அராலி முத்துமாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அராலி முத்துமாரியம்மன் கோயில் என அழைக்கப்படும் அராலி ஆவரம்பிட்டி முத்துமாரி அம்மன் கோவில்[1] யாழ்ப்பாண மாவட்டத்திலே அராலிப் பாலத்திலிருந்து தெற்கு நோக்கிக் கால் மைல் தூரத்தில், மேற்கு நோக்கிய வீதியில் ஆவரம்பிட்டியில் அமைந்துள்ளது. இவ்வம்மன் மலையாள தேசத்திலிருந்து வந்ததாக ஐதீகம். இக்கோயிலின் வடக்கு வீதியில் அமைந்துள்ள நாவல் மரம் மிகப் பழமை வாய்ந்தது. அடுத்த வெள்ளி, சனிக்கிழமைகளில் முடிவடையுமாறு உற்சவம் நடைபெறும். 9வது நாள் ஆடு கோழிகளைப் பலியிடும் வேள்வி ஆரம்பத்தில் நடைமுறையில் இருந்தது. பின் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒவ்வொரு வருடமும் புதிய கமுகு மரத்தின் உச்சியில் நடுவே சிங்கம் வரையப்பட்ட வெள்ளைச்சீலையும், நான்கு நிறச்சேலைகளும் கட்டப்பட்டுத் திறந்த வெளி அரங்கில் கொடிமரம் ஏற்றப்படும். 8ம் நாள் சுவாமி வேட்டைக்குச் சென்று திரும்ப வைகறையாகிவிடும். அடுத்த நாள் பொங்கல் பூசைகள் நடைபெறும். இதற்குப் பின் சங்காபிஷேகமும் நடந்தேறும். அன்று பகல் அன்னதானம் வழங்கப்பட்டு மாலை பூந்தண்டிகையில் அம்பாள் வலம்வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

வரலாறு[தொகு]

அக்காலத்தில் பொன்னாலையில் வாழ்ந்த வலைஞன் ஒருவன் கடற்பரப்பில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, அவனுடை மீன் வலையில் ஏதோ விதமான வித்தியாசம் தோன்றியது. அப்போது அவனுடைய உடம்பு முழுவதும் ஒரு சக்தி இழுப்பதுபோல் தோன்றியது, அவன் உடனே பெருஞ் சிரமத்தின் மத்தியில் அந்த வலையை வெளியே இழுத்துவந்தான் மிகவும் ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் அவ்வலைக்குள் பொன்னிறமான ஒரு ஆமையும், ஒரு கல்லும் மற்றும் ஒரு சிலம்பும் ஒரு பிரம்பும் இருந்தன. அவனுக்குப் பல வித சிந்தனைகள்தோன்றின. இருந்தும் அவன் அந்த ஆமையைத் தனது வீட்டிற்குக் கொண்டு செல்ல நினைத்து, அதைப்பிடித்து கடற்கரையில் ஒரு இடத்தில் மல்லாத்தி வைத்து விட்டு, அந்தக் கல்லையும், சிலம்பையும் பிரம்பையும் கடற்கரை ஓரத்தில் எறிந்து விட்டான்.

பின் அவன் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றான். அவன் மனம் மிகவும் குழம்பிய நிலையில் தான் இருந்தது. அன்று அவனுக்கு மீன் பிடிக்க நேரம் எடுத்தது. ஆனால் வழக்கம் போல அவனுக்கு மீன் கிடைக்கவில்லை. கிடைத்த மீனுடன் கரைக்கு வந்தான். அங்கே மல்லாந்து வைத்து இருந்த பொன்னிற ஆமையைக் காணவில்லை. அவன் கவலையுடன் பல இடங்களிலும் ஆமையை தேடினான், கிடைக்க வில்லை, அவன் கிடைத்த சொற்ப மீன்களுடன் வீடு திரும்பினான். மீன்பிடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட வகைகளைத் தனது மனைவி, பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னான். அவர்களும் ஆச்சரியப்பட்டார்கள். அன்று அவன் கவலையுடன் நித்திரைக்குச் சென்றான். இரவு கனவில் நாராயணமூர்த்தி பெருமாள் அழகிய பண்டாரத்தின் வடிவில் காட்சி கொடுத்து அவனை நோக்கி "மகனே! நீ கடற்கரையில் வீசிய மூன்று பொருட்கள் கல்லு, சிலம்பு, பிரம்பு ஆகியவற்றை தேடி எடுத்து அந்தப் பொருட்களுடன், ஆமை சென்ற வழி அறிந்து அவ்வழியே செல்ல, ஓரிடத்தில் இரண்டு கற்களைக் காண்பாய். அதில் ஒரு கல் ஆமை வடிவமாக இருக்கக்காண்பாய், மற்றக்கல்லில் சிலம்பு, பிரம்பு, கல் என்ற மூன்று பொருட்களையும் வைப்பாயாக" என்று கூறினார்.

