அராபிய மெய்யியல் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அராபிய மெய்யியல் கொள்கை கொள்கையாளர்

அராபிய மெய்யியல் கொள்கை என்பதை இசுலாமிய தத்துவம் என்பர். இது கிரேக்கத் தத்துவத் தொடர்பினால் விரைவாக வளர்ச்சியடைந்தது. இதில் நான்கு விதக் கொள்கைகள் காணப்படுகின்றன.[1]

முத்தாஜல் கொள்கை[தொகு]

இதனை அறிவுக் கொள்கை (Rationalism)[2] என்றும் கூறுவர். முகம்மதுநபி மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றதை ஹெஜிரா என்பர். அது 622-ல் நிகழ்ந்தது. அதிலிருந்தே இசுலாமிய ஆண்டு தொடங்குகின்றது. அது தொடங்கி ஒரு நூற்றாண்டு ஆன பிறகே, இந்தக் கொள்கை ஏற்பட்டது. இதன் ஆதாரத் தத்துவங்கள் கடவுள் ஒருவரே என்பதும், அவர் நீதியுள்ளவர் என்பதுமாம். அவர் நிர்க்குணர். அவர் உளராந்தன்மையே அவருடைய குணங்கள் அனைத்தும் ஆகும். அவர் எல்லா மறிந்தவர்; எல்லா ஆற்றலும் பொருந்தியவர். இவ்விரண்டும், அவருடைய உளராந் தன்மையிலேயே அடங்கினவேயன்றி, வேறான குணங்கள் அல்ல. அவர் நீதியுள்ளவர். ஆதலால், கொடுமை என்பதே அவரிடம் இல்லை. கடவுள் மனிதனுக்குச் செயல் புரியும் சுதந்திரத்தை அளித்துளார். அதனால், மனிதன் தன்னுடைய செயல்களுக்குத் தானே பொறுப்பாளி. புண்ணியம் செய்தால் இன்பமும், பாவம் செய்தால் தண்டனையும் பெறுவான்.

இந்தக் கொள்கையை ஏற்படுத்தியவர் வாசில் பின் அட்டா (இ.748). இதைப் பின்னர்த் தெளிவாக விளக்கியவர், அபுல் ஹுதாயில் அல்லாப் (இ. 840). இந்த அறிவுக் கொள்கையினர் கடவுளுடைய ஒருமையையும் நீதியையும் ஏற்றுக் கொள்வதால் ' அஹல் அத்தாஹித்வால் அதல்', அதாவது கடவுள் ஒருமையையும் நீதியையும் நம்புவோர் என்று, தங்களுக்குப் பெயர் வைத்துக்கொண்டார்கள். இன்னும் இவர்களுடைய மற்ற முக்கியக் கொள்கைகள், திருக்குர்ஆன்[3] நித்தியமானது என்பதை மறுப்பதும், கடவுட் காட்சி கிடைக்க முடியாதது என்பதும் ஆகும். ஞானம் கடவுளுடைய குணம்; அது குர் ஆனில் வெளிப்படுகிறது.

அஷாரிக் கொள்கை[தொகு]

இக்கொள்கையை, இசுலாம் மதப்பற்றுக் கொள்கை என்பர். இது முத்தாஜல் கொள்கையை எதிர்ப்பதற்காக ஏற்பட்டது. இதனை ஏற்படுத்தியவர் அபுல் ஹாஸன் அல் அஷாரி. அவர் 40 வயது வரை முத் தாஜல் கொள்கையினராகவே யிருந்தார். ஆனால் நபி நாயகம் அவர்கள் அவருடைய கனவில் வந்து, குர்ஆனையும் நபி உபதேசங்களாகிய ஹதீதையும் பின்பற்றும்படி கூறியதாகவும், பிறகு அவர் முத்தாஜல் கொள்கையை எதிர்க்கத் தலைப்பட்டதாகவும் கூறுவர். அவர் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை, எழுதினதாகச் சொல்வதுண்டு. கடவுள் அருளாலன்றி எதையும் அறியமுடியாது என்பதும், எந்த மதத்தையும் வெறும் அறிவை மட்டும் துணையாகக் கொண்டு அமைக்க முடியாது என்பதும், கடவுளுக்குக் குணமுண்டு என்ப தும் ஆகும்.

சூபிக்கொள்கை[தொகு]

யாமி, சூபி கவிஞர்

இதனை அனுபூதி மார்க்கம் என்பர். இக் கொள்கை அழியா முத்தி பெறுவதற்காக மனத்தைத் தூய்மை செய்து கொள்ளவும், அறநெறியில் நிற்கவும், அகவாழ்வு புறவாழ்வு இரண்டையும் ஒழுங்கு செய்யவும் கற்பிக்கிறது. நித்திய முத்தியே அதன் குறிக்கோள்; ஆன்மாவைத் தூய்மை செய்வதே அதற்காக அது கூறும் நெறி. குர்ஆனில் கடவுள் கூறிய கட்டளைகளும், நபிநாயகம் அவர்கள் கூறியுள்ள கடமைகளும் அறிவுள்ள மக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டியவை என்று இந்த மார்க்கம் போதிக்கின்றது. முஸ்லிம்களுடைய உள்ளும் புறம்புமான வாழ்க்கையைத் திருத்திப் புனிதமாக்கும் இசுலாமிய மதக் கட்டுப்பாட்டு முறையே சூபிக் கொள்கை ஆகும்.ஆயினும் சூபிக் கொள்கையின் பொருள் முழுவதும் இவ்வளவேயன்று, இன்னுமுளது. அதற்கு மறைபொருளும் (Esoteric) உண்டு.[4] அந்தப் பொருளில் கடவுளுக்கும் தனக்குமுள்ள உண்மையான உறவை அறிபவனே, சூபி ஆவான். இத்தகைய மறைபொருட் சூபிக் கொள்கையை, முதன் முதல் விளக்கியவர் எகிப்து நாட்டினரான துன்நூன் என்பவர் என்று, சூபிக் கொள்கையைப் பற்றி எழுதியுள்ள பாரசீக ஆசிரியர்களுள் ஒருவரான ஜாமி கூறுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அராபிய_மெய்யியல்_கொள்கை&oldid=2892326" இலிருந்து மீள்விக்கப்பட்டது