அரும்பொருள் விளக்க நிகண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரும்பொருள் விளக்க நிகண்டு [1] என்னும் நூல் தமிழ்ச்சொற்களின் பொருள்வளம் காட்டும் நிகண்டு நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் அருமருந்தைய தேசிகர். இவர் திருச்செந்தூரில் வாழ்ந்தவர்.

நூலின் அமைதி[தொகு]

இது தமிழ்ச் சொற்களை எதுகை-நெறியில் அடுக்கிக்கொண்டு பொருளை விளக்கிக் காட்டுகிறது. விளக்கம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பா நடையில் உள்ளது. இதில் 19 பிரிவுகள் உள்ளன. ஒன்பது பாடல்களைக் கொண்ட பாயிரம் ஒரு பகுதி. பின்னர் 18 மெய்யெழுத்துக்களுக்கும் 18 பகுதி. ஆக மொத்தம் 19 பகுதி. மேலும் அனுபந்தம் 1, 2, 3, பிழைதிருத்தம் என்னும் நான்கு பகுதிகளும் இதில் உள்ளன.

இதன் பதிப்பாசிரியர் சு வையாபுரிப்பிள்ளை இதற்கு 30 பக்க அளவில் நீண்ட முன்னுரை ஒன்று எழுதியுள்ளார். இந்த முன்னுரையில் தரப்பட்டுள்ள செய்திகளில் சில:

சு. வையாபுரிப்பிள்ளை முன்னுரை தரும் செய்திகள்[தொகு]

நிகண்டு இருவகைப்படும்

  1. பொருட்பெயர்த் தொகுதி – இதில் ஒரு சொல் விளக்கும் பல பொருள் குறிப்பிடப்பட்டிருக்கும். பல்பொருள் கூட்டத் தொகுதி – இதில் இருசுடர், முக்குணம் போன்ற தொகைக் குறியீடுகளுக்கு விரிவு தரப்பட்டிருக்கும்.
  2. நிகண்டுகள் தொல்காப்பியம் காட்டும் உரிச்சொல் வகையைச் சேர்ந்தவை.

திவாகரம், பிங்கலந்தை, நிகண்டு சூடாமணி, வேதகிரியார் சூடாமணி, உரிச்சொல் நிகண்டு, கெயாதரம் (கயாதர நிகண்டு), பாரதி தீபம், ஆசிரிய நிகண்டு, அகராதி நிகண்டு, கைலாச நிகண்டு, பல்பொருட் சூளாமணி நிகண்டு, சதுரகராதி, பொதிகை நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, நாதார்த்த நிகண்டு, சிந்தாமணி நிகண்டு, முதலான நிகண்டு வகை நூல்களின் அமைப்பு-முறைமை இந்த முன்னுரையில் விளக்கப்பட்டுள்ளன.

பாடல் எடுத்துக்காட்டு [2][தொகு]

க-கர எதுகை

அகவலே அழைத்தல் ஆடல் ஆன்ற ஆசிரியம் முப்பேர்
தகவல் அறிவுடன் ஒழுக்கம் தெளிவும் நற்குணமும் சாற்றும்
பகவதி உமையே துர்க்கை தரும தேவதைப்பேர் பன்னும்
முகவு மாளிகை முகப்பே மொள்ளுதல் காந்திக்கும் பேர் [3]

க-கர எதுகை பிரதிபேதம்[4]

பகவதி உமையே துர்க்கை தரும தேவதைப்பேர் பன்னும்
அகவலே அழைத்தல் ஆடல் ஆன்ற ஆசிரியம் முப்பேர்
தகவல் அறிவுடன் ஒழுக்கம் தெளிவும் நற்குணமும் சாற்றும்
முகவு மாளிகை முகப்பே மொள்ளுதல் காந்திக்கும் பேர் [5]

அடிக்குறிப்பு[தொகு]

  1. திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு செந்தமிழ்ப் பிரசுரம் – வெளியீடு – எண் 54, சு. வையாபுரிப்பிள்ளை பதிப்பு, அச்சகம் – மதுரைத் தமிழ்ச் சங்கம் முத்திராசாலை அச்சகம், 1931
  2. சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ள வடிவம்
  3. பாடல் 1
  4. வேறுபாடம், உ. வே. சாமிநாதையர் ஏட்டுச் சுவடியில் க-கர எதுகை நூற்பா முழுமையும் உள்ளது. அதன் பாடம் வேறாக உள்ளது.
  5. பாடல் 1