கண் விழித்து எழுந்து தனக்குக் கனவில் கூறியதைத் தனது குடும்பத்தாருக்குக் கூறிவிட்டு அவனின் கனவில் கூறியபடி செயல்பட்டான் கடற்கரையில் இருந்து கல்லு, சிலம்பு, பிரம்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஆமை சென்ற சுவடு வழியே சென்றபோது, கனவில் தோன்றிய இருகற்களையும் கண்டான். அதில் ஒரு கல் ஆமை வடிவமாக இருந்தது. ஆம்! மற்றகல்லில் அந்த மூன்று பொருட்களையும் (கல், சிலம்பு, பிரம்பு) வைத்து சிறு கொட்டில் கட்டிப் பூஜை செய்து வணங்கி வந்தான். அக்கிராமத்தவர்களும் சென்று வணங்கி வரத் தொடங்கினார்கள். "பொன்னாமை" தங்கிய இடத்தில் பொன்னாலை கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளதாகவும் அது தற்போதைய வரதராசப் பெருமான் ஆலயம் ஆகும்.

இப்படிச்சில காலம் அங்கே உள்ள இறைபக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர். திருவிழாக்களும் நடத்தினார்கள். திடீரென ஊரில் உள்ளவர்களுக்குப் பேதி, அம்மை போன்ற கொடிய நோய் கொடுத்து மக்களைப் பெரிய துன்பத்தில் ஆழ்த்தின. அப்போது ஆதிபராசக்தியானவள் தமது பெருங் கருணையினால் மெய்யடியவரொருவரில் உருக் கொண்டு ஆவேசித்து உங்கள் அனைவருக்கும் அருள் பாலிக்கின்றேன். கல், சிலம்பு, பிரம்பு, என்ற மூன்று பொருட்களையும் அராலிக்கிராமத்தில் இருக்கும் நொச்சிக்காடு என்னும் இடத்தில் ஒரு கள்ளிமரம் இருக்கிறது, அந்தக் கள்ளி மரநிழலில் இம் மூன்றையும் கொண்டு போய்ப் பயபக்தியோடும் அன்போடும் வையுங்கள், என்று உருக் கொண்டவர் திரும்பத்திரும்ப சொன்னார். அப்போது அங்கே இருந்த மெய்யடியார்கள் உருக் கொண்டவர் கூறிய பிரகாரம், அந்த மூன்று பொருட்களையும் எடுத்து கொண்டு போய் அராலியில் நொச்சிக்காட்டில் கள்ளிமரத்தைக் கண்டுபிடித்து அதன் நிழலில் வைத்து ஒரு சிறு கொட்டில்கட்டி வணங்கிவந்தார்கள். அந்த மூன்று பொருட்களில் ஒன்றான கல் யானைமுக விநாயகராகத் தோன்றி அவ்விடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் அமைத்து விநாயகர் வழிபாடு செய்து வந்தார்கள் (தற்போது நொச்சிக்காட்டு பிள்ளையார் ஆலயம் எனக் கூறப்பட்டு வருகிறது)

இவ்வாறு சில வருடங்கள் கழிந்த பின்னர் அங்கு உள்ளவர்களுக்கு, அம்மை, பேதி, சின்னமுத்து பொக்கிளிப்பான் போன்ற கொடிய நோய்கள் வரச் செய்து பக்தர்களுக்குப் பல விதமான கஷ்டங்களைக் கொடுக்கச் செய்தது (இக் கொடிய நோய்களை முத்துமாரியம்மன்தான் கொடுக்கிறவரும் அதனை மாற்றி வருபவருமாவார்) பின் ஓர் இரவு மெய்யடியார் சன்னதனுக்கு முத்துகள் கொண்ட சிலம்பையும், அழகான பிரம்பையும் அராலிப் பதியில் உள்ள பண்டவன் என்னும் குறிச்சியில் பயபக்தியோடு வைப்பாயாக என்று அம்மையார் கனவில் கூறியருளினார். சன்னதனும் கனவில் கூறியபடியே அந்த இரண்டு பொருட்களையும் கொண்டு போய்க் குறிக்கப்பட்ட இடத்தில்வைத்தான் அதற்குச் சிறு கொட்டிலும் கட்டிச் சிலம்பையும் பிரம்பையும் வணங்கிவந்தார்கள். அயலில் உள்ளவர்கள் மிகவும் சீருஞ்சிறப்புடன் வாழ்ந்துவந்தார்கள் (அந்தக்குறிச்சி தற்போது அராலி மத்தியில் இருக்கிறது)

