உள்ளடக்கத்துக்குச் செல்

அறவியல் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறவியல் திறனாய்வு (Moralistic Criticism) என்பது, அறவியல் அடிப்படையில் இலக்கியங்களை மதிப்பிடுவதற்கும், அவ்விலக்கியங்களை அறவியல் எவ்வாறு வழிநடத்திச் செல்கிறது என்பதைக் காண்பதற்கும், இவ்விலக்கியங்களில் சொல்லப்படும் அறவியலின் பண்புகளையும் ஆற்றல்களையும் அறிந்து கொள்வதற்குமான திறனாய்வு ஆகும்.[1] பொதுவாக, அறவியல் திறனாய்வு, இலக்கியம் என்பது அறநெறியைப் போதிப்பதற்கே என்னும் கருத்தை முன்னிலைப்படுத்துகிறது. இவ்வாறான அறவியல் அணுகுமுறை உலகின் பல பாகங்களிலும் மிகப் பழைய காலத்தில் இருந்தே வழக்கில் இருந்துள்ளது. எனினும் கைக்கொள்ளப்பட வேண்டிய அறநெறிகள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கிடமும் மாறுபட்டே வந்துள்ளன.

அறவியல், இலக்கியத்தை அறநெறி சார்ந்த விளைவுகளில் இருந்து தனிமைப்பட்ட ஒரு "கலை"யாக ஏற்றுக்கொள்வது இல்லை. இலக்கியம் வாசகர்களை மறைமுகமாகவோ நேரடியாகவோ பாதிக்கிறது என்பதால், படைப்பு என்ன சொல்கிறது என்பதே முக்கியமேயன்றி அதைச் சொல்லுகின்ற விதம் அல்ல என்பது அறவியல் திறனாய்வு முறையின் கருத்து.

எனினும், இந்த அணுகுமுறையை எதிர்ப்பவர்கள், இது இலக்கியங்களை மதிப்பிடுவதற்கான சரியான முறை அல்ல என்றும், இலக்கியங்கள் அவற்றின் கலைப் பண்பின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டுமேயன்றி அவற்றின் அறவியல் அல்லது மெய்யியல் உள்ளடக்கங்களின் அடிப்படையில் அல்ல என்றும் கூறுகின்றனர்.

மேல் நாட்டில் அறவியலும் இலக்கியமும்

[தொகு]

மேல்நாட்டில் இலக்கியங்களை அறவியல் முறையில் அணுகும் போக்கு கிமு 300 காலப்பகுதியிலேயே தொடங்கிவிட்டது. பிளேட்டோ தனது ரிப்பப்ளிக் என்னும் நூலில், "ஒரு இலட்சிய கிரேக்கக் குடியரசில் இலக்கியம் மட்டுப்படுத்தப்பட்டதும் கட்டுப்பாடானதுமான பங்களிப்பைக் கொண்டிருக்க வேண்டும்" என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். அக்காலத்து நிலையை ரிச்சர் ....புலவர்கள் இறைபக்தியையும், ஒழுக்கத்தையும் போதிப்பவர்களாக இருந்தால் அரசின் சேவகர்களாக இருக்கலாம். ஆனால், கலையினால் கிடைக்கும் இன்பம் குடிமக்களைக் கெடுப்பதால் அது கண்டிக்கப்பட்டது. .... என்று விளக்கியுள்ளார். பிளேட்டோவின் மாணவரான அரிசுட்டாட்டில், தனது ஆசிரியரின் கருத்துடன் உடன்படவில்லை.[2]

பிற்காலத்தில் புதிய திறனாய்வு செல்வாக்குப் பெற்றபோது அறவியல் அணுகுமுறை செல்வாக்கு இழந்தது. எனினும், இதன் கூறுகள் தற்காலத்திலும் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன. குறிப்பாகச் சிறுவர் இலக்கியங்களில் இன்றும் அறவியல் அணுகுமுறையைக் காண முடியும். தவிரவும், சமூகவியத் திறனாய்வு, மார்க்சியத் திறனாய்வு போன்ற பிற்காலத் திறனாய்வு முறைகள் அறவியல் திறனாய்வின் தன்மைகளைக் கொண்டனவே என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும், பின்னர் குறிப்பிட்ட திறனாய்வு முறைகளின் நெறிமுறைகள் அடிப்படையில் வேறுபட்டனவாகும்.

தமிழ் இலக்கியமும் அறவியலும்

[தொகு]

சங்ககாலம் தொட்டுத் தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் அறநெறிப் பார்வைக்கு நிறைய இடம் உண்டு. அகத்திணை இலக்கியங்கள் அறநெறிகள் அக்கால வாழ்வின் அடிப்படைகளாக விளங்கியதைக் காட்டுகின்றன. இது போன்றே திருக்குறள் போன்ற பல நீதி இலக்கியங்கள் அறநெறிகளைப் போதிப்பதற்காக எழுந்தவையே. சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களும் பல்வேறு அறநெறிக் கருத்துக்களை முன்வைக்கின்றன. இத்தகைய இலக்கியங்களுக்காகப் பின்னாளில் எழுந்த உரைகள் பலவும் அறநெறிப் பார்வையோடு கூடியனவாக உள்ளதைக் காணலாம். தமிழில் எழுந்த தொடக்ககாலப் புதினங்களும், பாரதியார் உள்ளிட்ட பல கவிஞர்களின் ஆக்கங்களும் அறநெறிக் கருத்துக்களுடன் கூடியவையே. இவையனைத்தும் அறவியல் அடிப்படையிலான திறனாய்வுக்கு வாய்ப்பு அளிப்பனவாக உள்ளன.

குறிப்புக்கள்

[தொகு]
  1. நடராசன், தி. சு., 2009. பக். 165.
  2. Moral Criticism and Dramatic Construction (~360 BC-present)

உசாத்துணைகள்

[தொகு]
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).
  • OWL Purdue Online Writing Lab

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறவியல்_திறனாய்வு&oldid=1567563" இலிருந்து மீள்விக்கப்பட்டது