அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில்
ஆயிரங்கண் மாரியம்மன் கோவில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரின் மேற்கில் பாவடித்தோப்பு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மனுக்கு எழுப்பப்பட்டக் கோயிலாகும்.[1]
அமைப்பு
[தொகு]அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் வடக்கு நோக்கிய வண்ணம் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் பின்புறம் ஒரு தெப்பக்குளம் அமைந்துள்ளது. எனவே இக்கோவில் தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் என வழங்கப்படுகிறது. கோவிலின் முன்புறம் பலிபீடம், கொடிக்கம்பம், சிம்ம வாகனம் ஆகியவை வரிசையாக அமைந்துள்ளன. அடுத்து முக மண்டபம் காணப்படுகிறது. அடுத்து மகாமண்டபமும், தொடர்ந்து அர்த்த மண்டபமும், கருவறையும் அமைந்துள்ளன. கருவறையில் மாரியம்மன் திரிசூலத்துடன் நின்றவாறு உள்ளார். அம்மனுக்கு இடப்புறம் விநாயகர் பீடம் ஒன்று உள்ளது. இங்கு உயிர்ப்பலி இடுதல் வழக்கம் இல்லை. மாறாக இங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாக்கள்
[தொகு]மாதந்தோறும் கடைசி வெள்ளியில் குத்துவிளக்கு பூசை, மார்கழி தனுர் பூசை, தைப்பொங்கல், நவராத்திரி போன்ற பல்வேறு விழாக்கள் இக்கோவிலில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. சித்திரை மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா இங்கு சிறப்பாக நடக்கிறது.
சித்திரைப் பொங்கல்
[தொகு]சித்திரைப் பொங்கல் விழா பன்னிரெண்டு நாள்கள் கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தினந்தோறும் மாலையில் கோவில் கலையரங்கில் சமயம் தொடர்பான பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும். எட்டாம் திருவிழாவை ஒட்டி அன்று மாலையில் கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கன பெண்கள் கலந்துகொள்வர்.
கதவு திறத்தல்
[தொகு]பொங்கல் அன்று சரியாக நள்ளிரவில் ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் தொடங்கும். புது ஆடை உடுத்தி, அலங்காரங்களும் ஆபரணங்களும் சாத்தி அம்மனை அலங்கரித்து, நைவேத்திய படையலும் இட்டு, தூப தீபம் காட்டி முடித்து, அர்த்த மண்டபக் கதவை அடைத்துவிடுவார்கள். அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி வேப்பிலையைக் கையில் ஏந்தியபடி, உள்பிராகாரத்தை ஒருமுறை வலம் வருவார். கையிலுள்ள தேங்காயை அர்த்தமண்டப வாசல்படியில் சிதறுகாய் உடைப்பார். அப்போது சாத்திவைக்கப்பட்டிருக்கும் அர்த்த மண்டபக் கதவுகள் இரண்டும் திறந்து அந்த ஆயிரங்கண் மாரியம்மனின் காட்சி கோவிலைச் சுற்றிக் கூடி நிற்கும் மக்களுக்குக் கிட்டும்[2]
தீச்சட்டி
[தொகு]பக்தர்கள் விரதம் இருந்து 25, 51,101 வகைத் தீச்சட்டிகள் எடுத்தும், அலகு குத்தியும், பொம்மை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்துவர். [3]
பூக்குழி
[தொகு]மாலையில் கோவில் முன்பு இரண்டு ஆள் உயரத்துக்கு அடுக்கப்பட்ட பல டன் விறகுகள் தீ மூட்டப்படும். அம்மனுக்கு நேர்ந்துகொண்ட பக்தர்கள் இப்பூக்குழியில் இறங்கி நடப்பர். பூக்குழிக்கு நான்கு பக்கங்களிலும் எல்லைக்கோடாகப் போட்டுவைத்திருக்கும் மல்லிகைச் சரங்கள், தீ அனலால் வாடாமல், கருகாமல் இருக்கும். அம்மன் பூக்குழி நிகழ்வுக்குப் பின்பே அம்மல்லிகைச் சரங்கள் வாடும்.
தேரோட்டம்
[தொகு]பத்தாம்நாள் விழாவில் அம்மன் வீதியுலா நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பர். பதினொன்றாம் நாள் பூப் பல்லக்கு நிகழ்ச்சியும் வாண வேடிக்கையும் முளைப்பாரியும் நடைபெறும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட நெட்டித் தண்டில் தயாரிக்கப்பட்ட மாதிரி வடிவம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
- ↑ "அடைத்த கதவு திறக்கும் ஆயிரங்கண் மாரியம்மன்". தி இந்து. 24 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "பங்குனிப் பொங்கல் விழா". தினமலர். 5 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)