பின் அங்கு உள்ள பக்தர் ஒருவனில் உருக்கொண்டு மிகவும் ஆவேசித்து அழகிய சிலம்பையும், அழகிய பிரம்பையும் அராலி தெற்கில் கணுக்கைக் குறிச்சியில் கொண்டு போய்ப்பயபக்தியுடன் வைப்பாயாக என்று உருக் கொண்டவர் பல முறை கூறினார். மெய்யடியார்கள் உருக் கொண்டவர் சொன்னது போல கணுக்கைக் குறிச்சியில் அழகிய முத்து நிரம்பிய சிலம்பையும், அழகிய பிரம்பையும் கொண்டு போய்ப்பயபக்தியோடு வைத்தார்கள். அங்கேயும் சிறு கொட்டில் கட்டி வழிபாடு செய்து வந்தார்கள். அந்தக் குறிச்சியில் உள்ளவர்களுக்குச் சகல வளமும் கிடைக்கப் பெற்றன. இவைகளை அறிந்து பிற இடங்களிலிருந்து பல அடியார்கள் வந்து பல சிறப்புகளைப் பெற்றார்கள். சில காலத்துக்குப்பின் அந்த இடத்தை விட்டுப் பிரிந்து செல்ல விருப்பங் கொண்டு முன்பு போல் அம்மை, பேதி நோய்கள் மக்கள் வருத்த, மெய்யடியவனொருவனில் உரு வந்து ஆவேசித்து அந்த ஒளிவிளங்கும் சிலம்பையும், நல்ல அழகிய பிரம்பையும் அராலி கிழக்கில் உள்ள கிரணசங்கிரத்தை என்னும் குறிச்சியில் வைப்பாயாக என உருக்கொண்டு பல முறை சொன்னார். ஆம்! உருக்கொண்டு சொன்ன பிரகாரம் அந்த சிலம்பையும், பிரம்பையும் கொண்டு போய்ப் பயபக்தியுடன் கிரணசங்கிரத்தை இடத்தில் வைத்து சிறு கொட்டில் கட்டி வணங்கி வந்தார்கள். பின்பு விரைவாக அவ்விடம் விட்டு நீங்க எண்ணினாள், பின்பும் பேதி, அம்மை நோய்கள் முன்போல மக்கள் வருத்த, அப்போது ஒரு மெய்யடியார் நல்ல ஆவேசம் உருக்காட்டி ஒளிவிளங்கும் சிலம்பையும், நல்ல பிரம்பையும் கொண்டு போய் வயல்கள் சூழ்ந்த, சிறப்புப் பொருந்திய அராலி கிராமத்தில் ஆவரம்பிட்டி என்னும் குறிச்சியில் உள்ள நாவல் மரத்தின் கீழ் அழகிய சிலம்பையும், அழகிய பிரம்பையும் வைப்பாயாக என கூறினார் உருகொண்டவர் சொன்ன பிரகாரம் நாவல் மரத்தடியில் கொண்டு போய் வைத்தார்கள். அந்தச் சிறந்த தலத்தில், அம்மாள் இருக்க விரும்பினார். மெய்யடியார்கள் எல்லோரும் சேர்ந்து பூஜைகள், வழிபாடுகள் செய்து வந்தார்கள் கிராமம் முழுவதும் உள்ள மக்களுக்கு மேன்மை பொருந்திய கல்வியும், குறைவில்லாத செல்வமும், சந்தான விருத்தியும், பூவுலக சுகங்களும், பல்வகைச் சிறப்பும் கிடைக்கப் பெற்றன.

இருந்தும் மெய்யடியார்களுக்குத் திடீர், திடீர் நோய்கள் வருவதை மனதில் வைத்து அந்தக்காலத்தில் மிகவும் பெயர் போன விஷகடிவைத்தியரும், பெரிய சோதிடரும், தெய்வபக்தி மேம்பட்டவருமாக இருந்த பெரியதம்பி அவர்களிடம் மெய்யடியார்கள் எடுத்துக் கூறினார்கள். சாத்திரியார் நாவல் மரத்தடிக்குச் சென்று பார்த்து விட்டு, இவைகள் நீரில் வந்தபடியால் நீரில்தான் விடவேண்டும் என்று சொன்னார். பின் அவர் ஒரு நல்ல நாளாகப் பார்த்து அந்நாவலடிக்கு மெய்யடியார் களுடன் சென்று அம்மாளைத் தியானித்து வணங்கி ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து உருட்டி விட்டார். அந்த எலுமிச்சம்பழம் உருண்டு போய்த் தற்போது மூலப்பீடமமைந்துள்ள இடத்தில் நின்றது. ஆம்! அந்த இடத்தில் மிக ஆழத்திற்குக் குழி தோண்டச் செய்து அக்குழியில் இச்சிலம்பு பிரம்புகளையிட்டு மூடி அதன்மேல் பீடமமைத்து அதற்குக் கோயிலும் அமைக்கப்பட்டது. அந்த பீடத்தின் தெய்வீக சக்தி வாய்ந்த ஆறு கருங்கற்கள் வைத்தார்கள். இங்கே அம்மாளுக்கு உருவம் கிடையாது அருவத்திருமேனி கொண்டு அருவ வழிபாடு ஆரம்பமானது. ஆரம்பத்தில் சிறு கொட்டிலாக அமைந்துள்ள நிலையில் பொங்கல், படையல் என்பன ஊர் வாசிகளாக பயபத்தியுடன் நடைபெற்று வந்தன. பின் சில காலத்துக்கு பின் செங்கற்களால் ஆலயம் அமைக்கப்பட்டது. திருக்கோயிலில் அருவத்திருமேனி கொண்டு அருள் பாலிக்கும் ஆதி சக்தியாம் அன்னை பராசக்திக்கு நித்திய பூசைகளும் நைமித்திய பூசைகளும் நடைபெற்று வந்தன. இங்கு நித்திய பூசையின் போது மேற் குறித்த பீடத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இம்முறையானது அம்பிகையானவள் அருவுருவத் திருமேனி கொண்டு அருள் பாலிக்கும் அருட் காட்சியை எடுத்துக் காட்டுகிறது. விசேட உற்சவங்களில் பீடத்தில் கும்பம் வைத்து அம்பிகையின் முகம் வைத்து சிறந்த சாத்துப்படிகளுடன் அம்மாள் ஆரோகணித்து அமர்ந்திருப்பது போல் காட்சி தருவாள்.

