அருப்புக்கோட்டை வீரபத்திர சுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அய்யா கோவில் எனப்படும் வீரபத்திர சுவாமி கோவில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் , அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் பாவடித்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

அய்யா சுவாமி என்று மக்களால் அழைக்கப்பட்ட வீரபத்திர சுவாமி, திருச்சுழி அருகே உள்ள பள்ளிமடம் என்ற ஊரில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக அவதரித்தவர். அவரின் இளமைக் காலம் குறித்து அதிகம் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின், அங்கிருந்து புறப்பட்டு அருப்புக்கோட்டை நகருக்கு வந்த சுவாமிகள் நிரந்தரமாக இங்கேயே தங்கி விட்டார். அந்நாளில் சுவாமிகள் இப்பகுதி மக்களுக்குப் படிப்பறிவினை வழங்கி உள்ளார்.

கோவில் பற்றிய தகவல்[தொகு]

இந்த இடத்தில் ஒரு கோவில் வரும், இவ்வீதியிலே தேரோட்டம் நிகழும் என சுவாமிகள் முன்பே கூறியவாறு, அருகிலேயே ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி உள்ளது. அம்மனின் தேரோட்டமும் நடைபெறுகிறது.

சமாதி[தொகு]

சுவாமிகள் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரம் அன்று, உயிருடன் சமாதியில் அடங்கி உள்ளார். அவர் சமாதியான ஆண்டு சரியாகத் தெரியவில்லை. சுவாமிகள் சமாதியான தினத்திலே, திருச்செந்தூரில் மாசி விழாவில் சண்முக விலாசம் திருநாள் நடைபெற்றுக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு[தொகு]

அருப்புக்கோட்டை - விருதுநகர் சாலையில் இக்கோவில் அமைந்து உள்ளது. முன்மண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது. கருவறையின் இருபுறமும் விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. பேச்சி அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. சாலிய சமுதாய மக்கள் வழிபடும் வகையில் சாலிய மகரிசியின் சிலையும் அமைந்து உள்ளது. கருவறையில் லிங்க உருவில் சுவாமிகளின் சமாதி அமைந்து உள்ளது. சுவாமிகள் பயன்படுத்திய ருத்திராட்சம் லிங்கத்தின் மீது அணிவிக்கப்பட்டு உள்ளது.

வழிபாடுகள்[தொகு]

நித்திய பூசைகள் நடைபெறுகின்றன. சுவாமிகளின் சமாதி நட்சத்திரமான புனர்பூசம் அன்று, மாதம் தோறும் சைவத் திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது. அன்று ஒன்பது வகையான அபிசேகமும், பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் மாலையில் திருவாசகம் ஓதுதல் நடைபெறுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அருப்புக்கோட்டை வீரபத்திர சுவாமி சித்தர்". sadhanandaswamigal (4 ,பிப்ரவரி 2014). பார்த்த நாள் 5 ஆகத்து 2017.