உள்ளடக்கத்துக்குச் செல்

அரிசுடார்க் பெலோபோல்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி (Aristarkh Apollonovich Belopolsky; Аристарх Аполлонович Белопольский) (ஜூலை 13 [யூ.நா. ஜூலை 1] 1854), மாஸ்கோ – 16 மே 1934, புல்கோவோ, இலெனின்கிராது) ஓர் உருசிய வானியலாளர். இவர் மாஸ்கோவில் பிறந்தார். ஆனால் இவரது தந்தையின் முன்னோர்கள் செர்பிய நகரமான பெலோபோல்யேவை சேர்ந்தவர்கள் ஆவர்.[1]

வாழ்க்கை[தொகு]

பெலோபோல்சுகி 1876 இல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1878 இல் மாஸ்கோ வான்காணகத்தில் பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிக்கின் அவர்களின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், புல்கோவ் வான்காணகத்தில் 1888 இல் பணியாளராக வேலையில் சேர்ந்தார்.

இவர் கதிர்நிரலியலில் பணிபுரிந்து, பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்தார். இவற்றில் இவர் கண்டுபிடித்த காச்டர் B என்பது 2.92 ஒளிநாட்கள் தொலைவில் உள்ள ஒரு கட்புல இரும விண்மீனாகும். இது இரட்டை (ஜெமினி) விண்மீன்களில் ஒன்று. மேலும் இது பீட்டா ஜெமினோரம் எனவும் அழைக்கப்படுகிறது.

பெலோபோல்சுகி கருவிகள் செய்வதில் வல்லவர். இவர் 1900 இல் கதிர்நிரல்களின் டாப்பிளர் பெயர்ச்சியை அளக்கும் கருவியமைப்பை உருவாக்கினார். இவர் தொலைவில் உள்ள வான்பொருட்களின் சுழற்சி வீதத்தை அளக்க, ஒளியியல் டாப்பிளர் பெயர்ச்சிமுறையின் பயன்பாட்டை அறிமுகப் படுத்தினார். இவர் வியாழனின் நடுவரையானது, உயர் அகலாங்குகளைவிட வேகமாக இயங்குவதைக் கண்டறிந்தார். மேலும் காரிக்கோளின் வலயங்கள் திண்மம்போல. ஒருங்கே சுற்றுவதில்லை எனவும் அதனால் அவை தனித்த சிறுசிறு பொருட்களால் ஆகியவை என்பதையும் நிறுவினார்.

அக்காலத்தில் வெள்ளியின் ஒரு நாளுக்கான பொழுதைக் கணக்கிட முடியாமல் திணறினர். இவர் 1990 இல் 24 மணிநேரம் எனவும் 1911 இல் 35 மணிநேரம் எனவும் முன்மொழிந்தார்.[2]

இவர் அசுகார் பாக்லந்தின் நல்ல நண்பர். அவர் 1916 இல் இறந்த்தும் புல்கோவ் வான்காணகத்தின் இயக்குநரானார். என்றாலும் அதன் நிறுவாகச் சுமையை விரும்பாததால் அப்பதவியை விட்டு 1918 இல் விலகினார்.

நிலவில் ஒரு குழிப்பள்ளம் இவர் பெயரால் பெலோபோல்சுகி குழிப்பள்ளம் எனவும், ஒரு சிறுகோள் 1004 பெலோபோல்சுகியா எனவும் வழங்குகின்றன. பெயரிட்டு வழங்கும் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் பல விருதுகளில் ஒன்று இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  2. "Аристарх Аполлонович Белопольский — Bourabai Research". Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.

வெளி இணைப்புகள்[தொகு]

நினைவேந்தல்கள்[தொகு]