வழிபாட்டு முறையில் ஆகம வழிபாட்டு முறையில் கிரியா மார்க்கம் இடம் பெற்றிருப்பினும் அதனுடன் பக்தி மார்க்கமும் இணைந்து ஒரு புதிய வழிபாட்டு மரபாக வளர்ச்சி பெற்றுள்ளமை குறிப்பிடக் கூடிய ஒரு சிறப்பம்சம் மட்டுமன்றி இவ்வழிபாட்டு முறையானது ஈழத்திலோ அன்றி இந்தியாவிலோ அல்லது வேறு எங்கேயும் காணமுடியாத தனித்துவமான ஒன்றாகவும் விளங்குகின்றது.

அற்புதங்கள்[தொகு]

  1. முற்காலத்தில் இந்தியா செட்டிமார், இந்தியாவிலிருந்து சரக்குப் பொருட்கள், மற்றும் வேறு பல பொருட்களைப் பாய்க் கப்பல் மூலம் கொண்டு வந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள கிட்டங்கிக் கடைகளுக்குக் கொடுத்து சம்பாதித்து வந்தார்கள். இப்படிக் கொண்டு வரும் காலத்தில் ஒரு நாள் கடலில் பெரும் கடும் புயல் காற்றும் மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது. பாய்க்கப்பல் கடலில் மூழ்கிவிடும் போல் இருந்தது. அப்போது அங்கே செட்டிமார்கள் உடனே ஆவரம்பிட்டி அம்பாளுக்கு ஒரு சிங்க வாகனம் செய்து தருவதாகவும் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினார்கள். உடனே புயல் காற்றும் மழையும் நின்றுவிட்டது. பொருட்களுடன் பாய்க்கப்பல் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்து, அவர்கள் ஒரு பெரிய சிங்க வாகனம் அம்பாளுக்குச் செய்து கொடுத்தார்கள். ஆனால் அந்த வாகனம் தற்போது இல்லை. அது சிதைவு ஏற்பட்டு அழிந்து போய்விட்டது.
  2. முன்னைய ஆலய தர்மகர்த்தா (இளையவர்) திரு.அருணாசலம், அம்பாள் பக்தர் முத்துக்குமாரு அவர்களிடம் அம்பாளுக்கு ஒரு பீடம் செய்ய வேண்டும் எங்கே என்றாலும். ஒரு முதிரை மரத்தை பார்க்கச் சொன்னார். ஆம்! அன்று இரவு அம்பாள் கனவில் தனித்தனியாக தோன்றி ஏதோ ஒரு இடத்தில் ஒரு முதிரை மரம் இருக்கிறது. அதனைக் கொண்டு வரும்படிசொன்னார். அடுத்தநாள் இக் கனவை பற்றி சொல்வதற்கு ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். இருவரும் தங்கள் கனவைக் கூற கனவுகள் ஒரே மாதிரியாக இருக்க அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பின் கனவில் சொன்ன இடத்துக்குச் சென்ற பொழுது அங்கே கனவில் சொன்ன முதிரைமரம் இருந்தது அதனை எடுத்துக் கொண்டு வந்து அம்பாளுக்குப் பீடம் செய்து வைக்கப்பட்டது. அப்பீடம் தற்போதும் இருக்கிறது.
  3. ஒரு அம்பாள் பக்தர் ஒரு சிங்க வாகனம் செய்யவதற்கு ஒரு பலா மரம் தேவை எங்கே எடுப்பது என்று யோசித்த போது அவருக்கு அன்று இரவு கனவில் அம்மாள் தோன்றி உடுவில் பகுதியில் பலாமரம் இருக்கின்றது, அதனை எடுத்துச் செய்யச் சொன்னார். பின் மறு நாள் உடுவிலுக்குச் சென்று விசாரித்த போது, ஒரு வீட்டு மாட்டுக் கொட்டிலில் பழுது இல்லாத ஒரு பலாமரம் இருந்தது. அதனைக் கோயிலுக்குத் தேவை எனக் கூறி ரூபா 100ஐ கொடுத்து வாங்கி வந்து ஒரு சிங்க வாகனம் செய்யப்பட்டது. அந்த வாகனம் தற்போதும் கோயிலில் உண்டு.
