அரையுயிர்க் குற்றியலுகரம்
குற்றியலுகரம் என்பது வல்லின உகர எழுத்துக்களில் முடியும் ஆறு வகையான சொற்கள். இவை அனைத்தும் மொழியிறுதிக் குற்றியலுகரங்கள். தொல்காப்பியர் மொழிமுதல் குற்றியலுகரம் என 'நுந்தை' என்னும் முறைப்பெயரைக் குறிக்கிடுகிறார். இவற்றுடன் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரையில் தமிழில் புழக்கத்தில் உள்ள குற்றியலுகரம் இந்த அரையுயிர்க் குற்றியலுகரம்.
மெய்யெழுத்துக்களில் வ, ய ஆகிய இரண்டையும் இக்கால மொழியியலாளர்கள் அரையுயிர் எனக் குறிப்பிடுகின்றனர். இலக்கண நூல்கள் இவற்றை உடம்படுமெய் எனக் காட்டுகின்றன. உயிர் முன் உயிர் வந்து புணரும்பொது உடம்படுமெய் தோன்றும்.
வெண்பா யாப்பானது நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடு கொண்டு முடியும். திருக்குறளில் 10 படல்கள் அறிவு என்னும் சொல்லைக்கொண்டு முடிகின்றன. [1] இப்படிப் பார்க்கும்போது அறிவு என்னும் சொல் பிறப்பு என்னும் வாய்பாடுதானே? பிறப்பு என்பது குற்றியலுகரம் அல்லவா?
கதவைத் திற என்கிறோம். இதில் கதவு + ஐ = கதவை எனக் குற்றியலுகரம் போலப் புணர்ந்துள்ளதைக் காண்கிறோம். அறிவற்றம் காக்கும் கருவி திருக்குறள் 421 என்னும்போது அறிவு என்னும் சொல் குற்றியலுகரம் புணர்வது போலப் [2] புணர்ந்துள்ளது அல்லவா? இந்தகைய நிலை 'வு' எழுத்துக்கு எதனால் நேர்ந்தது? அரையுயிர் என்பதனால் நேர்ந்தது.