அறிவியலில் உள்ள பெண்களின் சங்கம்
அறிவியலில் உள்ள பெண்களின் சங்கம் (Association for women in Science -AWIS) 1971-ஆம் ஆண்டு அமெரிக்கச் சோதனைசார் உயிரியல் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தின் போது உருவாக்கப்பட்டது. அறிவியல் துறையில் உள்ள பாலினப் பாகுபாடு, ஊதிய வித்தியாசம், மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற பிரச்சனைகளை எதிர்த்து போராட இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பு நியாயமான ஊதியம், தொழில்முறை மேம்பாடு, வேலை-வாழ்க்கை சமநிலை போன்ற விடயங்களுக்குப் போராடுகிறது.[1][2]
வரலாறு
[தொகு]1971-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கச் சோதனைசார் உயிரியல் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தின் போது, அவ்வமைப்பில் இருந்த பெண்கள் ஒன்றுகூடி இந்த புதிய சங்கத்தை உருவாக்கினார்கள். சங்கத்தின் அலுவலகம் வாசிங்டன், டி.சி நகரில் நிறுவப்பட்டு, சங்கத்திற்கு நிர்வாக இயக்குனரும் நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் கிளைகள் தொடங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. நீனா சுவர்ட்ஸ் மற்றும் சூடித் பூல் இச்சங்கத்தின் நிறுவனத் தலைவர்கள் ஆனார்கள்.[3][4]
இச்சங்கத்தின் முதல் பணியாக, தேசிய நல கழகத்தின் மானிய மதிப்பீட்டுக் குழுவில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவத்தை எதிர்த்து, மற்ற பெண்களுக்கான அமைப்புகளோடு சேர்ந்து இக்கழகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். பின்னர், இக்கழகத்தின் தலைவர் ராபர்ட் மார்ஸ்டனோடு இச்சங்கங்களில் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், வழக்கு கைவிடப்பட்டது.[5] நன்கொடைகளைப் பெற்று கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக அறிவியலில் உள்ள பெண்களின் சங்க கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 1997-இல் குடியரசுத் தலைவரின் அறிவியல் வழிகாட்டுதலுக்கான விருது பெற்றது.[6]
நிர்வாகிகள் மற்றும் அமைப்பு
[தொகு]தற்போதைய வாரியத் தலைவராக நீலிமா ராவ்-உம்,[7] தலைமை செயல் அதிகாரியாக மெரிடித் கிப்சன்-உம் உள்ளனர்[8]
அறிவியல்,தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் உள்ள 74 லட்சம் பெண்களின் பிரதிநிதிகளாக இந்த அமைப்ப்பின் உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள். இச்சங்கத்தில் அத்துறைகளில் பணிபுரியும் பெண்களும், மாணவர்களும் உள்ளனர் .
இச்சங்கத்திற்கு அமெரிக்கா முழுவதும் 49 கிளைகள் உள்ளன. இக்கிளைகள் மூலம், உள்ளூர் அளவில் பெண்களுக்கு வழிகாட்டுதல், விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
செயல்பாடுகள்
[தொகு]செய்தி மற்றும் ஊடகங்களில் பொது விழிப்புணர்வு, வழிகாட்டுதல் திட்டங்கள் (Mentorship), கல்வி உதவித்தொகை மற்றும் விருதுகள் வழங்குதல் போன்ற பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. அறிவியல் திட்டங்கள் மற்றும் பெண்கள் சார்ந்த விடயங்களைக் குறித்து காலாண்டு இதழும் வெளியிடுகிறார்கள். [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AWIS History Association for Women in Science". AWIS (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-07-08.
- ↑ "Celebrating 40 years of empowerment in science". US department of energy research news. 20 September 2018. Retrieved 20 September 2018.
- ↑ Hampton, Kathleen (10 August 1971). "Women Scientists Probing Discrimination in Their Field". Ann Arbor News. http://oldnews.aadl.org/node/89833. பார்த்த நாள்: 5 June 2015.
- ↑ Rossiter, Margaret (2012). Women Scientists in America; Forging a New World since 1972. Baltimore: Johns Hopkins University Press. ISBN 9781421403632.
- ↑ Schwartz, Neena. Interview with Michael Chappelle. An oral history conducted in 2008. 2008.
- ↑ "Association for Women in Science, Inc. Mentoring Project". PAESMEM.
- ↑ "AWIS Governance Association for Women in Science". AWIS (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-07-08.
- ↑ "AWIS Staff Association for Women in Science". AWIS (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-07-08.
- ↑ "Read the AWIS Magazine for the Latest on Women in STEM". AWIS (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-07-08.