  4. முன்னொரு காலத்தில் ஒரு நாள் இரவு மூன்று கள்வர்கள் வந்து அம்பாளின் ஆலயத்தில் உள்ள பணம், பொருள்களைக் களவாடி எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணப் பக்கமாகச் சென்றார்கள். அவ்வாறாக அவர்கள் பணம், பொருளுடன் கிழக்கு பக்கமாகச் சிறிது தூரம் சென்றதும் அவர்கள் மூவருக்கும் கண் தெரியாது போக, அவர்கள் செய்வதறியாது அழுது புலம்பி, அப்பகுதியில் இருந்து தாழம் மரங்களிற்குள் விடியும்வரை அழுது புலம்பித் தாம் செய்த பிழையை மன்னிக்குமாறு அம்பாளை வழிபட்ட வண்ணம் இருந்தனராம். விடிந்ததன் பின்பு அப் பாதையால் சென்ற மக்கள் இவர்களின் புலம்பல்களையும், சத்தத்தையும் கேட்டு அங்கு சென்றதும் அக் கள்வர்கள் மூவரும் தாங்கள் செய்தவற்றை கூறித் தங்களுக்குக் கண் தெரியவில்லை எனவும் கூறி தங்களையும், அம்பாளின் ஆலயத்தில் சேர்த்து விடும்படி மன்றாட்டமாகக் கேட்க அவ்வாறே பொது மக்களும் அவர்களையும் பொருட்களையும் அம்பாளின் ஆலயத்தில் சேர்க்க, அக் கள்வர்கள் அம்மாளிடம் தாம் இனிமேல் ஒரு பொழுதும் இப்படியான பிழையை இங்கேயோ அல்லது வேறு எங்கேயோ செய்ய மாட்டோம், என்றும் தங்களை மன்னித்து அருளும்படி புலம்பி மன்றாட, இவர்களின் நிலையையும் புலம்பல்களையும், பார்த்த ஆலயக் குருக்கள் அவர்களுக்கு வீபூதிப் பிரசாதமும் தீர்த்தமும் வழங்க, அவர்கள் அம்பாளின் வீபூதியைப் பூசித் தீர்த்தத்தினால் கண்களில் தடவ அவர்கள் மீண்டும் கண்பார்வை பெற்றனர். பின் அவர்கள் அம்மாளை துதித்துச் சென்றனர். என்று ஒரு அற்புதக் கதை உண்டு. இதிலிருந்து அம்பாளின் திருவருட் சக்தியை உணர முடிகிறது.
  5. பல ஆண்டுகளுக்கு முன் அம்பாளின் ஆலயத்தில் திருப்பணி வேலைக்காகச் சாவகச்சேரியில் மரங்களை வண்டிலில் ஏற்றிக் கொண்டு கல்லுண்டாய் வழியாக வரும் போது வண்டிலின் ஒரு சில்லு கிடங்கினுள் தாண்டுவிட்டது. வண்டிற் காரனும், மற்றவனும் எவ்வளவோ முயற்சி எடுத்தும் வண்டியை நகர்த்த முடியவில்லை. அவர்கள் பின் அம்மாளை நினைத்து உனது கோவில் திருப்பணிக்கு மரம் கொண்டுவர இப்படியா செய்வது என்று மனக்கவலைப்பட்டனர். இருள் சூழ்ந்து விட்டது. சன நடமாட்டமும் இல்லை. சிறிது நேரத்தின் பின் அங்கே ஒரு குரல் கேட்டது. வண்டியை எடு "நான் சில்லைத் தூக்குகிறேன்" என்று அதன்படி வண்டியை எடுக்க இலகுவாக சில்லு வெளியே வந்தது. அவர்கள் அம்பாளின் புதுமையை நினைத்து மகிழ்ந்து வண்டியுடன் மரங்களை கோவிலடியில் சேர்ப்பித்தனரென்றால் அம்பாளின் அருட்பெருஞ்சக்தியின் வலிமையை இச்சம்பவத்திலிருந்து அறிய முடிந்தது.
  6. அம்பாளின் பக்தர் ஒருவர் யாழ்ப்பாணம் வேலைக்குச் சென்ற போது நாவல் மரத்தடியில் இறங்கி அங்குள்ள அம்பாளை வணங்கிப், பின் நாவல் மரத்தில் உள்ள பத்திரத்தைப் பறித்துக் கொண்டு போவது வழக்கம். இரவு அந்த பக்தரின் கனவில் அம்பாள் வந்து நீ இப்படியே ஒவ்வொரு நாளும் வந்து ஒரு முடியைப் பறித்தால் என் கதி என்னவென கூறியதாகவும் அன்றிலிருந்து அவர் நாவல் மரத்தில் பத்திரம் பறிப்பதை நிறுத்திவிட்டார். அதற்குப் பதிலாகக் கீழே விழும் இலையைப் பாதுகாப்புக்காக எடுத்துச் செல்வார். இப்போதும் சிலர் விழும் இலையை எடுத்துப் பாதுகாப்புக்காச் செய்வதுமுண்டு.
  7. மூளாயைச் சேர்ந்த வை.அரியகுட்டி என்பவர் பல கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டு வைத்தியர்களினாலும் மருத்துவர்களினாலும் நீக்க முடியாது என கைவிடப்பட்ட பொழுது அராலி ஆவரம்பிட்டி முத்துமாரியம்மனிடம் தஞ்சம் அடைந்து தனது இந்த கொடிய நோயை மாற்றித் தரும்படி வேண்டினார் ஆம்! அவள் அருளால் அவருக்கு நோய் முற்றாக மாறியது. அரியகுட்டி அம்பாளின் அருளை மெச்சி அம்பாளின் புகழை தோத்திரம் மூலம் பாடி மகிழ வேண்டும் என்று விரும்பினார். அதன் நிமிர்த்தம் திரு கந்தையாப் பிள்ளையிடம் அணுகி தனது விருப்பத்தை தெரிவிக்க, அவரும் அதற்கு உடன்பட்டு, அவரால் தோத்திரம் பாடப்பட்டது. இதுவும் ஓர் அற்புதமாகும்.

