவை வளைகளை தோண்டுவது இல்லை. மாறாக மேற்கு அலாஸ்கா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் வெட்டவெளி தூந்திரப்பகுதியில் காணப்படுகின்றன. இவை எட்டு குட்டிகள் வரை போடக் கூடியவை. கொன்றுண்ணிப் பறவைகள் மற்றும் பனிக்கரடிகள் இவற்றை உணவாக உட்கொள்கின்றன. இவை வேட்டை விளையாட்டுகளிலும் மனிதர்களால் கொல்லப்படுகின்றன.
விளக்கம்[தொகு]
அலாஸ்கா முயலானது முயல் இனங்களிலேயே ஒரு மிகப்பெரிய உயிரினம் ஆகும்.[3] இம்முயலானது சில நேரங்களில் தூந்திர முயல் என்று அழைக்கப்படுகிறது.[4] ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு முயல் இனங்களில் இதுவும் ஒன்றாகும். மற்றொரு முயல் இனம் மிகப் பொதுவாகக் காணப்படுகிற பனிக்காலணி முயல் ஆகும்.[4] ஆண் மற்றும் பெண் முயல்கள் பொதுவாக 50 முதல் 70 சென்டி மீட்டர் நீளம் இருக்கும். இந்த நீளத்துடன் வாலின் நீளம் சுமார் 8 சென்டி மீட்டரும் இருக்கும். இவற்றின் பின்னங்கால்களின் நீளமானது 20 சென்டி மீட்டர் ஆகும். இதன் காரணமாகவே பனிபடர்ந்த சூழ்நிலைகளில் இம்முயல் எளிதாக இடம்பெயர்வதாக கருதப்படுகிறது. இம்முயல்கள் கொன்றுண்ணிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பாக தமது கால்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த உயிரினம் 2.9 முதல் 7.2 கிலோ வரை எடை இருக்கும். சராசரியாக 4.8 கிலோ கிராம் எடை இருக்கும். இதன் காரணமாக லகோமோர்பா உயிரினங்களிலேயே இதுவும் ஒரு பெரிய உயிரினம் ஆகும். மற்ற பெரிய உயிரினங்கள் ஐரோப்பிய முயல் மற்றும் ஆர்க்டிக் முயல் ஆகும்.[5] மற்ற முயல்களுடன் ஒப்பிடும்போது அலாஸ்கா முயலின் காதுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறியதாகும்.[3] குளிர்கால மாதங்களில் உடல் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இவற்றின் காதுகள் குட்டையாக பரிணாமம் அடைந்து உள்ளன. வெப்பநிலையைப் பராமரிப்பதில் முயலின் காதுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அலாஸ்கா முயலின் காதுகள் சிறியதாக இருப்பதால் குளிர்ந்த காலநிலைகளில் வெப்ப இழப்பு தடுக்கப்படுகிறது. கோடை காலத்தில் அலாஸ்கா முயல்கள் பழுப்பு ரோமத்துடன் இருக்கும். உடலின் கீழ்ப்பகுதியில் வெள்ளை நிறத்தை கொண்டிருக்கும். குளிர் காலத்தில் இவை வெள்ளை ரோமத்துடன் கருப்பு நிறத்தில் நனைந்த காதுகளுடன் காணப்படும்.[3] மேலும் இவை கோடைகால மேல் ரோமமான சாம்பல் பழுப்பு நிறத்தை உதிர்த்து குளிர்காலத்தில் முழுவதும் வெண்மை நிறத்திற்கு மாறுகின்றன.[5]
அலாஸ்கா முயல்கள் பொதுவாக தனித்தே காணப்படும்.[5] இவை சாதாரணமாக ஒரு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி ஈனும். ஒருமுறைக்கு 4 முதல் 8 குட்டிகள் வரை ஈனும். குட்டி முயல்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பிறக்கின்றன. பிறந்த சிறிது நேரத்திற்குள்ளேயே குட்டிகள் இடம்பெயர கூடியவையாக உள்ளன. குட்டிகள் பிறக்கும்போது உடல் முழுவதும் ரோமத்துடன் மற்றும் திறந்த கண்களுடன் பிறக்கின்றன. [5] இம்முயல்கள் டுலரேமியா எனும் பாக்டீரியா நோயை தரக்கூடியவையாகும். இந்நோய் மற்ற வளர்ப்பு பிராணிகள் மற்றும் மனிதர்களுக்கு பரவக்கூடியது. இந்நோய் தொற்று காயங்கள், மூட்டுகளில் வீக்கம் மற்றும் காய்ச்சல் அல்லது ஃப்ளூ காய்ச்சல் வந்தது போன்ற அறிகுறிகள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது [3]
