அறை (இடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீடொன்றில் உள்ள வரவேற்பு அறையின் ஒரு பகுதி

அறை (About this soundஒலிப்பு ) என்பது, கட்டிடங்கள் அல்லது அது போன்ற வேறு அமைப்புக்களில் சுவர்களால் பிரித்து வேறாக்கப்பட்டுள்ள ஒரு இடம் ஆகும். இவ்வாறான இடப் பிரிவுகளின் அளவு, தன்மை பயன்பாடு என்பவை வேறுபாட்டு இருந்தாலும் எல்லாவற்றையும் அறை என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடலாம். எல்லாவகையான கட்டிடங்களிலும் அறைகள் உள்ளன. பெரும்பாலான கட்டிடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகள் இருக்கும். பெரிய கட்டிடங்களில் அறைகள் நூற்றுக்கணக்கிலும் இருக்கக்கூடும். சில கட்டிடங்களில் உட்பிரிவுகள் இல்லாவிட்டால் முழுக்கட்டிடமுமே ஒரு அறையாகும். சிறிய குடிசை வீடுகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மேற்கூறியவாறான இடப்பிரிவுகளின் அளவு மிகவும் பெரிதாக இருந்தால் அவற்றைக் கூடம், மண்டபம் போன்ற பெயர்களால் குறிப்பிடுவது வழக்கம்.

வகைகள்[தொகு]

சப்பானிலுள்ள இளைஞர் விடுதி அறை ஒன்று.

அறைகள் அவற்றில் பயன்பாட்டைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வீடுகளில், படுப்பதற்குப் பயன்படும் அறை, படுக்கையறை என்றும், சமைப்பதற்குப் பயன்படும் அறை சமையலறை என்றும், உணவு உண்பதற்குப் பயன்படும் அறை சாப்பாட்டறை என்றும் அழைக்கப்படுகின்றன.


எல்லா அறைகளிலும் அடிப்படைக் கூறுகளாக தரை, சுவர்கள், கூரை என்பன காணப்படும். அரைகளின் பயன்பாடு, தேவை, முக்கியத்துவம் என்பவற்றைப் பொறுத்து அறைகளில் சாளரங்கள், உட்கூரைகள் போன்ற கூடுதல் அம்சங்களும் இருப்பதுண்டு. மனிதர்கள் வாழ்வதற்கும், இருந்து வேலைகளைச் செய்வதற்கும் பயன்படும் அறைகள் நல்ல காற்றோட்டம், போதிய வெளிச்சம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் இத்தகைய அறைகளில் சாளரங்கள் அமைக்கப்படும். பொருட்களைக் களஞ்சியப் படுத்துவதற்கான அறைகள் போன்றவற்றுக்கு சாளரங்கள் அவசியம் இல்லை.


கட்டிட விதிகள்[தொகு]

சாப்பாட்டு அறையின் ஒரு பகுதி

கட்டிட அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் விதிமுறைகள் மக்களின் பொதுவான நன்மைகருதி, அறைகளுக்கான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுக்கான ஆகக்குறைந்த அளவுகள் எவ்வளவு இருக்கவேண்டும் என விதிப்பது உண்டு. இந்த அளவுகளும், அறைகளின் பயன்பாட்டுக்கேற்ப வேறுபடும். பொதுவாக வீடுகள் தொடர்பான இவ்வாறான விதிகள் படுக்கையறை, சமையலறை போன்றவற்றின் அளவுகளில் கூடிய கவனம் செலுத்துகின்றன. பிற கட்டிட வகைகள் தொடர்பிலும் அறைகளின் அளவுகளுக்கான சிறப்புத்தேவைகள் இருக்கும்.