திருவிழாக்கள்[தொகு]

அம்மாள் ஆலயத்தில் நடைபெறும் கொடியேற்ற உற்சவமானது ஏனைய ஆலயங்களில் நடைபெறுவது போலன்றி வெளிவீதியில் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள தளம் மண்டபத்திற்கு முன்னால் ஒரு உயரமான கமுக மரத்தில் ஏற்றப்படுகின்றது. கொடி மரம் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய கமுக மரத்தினால் செய்யப்படும். ஒவ்வொரு வருடமும் அதற்கான கமுகு எங்கே உள்ளது என்பதை அக் கமுகு கொண்டு வரும் ஒரு குறிப்பிட்ட அடியார் குழுவினருக்குக் கனவிலோ, அல்லது உள்ளுணர்வு மூலமாகவோ தெரியப்படுத்துவதாக நம்பிக்கையுடன் கூறுவர். அப்படியே நடந்து வருகின்றது.

திருவிழா வருடாவருடம் வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்திற்கு முதல் வெள்ளிக்கிழமை நடைபெற தொடங்கும். பின் அடுத்த 2ம் சனிக்கிழமை (9திருவிழாக்கள்) முடிவடையும்.

கொடியேற்றமன்று முதலில் தளத்துக்கு முன்னால் ஆழமாக கமுகு நாட்டக் கூடிய கிடங்கு வெட்டி வைப்பார்கள். பின் கமுகுவின் உச்சியின் நடுவே சிங்கம் (அம்மாளின் வாகனம்) கீறப்பட்ட வெள்ளைக் கொடியும், பின் நான்கு திசைகளிலும் நான்கு நிறக் கொடிகள் சிவப்பு, பச்சை, கறுப்பு மஞ்சள் கட்டப்படும். இந்தக் கொடி கட்டுவதற்கு தத்துவரீதியாக விளக்கம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்னும் பஞ்சகிருத்தியங்களையும் குறிக்கிறது என்று சிலர் கூறுவர். வேறு சிலர் ஐம்புலன்களையும் ஐம் பொறிகளையும் குறிக்குமென்பர். இதனை வேறு விதமாகவும், அதாவது பெண் தெய்வமாகிய உமையம்மையாருக்கு நாற்குணமும் நாற்படையாகப் போலும் நாலு நிறக் கொடிகளைக் குறிக்கும் நடுவே சிங்க வாகனத்தில் உமையம்மாள் வீற்றிருப்பதை குறிக்க கொடி மரத்தில் ஐந்து கொடிகள் கட்டப்படுகின்றன என்றும் சிலர் கூறுவர்.

