அறிவானந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெ. அறிவானந்தன் (பிப்ரவரி 17, 1938 - திசம்பர் 17, 2000) மலேசியத் தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி வழியை வகுத்துக் கொண்டு பல இலக்கியப் படைப்புகளை எழுதி வந்தவர். இவரது படைப்புகள் சிறுகதை, நாவல், வரலாற்று நாவல், நாடகம், நடிப்பு என்று பல கோணங்களில் விரிந்திருந்தன. இவர் வரலாற்று உண்மைகளைத் தேடி 20 வருடங்கள் பெரும்பயணம் செய்தவர். ஆயிரக்கணக்கான வரலாற்று நூல்களைத் திரட்டி, அரிய தகவல்களைப் பொறுக்கியெடுத்து தனது படைப்புகளில் இணைத்தவர்.

எழுத்துலக வாழ்வு[தொகு]

1952 இல் தாய் உள்ளம் என்ற சிறுகதையை தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் எழுதியதன் வழி எழுத்துலகில் புகுந்தவர். 1956 வரை மாணவர்களுக்காக எழுதினார். 1957 இல் இவரது முதல் நாவலான மல்லிகா நூல் வடிவம் கண்டது. அதன் பின் 1965 இல் நெஞ்சைத் தொடாதே என்ற நாவலை எழுதினார். புதுமை முயற்சியாக இவர் எழுதிய மணி மண்டபம் என்ற உருவகக் கதை மலேசியத் தமிழ் எழுத்துலகுக்கே ஒரு புது முயற்சியாக அமைந்திருந்தது. புதுடில்லியில் 1979 இல் நடைபெற்ற ஆஃப்ரோ-ஆசிய எழுத்தாளர் கருத்தரங்கில், மலேசியப் பிரதிநிதியாக் கலந்து கொண்ட இவர் தற்கால மலேசிய இலக்கியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதே கருத்தரங்கில், வியட்நாம் அகதிகளைப் பின்னணியாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதி இவர் சமர்ப்பித்த த போஃட் பீப்பள் என்ற சிறுகதை பாராட்டைப் பெற்றது. இவரது யாகபூமி நாவல் மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் 50 வார வரலாற்றுத் தொடராக வெளிவந்து வரலாற்று முத்திரை பதித்தது.

நாடக உலக வாழ்வு[தொகு]

இவர் எழுதிய கூட்டுக்கு வெளியே என்ற இலக்கிய நாடகம் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது. வானொலி நாடகங்கள் எழுதுவதில் பல புதுமைகளைக் கையாண்ட இவர் மலேசிய வானொலிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களையும், மர்மத் தொடர் நாடகங்களையும் எழுதியுள்ளார். மலேசியத் தொலக்காட்சிகளுக்கும் நாடகங்களை எழுதி, தானும் பங்கேற்று நடித்துள்ளார். மேடை நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார். இணைந்த கரங்கள் என்ற மலேசிய மேடை நாடகத்தின் கதை, உரையாடல், பாடல்களை எழுதி, அதில் வில்லன் பாகமேற்று நடித்ததன் வழி, இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நாடக நடிகன் என்பதையும் நிரூபித்தார். 1975 இல் மலாயா பல்கலைக்கழக ஆய்வரங்கில் அரங்கேறிய ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார் என்ற இவரது புதுமை நாடகம், மலேசிய நாடக வரவாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.

எழுதிய வானொலி நாடகங்களில் சில[தொகு]

 • வாழ்க்கைப் புயல் (மர்மத் தொடர் நாடகம்)
 • மர்மவலை (மர்மத் தொடர் நாடகம்)
 • சொக்கத் தீவு (மர்மத் தொடர் நாடகம்)
 • பைரவன் தீவு (மர்மத் தொடர் நாடகம்)

எழுதிய தொலைக்காட்சி நாடகங்களில் சில[தொகு]

 • இன்ஸ்பெக்டர் சேகர்
 • குறள்வழி

எழுதிய மேடை நாடகங்களில் சில[தொகு]

 • இணைந்த கரங்கள்

வெளிவந்த நூல்கள்[தொகு]

 • மல்லிகா (நாவல்) ´
 • நெஞ்சைத் தொடாதே (நாவல்)
 • சங்கமம் (குறுநாவல்)
 • யாக பூமி (வரலாற்று நாவல்)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவானந்தன்&oldid=866246" இருந்து மீள்விக்கப்பட்டது