வகைப்படுத்தல்[தொகு]
இம்முயலின் நெருங்கிய உறவினர்கள் வடக்கு கனடா மற்றும் கிரீன்லாந்தின் ஆர்க்டிக் முயல் மற்றும் வடக்கு ஐரோப்பா மற்றும் ஐரோவாசியாவின் மலை முயல் ஆகியவை ஆகும்.[2] இதில் மலை முயலிடமிருந்து புவியியல் ரீதியாக அலாஸ்கா முயல் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
வாழ்விடம் மற்றும் உணவு பழக்கவழக்கம்[தொகு]
இவை வளைகளில் வாழ்வது இல்லை மாறாக வெட்டவெளிகளில் கூடு கட்டுகின்றன. இவை பெரும்பாலும் உயர்நில தூந்திர அல்லது பாறை பகுதிகளில் காணப்படுகின்றன. ஏனெனில் கொன்றுண்ணிகளிடமிருந்து பாதுகாப்பு மற்றும் உருமறைப்பை அப்பகுதிகள் இவற்றிற்கு கொடுக்கின்றன.[5] இவை வாழும் பகுதிகள் அலாஸ்கா தீபகற்பம் உட்பட மேற்கு மற்றும் தென்மேற்கு அலாஸ்கா ஆகும்.[1][4] இவை தாவர உண்ணிகள் ஆகும். இவை பல்வேறு தாவரங்கள் மற்றும் பழங்களை உண்கின்றன. அதிகாலை மற்றும் அந்தி மாலையில் இவை பொதுவாக உணவு தேடுகின்றன.[5] அலாஸ்கா முயல்கள் கோடைகாலத்தில் பசுமையான தாவரங்களையும் மற்றும் குளிர் காலத்தில் கிளைகள் மற்றும் பட்டைகளையும் உணவாக உட்கொள்கின்றன.[3] நரிகள், பனிக்கரடிகள் மற்றும் கொன்றுண்ணிப் பறவைகள் ஆகியவை இவற்றை வேட்டையாடுகின்றன.[5] இவை பொதுவாக மனிதர்களால் உணவிற்காக வேட்டையாடப்படுவது இல்லை. ஆனால் அவற்றின் ரோமத்திற்காகவும் மற்றும் வேட்டை விளையாட்டுகளுக்காகவும் இவை பொறி வைத்து பிடிக்கப்படுகின்றன.[5] பெரும்பாலும் இவை பொறிவைத்து பிடிக்கப்படுவது அவற்றின் ரோமத்திற்காகவே ஆகும். இவற்றின் மாமிசத்திற்காக அல்ல. இவற்றின் ரோமமானது அலாஸ்காவில் காலணிகள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படுகிறது.[3]
உசாாத்துணை[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Murray, D.; Smith, A.T. (2008). "Lepus othus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T11795A3308465. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T11795A3308465.en. http://www.iucnredlist.org/details/11795/0. பார்த்த நாள்: 27 December 2017.
- ↑ 2.0 2.1 Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=13500201.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 dfg.webmaster@alaska.gov. "Alaska Hare Species Profile, Alaska Department of Fish and Game". http://www.adfg.alaska.gov/index.cfm?adfg=alaskahare.main.
- ↑ 4.0 4.1 4.2 Earnest, Jeanette R. (1989). "Hares" (PDF). Alaska Department of Fish & Game. http://www.adfg.alaska.gov/static/education/wns/hares.pdf. பார்த்த நாள்: 1 March 2013.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 DeBruine, Lisa. "Lepus othus Alaskan hare". Animal Diversity Web. http://animaldiversity.ummz.umich.edu/accounts/Lepus_othus/. பார்த்த நாள்: 1 March 2013.