ஆலயத்தில் அம்மாளின் பீடத்தில் இருக்கும் தெய்வீக சக்தி வாய்ந்த ஆறு கருங்கற்களின் மேல் தேங்காயில் அம்மாளை உருவேற்றி எழுந்தருள செய்யப்பட்டு இருக்கும். சக்தியின் பீடத்தின் அருகில் ஒரு சிறிய பிள்ளையார் இருக்கிறார். கொடியேறுவதற்கு முன் பிள்ளையார், அம்மாளுக்கு பூஜைகள் நடைபெறும். அங்கு வைக்கப்பட்டு இருந்த கும்பத்தை எடுத்து வெளிவீதியில் தென்கிழக்கு திசையில் உள்ள (தளத்துக்கு முன்னால்) கொடிமரத்திற்கு முன்னால் வைத்து, பின் குருக்கள் ஐயா, கொடிமரத்துக்கு தர்ப்பை, வேப்பிலை,கட்டி மஞ்சள் நீரினால் கொடிமரம் முழுவதும் பூசுவார். அதன்பின் வீபூதி குங்குமம் பூசி மாலைகள் அணியப்படும். பின் கொடியேற்றுவதற்குரிய கிரியைகள் வழிபாடுகள் செய்யப்படும் (அம்மாள் அடியார்கள் கொடிமரத்தை சுற்றி நிற்பார்கள்.) குருக்களின் கிரியையினைத் தொடர்ந்து அம்மாளின் அடியார்கள் கொடிகள் கட்டப்பட்ட கமுகு மரத்தை (கொடிமரம்) பக்தி பரவசத்துடன் நிலை நிறுத்தல் மிகவும் பக்தி பூர்வமான ஒன்றாகக் காணப்படுகிறது. கொடிமரம் நிலைநிறுத்தும் போது அம்மாளுக்கு அரோகரா, அம்மாளுக்கு அரோகரா என அம்மாளின் அடியார்களின் ஒலி கேட்டவண்ணம் இருக்கும். வைகாசி மாதத்தில் விசாக காற்று உச்சமாக வீசிக் கொண்டிருக்கும் போது திறந்த வெளியரங்கில் கொடிமரம் ஏற்றப்படுவதை பார்த்தால் பக்தி பரவசமாக இருக்கும். பின் பிள்ளையார் முருகன், அம்மாள் ஆகிய சுவாமிகளுக்கு வசந்தமண்டபத்தில் வைத்து நன்கு அலங்கரிக்கப்பட்டு பூசைகள் நடைபெறும். அதன் பின் அம்மாளை எழுந்தருளச் செய்து முதலில் உள்வீதி உலாவந்து, பின் வெளிவீதியில் கொடிக்கம்பத்துக்கு முன்னால் கொண்டு வரப்பட்டு அதன் பின் கொடிக்கம்பத்து பூசைகள் கிரியைகள் குருக்கள் ஐயாவால் செய்யப்படும். வீதியில் எங்கு பார்த்தலும் பக்தர் கூட்டம் காணப்படும். அதன் பின் பஞ்சபுராணம் ஓதப்பட்டு, பஞ்சாராத்தி தீபம் கொடிமரத்துக்கு காட்டப்பட்டபின் அம்மாள் வெளிவீதி உலா வருவார். வீதி உலாவில் பறை மேளம் கட்டாயமாக இருக்கும் மற்ற நட்டுவ மேளமும் இருக்கும். வீதிக்கு அருகில் உள்ளவர்கள் மடை வைத்து சுவாமிகளை தரிசனம் செய்வார்கள். சுவாமிகள் ஊர் வலமாக வந்து வடக்கு வீதியில் உள்ள நாவல் மரத்தடியில் தரித்து அங்கு நாவலடியில் உள்ள அம்மாளுக்கு பூசைகள் நடைபெறும். இந்த நாவல் மரம் வணக்கத்துக்குரியதாகப் போற்றப்படுகிறது. வீதி உலா வந்து அம்மாள் வசந்த மண்டபத்திற்கு போய் பூசைகள் நடைபெற்ற பின் அன்றைய பகல் திருவிழா முடிவடையும். இதே போல் இரவு திருவிழாக்கள் நடைபெறும். ஆனால் இரவு திருவிழாவுக்கு பிள்ளையார், முருகன், அம்மாள் வீதி உலாவாக வருவார்கள்.

இங்கு ஆறாம் திருவிழா கப்பல் திருவிழாவாகும் கப்பல் வாகனத்தில் அம்மாள் வீதியுலா வருவா. இந்த விசேட திருவிழாவிற்கு பல நம்பிக்கைகள் கூறுவர். அதாவது அம்மாள் வைகாசி விசாகத்துக்கு இந்தியாவில் இருந்து வந்து ஆடிப் பூரத்திற்கு திரும்புவதாகவும் ஒரு சிலர் கூறுவர். இன்னும் சிலர் ஒரு காலத்தில் அராலிக்கடல் கொத்தளித்து பெருக்கெடுத்து அராலிக் கிராமத்துள் புகுந்த போது அன்னை முத்துமாரி அம்மாள் தோன்றி பிரம்பினால் கடல் நீர் பெருக்கொடுக்காது தடுத்ததாகவும் அதனைத் தொடர்ந்து அராலிக் கடல் ஒரு போதும் பெருக்கெடுப்பதில்லை என்றும் இதனைக் கருத்தில் கொண்டே கப்பல் திருவிழா நடைபெறுகிறது, என்றும் கூறுவர்.

