அரச தொடுதல்

அரச தொடுதல் ( மன்னரின் தொடுதல் என்றும் அழைக்கப்படுகிறது) (royal touch also known as the king's touch) என்பது நோயுற்றவரை அரசர் தன் கைகளால் தொடுவதாகும். இதனால் அந்த நோயாளியின் உடல் நிலை சரியாகும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. இவ்வாறு பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய மன்னர்கள் சமூக வகுப்புகளைப் பொருட்படுத்தாமல் தங்கள் குடிமக்களைத் தொட்டு, அவர்களைப் பல்வேறு நோய்களில் இருந்து குணப்படுத்த முயன்றனர். [1] [2] [3] [4] இந்த குணப்படுத்தும் முறையானது, பொதுவாக காசநோய் சார்ந்த கழுத்து நிணநீர் அழற்சியால் (காச நோய் சீழ்க்கட்டிப்புரை அல்லது ராஜநோய் என்று பரவலாக அறியப்படும் நோய்) பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் 16 ஆம் நூற்றாண்டு முதல் பிரத்தியேகமாக அவர்களுக்கே பயன்படுத்தப்பட்டது. [2] இந்த நோய் அரிதாகவே மரணத்தை விளைப்பதாக இருந்தது, மேலும் பெரும்பாலும் தானாகவே குணமடைந்துவிடுவதாகும். எனவே இது, மன்னரின் தொடுதலாலே குணமானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. [4] தங்கள் ஆட்சியின் சட்டப்பூர்வத்தன்மையையும், புதிதாக நிறுவப்பட்ட தங்கள் வம்சத்தின் நியாயத்தன்மையையும் நிரூபிக்க விரும்பிய மன்னர்களால், இந்த நடைமுறை மிக முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது.
தோற்றம்
[தொகு]
இங்கிலாந்தை ஆண்ட மன்னர்களும், அரசிகளும், பிரான்சின் மன்னர்கள் மட்டுமே நோயுற்றவர்களைத் தொட்டு அல்லது தீண்டி குணப்படுத்தும் தெய்வீக வரத்தை ( டிவினிடஸ் ) [4] உரிமை கொண்டாடிய ஒரே கிறித்தவ ஆட்சியாளர்கள் ஆவர். [2] இந்தச் சிறப்பு நம்பிக்கையானது, அந்த இரண்டு முடியாட்சிகள் மீதும் கடவுளின் ஆசி உள்ளதற்கு ஒரு சான்றாகக் கருதப்பட்டது. இருப்பினும், இந்த நடைமுறை முதலில் யாருடைய முன்னோர்களிடம் இருந்து வந்தது என்பதில் ஒத்த கருத்து இல்லை. இங்கிலாந்தில், புனித எட்வர்ட் தி கன்ஃபெசர் (ஆட்சி: 1042–1066) அரச தொடுதலில் குணப்படுத்தும் சக்தியைப் பெற்ற முதல் மன்னர் என்று கூறப்பட்டது. [2] பொதுவாகத் தங்கள் மன்னர்கள் தெய்வீக சக்தியைக் கொண்டவர்கள் என்பதை முதலாம் பிலிப் (ஆட்சிக்காலம் 1059–1108) அல்லது இரண்டாம் ராபர்ட் (ஆட்சிக்காலம் 987–1031) வரை கண்டறிந்த பிரெஞ்சுக்காரர்கள், புனித எட்வர்ட் அரச தொடுதலைச் செய்தார் என்பதை மறுத்தனர். இந்தத் வரம் உள்ளதாக அதைப் பயன்படுத்திய முதல் ஆங்கிலேய மன்னர் முதலாம் ஹென்றி (ஆட்சிக்காலம் 1100–1135) என்றும், அவர் தொட்டு குணப்படுத்தும் செயல் பிரெஞ்சு மன்னர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு வரத்தின் அரசியல் ரீதியான போலியான நகல் என்றும் அவர்கள் கூறினர். [2]
மருத்துவர் ஆண்ட்ரே டு லாரன்ஸ் (1558–1609), முதலாம் குளோவிஸ் (ஆட்சி: 481–511) தான் கழுத்துக்கழலை நோயைத் தொட்டு குணப்படுத்திய முதல் அரசர் என்று கூறினார். ஆனால் இடைக்கால வரலாற்றாசிரியரான மார்க் ப்ளாச் (1886–1944) அது அநேகமாக முதலாம் பிலிப்பாக இருக்கலாம் என்று வாதிட்டார். நவீன அறிஞர்கள், குறிப்பாக ஃபிராங்க் பார்லோ (1911–2009), பிரெஞ்சுப் பழக்கம் பெரும்பாலும் புனித ஒன்பதாம் லூயி மன்னரிடமிருந்து (ஆட்சி: 1226–1270) தோன்றியிருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். [4] இங்கிலாந்தில் அரச தொடுதல் பற்றிய ஆரம்பகால நேரடிச் சான்றுகள், முதலாம் எட்வர்ட் (ஆட்சிக் காலம் 1272–1307) ஆட்சிக் காலத்திலிருந்து வந்த நிதிப் பதிவுகளாகும். சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்த முதலாம் எட்வர்ட் 1274 ஆண்டு வரை இங்கிலாந்துக்குத் திரும்பவில்லை, ஆனால் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு பென்னி கொடுக்கும் வழக்கம் 1276-ஆம் ஆண்டிற்குள் நன்கு நிலைபெற்றிருந்தது. அந்தப் பழக்கம் குறைந்தபட்சம் அவருடைய தந்தை மூன்றாம் என்றியின் (ஆட்சிக்காலம் 1216–1272) காலத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. தன்னிச்சையான முடிவுகளில் பிடிவாதமாக இருந்ததற்காக அறியப்பட்ட மூன்றாம் என்றி, பொது நிகழ்ச்சிகளை விரும்பினார். மேலும் தன் அன்புக்குரிய மைத்துனரான புனித ஒன்பதாம் லூயிசைப் போலவே பக்தியுள்ளவராகவும் இருந்தார். இந்த அம்சங்கள் அனைத்தும், அவரே இங்கிலாந்தில் அந்தப் பழக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்ற சாத்தியத்தை ஏற்படுத்துகின்றன. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lane Furdell, Elizabeth (2001). The Royal Doctors, 1485–1714: Medical Personnel at the Tudor and Stuart Courts. University Rochester Press. p. 190. ISBN 1580460518.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Sturdy, David J. (1992). "The Royal Touch in England". European Monarchy: Its Evolution and Practice from Roman Antiquity to Modern Times. Franz Steiner Verlag. p. 190. ISBN 3515062335.
- ↑ Krieger, Dolores (2002). Therapeutic Touch as Transpersonal Healing. Lantern Books. pp. 7–9. ISBN 1590560108.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Finley-Crosswhite, Annette (2003). Princes and Princely Culture: 1450–1650. BRILL. pp. 139–144. ISBN 9004135723.
- ↑ Barlow, Frank (1983). The Norman Conquest and Beyond. Continuum. pp. 9, 44–47. ISBN 0826443931.