பன்னாட்டுக் கட்டிட விதிக்கோவை, சமையலறை தவிர்ந்த ஏனைய மனிதர் வாழக்கூடிய அறைகளின் அகலம் 7 அடிகளுக்குக் (2134 மிமீ) குறைவாக இருக்கக்கூடாது என விதித்துள்ளது[1]. அத்துடன் இவ்விதிகளின்படி இவ்வாறான அறைகளில் தரையில் இருந்து உட்கூரையின் உயரமும் 7 அடிக்குக் (2134 மிமீ) குறைவாக இருக்கக்கூடாது. வீடுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அறையாவது 120 சதுர அடிகளுக்குக் (13.9 சதுர மீட்டர்) குறையாத பரப்பளவு கொண்டதாக இருக்கவேண்டும் என்பதும், மனிதர் வாழக்கூடிய ஏனைய அறைகள் 70 சதுர அடிகளுக்குக் (6.5 சதுர மீட்டர்) குறைவாக இருக்கக்கூடாது என்பதும் பன்னாட்டுக் கட்டிட விதிக்கோவையின் ஆலோசனைகளில் அடங்குகின்றன[2].


மனிதர்கள் வாழ்வதற்கும், நீண்டநேரம் இருந்து பணிபுரிவதற்குமான அறைகளுக்குத் தேவையான சாளரங்களின் அளவுகள் தொடர்பாகவும் கடைப்பிடிக்கவேண்டிய விதி முறைகள் உள்ளன. பொதுவாக ஒரு அறையின் பரப்பளவின் குறிப்பிட்ட பங்கு அல்லது நூற்றுவீத அளவுக்குச் சமமான பரப்பளவு கொண்ட சாளரங்கள் அமைக்கப்படவேண்டும் என விதிக்கப்படுவது உண்டு.

பிற நடைமுறைகள்[தொகு]

மருத்துவமனை ஒன்றிலுள்ள நோயாளியின் அறை

கட்டிட விதிமுறைகளுக்குப் புறம்பாக, பொதுவான வடிவமைப்பு நடைமுறைகளில் சில அறைகளிலிருந்து வெளியிலுள்ள காட்சிகளைப் பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்படுவது விரும்பப்படுகிறது. இவ்வறைகளில் பெரிய அளவான சாளரங்களை அமைத்து இத்தேவையை நிறைவு செய்கின்றனர். சில அறைகள் கூடிய தரத்தையும், அழகையும் தரக்கூடிய கட்டிடப் பொருள்களைப் பயன்படுத்தி முடிப்புச் செய்யப்படுகின்றன. முக்கியத்துவம் குறைந்த அறைகளில், சீமெந்துப் பூச்சே முடிப்பாக அமைவது உண்டு. சில சமயங்களில் இது நிறமூட்டப்பட்டிருக்கும். முக்குயமான அறைகளில், விலையுயர்ந்த முடிப்புக்களைப் பயன்படுத்துவர். வெண்களி ஓடுகள்; கருங்கல், சலவைக்கல் போன்றவற்றிலாலான ஓடுகள்; கம்பளத் தரைவிரிப்புக்கள், மரப் பலகைகள், ஓடுகள் என்பன போன்ற பலவகையான முடிப்புக்கள் உள்ளன. இது போல நிறப்பூச்சுக்கள், வெண்களி ஓடுகள், சுவர்த் தாள்கள், மரப் படல்கள் போன்ற ஏராளமான முடிப்புக்களுடன் அறைகள் உள்ளன.


அழகு மட்டும் அறைகளுக்கான முடிப்புக்களை முடிவு செய்வதற்கான காரணியாக அமைவதில்லை. செலவு, நீடித்துழைக்கும் தன்மை, இலகுவாகத் தூய்மை பேணக்கூடிய தன்மை; உடற்பயிற்சி, விளையாட்டு, நடனம் போன்ற செயற்பாடுகளுக்கு தரைகள் சற்று மீள்தன்மையுடன் கூடியவைக்யாக இருக்கவேண்டிய தேவை; குளிரான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கும் போது தரை வெதுவெதுப்பாக இருக்கவேண்டியமை போன்ற பலவும் அறைகளுக்கான முடிப்புக்களைத் தெரிவு செய்வதில் கவனிக்கப்படுகின்றன.