இனி எட்டாம் திருவிழாவான இரவுவேட்டைத் திருவிழா ஊர்உலாவாக அமையும். இது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். அன்று பிள்ளையார், அம்மாள், முருகன், ஆகிய மூன்று தெய்வங்களையும் கும்பத்தில் ஆரோகணம் பண்ணி அவை வேட்டைக்கு எழுந்தருளி அக்கிராமத்தின் ஓர் பகுதியை ஊர்வலமாக வலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும். ஊர்உலா வரும் போது வீடுகளின் முன் கும்பம் வைத்து அம்மாளுக்கு மடை பரப்பி அம்மாளை வணங்குவார்கள். ஊர் உலா செல்லும் வழிகளில் எங்கும் அம்மாள் பக்தர்கள் கூடி பக்தி பூர்வமாக அம்மாளின் தரிசனத்தை பெறுவதை பார்க்கக் கூடியதாக இருக்கும். பின் அம்மாள் ஊர் உலா வந்து கோயிலின் தளத்தில் இளைப்பாற வைத்து அதன் பின் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து வீதி சுற்றி அட்டதிக்கு (எட்டுத் திசை) பூசைகள் செய்து திரும்பவும் தளத்தில் கொண்டுவந்து இளைப்பாற வைக்கப்பட வைகறையாகிவிடும். ஆம்! அன்று இரவே நேர்த்திக் கடனாக பொங்கல்கள் படையல்கள் தொடங்கிவிடும் பின் அடுத்தநாள் பிற்பகல்வரை நடைபெறும். பிற்பகல் 2மணிக்கு கொடியிறக்கம் நடைபெறும். கொடியிறக்கத்தின் போது பிள்ளையார் முருகன், அம்மனை கேடகத்தில் (கூடு) எழுந்தருளச் செய்து வெளிவீதி வந்து கொடிக்கம்பத்துக்கு முன் சுவாமிகளை வைத்திருப்பார்கள். கொடிக்கம்பத்துக்கு முன் படையலுடன் 100க்கு மேற்பட்ட பிலாப்பழும் வெட்டிவைப்பார்கள் அடியார்கள்.

பின் குருக்கள் ஐயா கொடிக்கம்பத்துக்கு வேண்டிய கிரியைகள் செய்த பின் வீபூதிக்கு பூஜை செய்து அவ்வீபூதியை மூன்று தாம்பாளத்தில் வைத்து பின் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அதன் மேல் கற்பூரம் கொழுத்தி வைக்க அது சுவாலையாக எரிய அதனை தனது தலையில் வைத்து மிகவும் பக்தி பூர்வமாக சுமந்தபடி கொடிக்கம்பத்தையும், பிள்ளையார், அம்மாள் முருகனையும் மூன்று முறை வலம் வரும்போது. அம்மாள் அடியார்கள் பக்தி மேலிட அம்மாளுக்கு அரோகரா, அரோகரா என்று சொல்லி வணங்குவார்கள். குருக்கள் ஐயா மூன்று முறை சுற்றிய பின் கொடிக்கம்பத்துக்கு வேண்டிய பூஜைகள் செய்வார். பின் படையலுக்கும் வெட்டிய பலாப்பழத்துக்கும் குங்குமம் கலந்த நீர் தெளிக்கப்படும். அதன் பின் பஞ்ச புராணம் பாடப்படும் அதன்பின் ஊஞ்சற் பாட்டு பாடப்படும். பின் கொடிமரத்தை மெதுவாக மண்ணை எடுத்து கீழே இறக்குவார்கள் கொடிக்கம்பத்தில் இருந்த வேப்பிலை, வீபூதி, கொடிச்சீலை என்பவற்றை சக்தி பீடத்திற்கு எடுத்துச்சென்று தீபாராதனை காட்டுவார்கள். சக்தி பீடத்தில் பிள்ளையார் முருகன், அம்மாள் காத்தவராயன் இருப்பார்கள் சக்தி பீடத்தில் இருந்து கும்பத்தை எடுப்பதுடன் உற்சவம் பூர்த்தியடையும்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Tūmpil-piṭṭi, Turuttup-piṭṭi, Kaṇṇāp-puṭṭi, Kuḷap-piṭṭi, Cuṭalaip-piṭṭi". TamilNet. July 20, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22776.