அறைகளின் அமைவிடம்[தொகு]

வீடொன்றில் இருக்கக்கூடிய முக்கிய அறைகளுக்கு இடையிலான செயற்பாட்டுத் தொடர்புகளைக் காட்டும் வரைபடம்

ஒரு கட்டிடத்தில் அறைகளின் அமைவிடங்கள் தற்செயலாகவோ அல்லது எழுந்தமானமாகவோ அமைவதில்லை. பல காரணிகளால் அறைகள் குறிப்பிட்ட இடங்களில் அமைகின்றன. முன்னர் எடுத்துக்காட்டியவாறு சாளரங்களின் தேவை இருக்கும்போது அறைகள் வெளிச் சுவர்களை அண்டி அமைந்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. உள்ளேயிருந்தபடி வெளிக் காட்சிகளைப் பார்க்கக்கூடிய வசதிகள் வேண்டும்போது வெளியே நல்ல காட்சிகள் இருக்கக்கூடிய கட்டிடத்தின் பகுதிகளில் அறைகள் அமைக்கப்படுகின்றன.


அறைகளுக்குள் நிகழும் செயற்பாடுகள் எப்போதும் அவ்வறைகளோடு மட்டும் தொடர்புடையவையாக இருப்பதில்லை. இச் செயற்பாடுகள் பிற அறைகளின் செயற்பாடுகளோடு தொடர்புகளையும் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சமையலறையில் நிகழும் சமைத்தல் செயற்பாடு சாப்பாட்டு அறையின் உணவு அருந்தும் செயற்பாட்டோடு தொடர்புடையது. இலகுவாக உணவுகளைக் கொண்டுவந்து பரிமாறும் வசதிகளுக்காக இவ்வறைகள் அருகருகே இருப்பது வசதியாக இருக்கும். இவ்வாறான தேவைகளும் பிற அறைகள் தொடர்பில் அறைகளின் அமைவிடம் அமைவதற்குக் காரணமாக உள்ளன.


செயற்பாட்டுத் தொடர்புகளுக்கு அமைய ஒரு வீட்டில் அறைகள் அமைந்திருக்கும் விதத்தைக் காட்டும் கிடைப்படம்

சமூக, பண்பாட்டுத் தேவைகளும் அறைகளின் இட அமைவில் தாக்கம் கொண்டுள்ளன. பொதுப் பகுதி, ஓரளவு பொதுத் தன்மை கொண்ட பகுதி, தனிப்பட்ட பகுதி போன்ற வேறுபாடுகளும் அறைகளின் அமைவிடத் தன்மைக்குக் காரணமாகின்றன. பொதுவாக வீடுகளிலும், பிறவகைக் கட்டிடங்களிலும் வெளியாரை வரவேற்கும் அறைகள் வாயிலை அண்டி அமைவதையும், வெளியாரோடு தொடர்பற்ற பகுதிகள் வாயிலோடு நேரடித் தொடர்பின்றி அமைவதையும் காணமுடியும். சில பண்பாடுகளில் வீடுகளிலும், பிற பொதுக் கட்டிடங்களிலும்கூட ஆண்கள் பெண்களுக்கான அறைகளின் அமைவிடங்களில் சில வேறுபாடுகள் இருப்பதைக் காண முடியும். எடுத்துக்காட்டாகப் பெண்களுக்கான பகுதிகள் ஆண்களுடையவற்றைக் காட்டிலும் கூடிய அளவுக்குப் பொதுப் பகுதிகளிலிருந்து விலகி அமைந்திருப்பது உண்டு.


இந்தவகையில், மரபு வழியான நம்பிக்கைகளின் தாக்கமும் அறைகளின் இட அமைவில் இருப்பதுண்டு. சோதிடம், மரபுவழிச் சிற்பநூல்கள் போன்றவற்றில் அறைகளின் அமைவிடங்களுக்கான விதிகள் உள்ளன. இவையும் ஒரு கட்டிடத்தில் அறையொன்றின் அமைவிடத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைவது உண்டு.

குறிப்புக்கள்[தொகு]

  1. பன்னாட்டுக் கட்டிட விதிக்கோவை, 2003. 1208.1, 1208.2 பக். 241
  2. பன்னாட்டுக் கட்டிட விதிக்கோவை, 2003. 1208.3 பக். 241

உசாத்துணைகள்[தொகு]

  • பன்னாட்டுக் கட்டிட விதிக்கோவை, பன்னாட்டு விதிக்கோவை அவை Inc., ஐக்கிய அமெரிக்கா. 2003
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறை_(இடம்)&oldid=2538950" இருந்து மீள்விக்கப்பட்டது