அரச திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரச திருமணம் (Marriage of state) என்பது வெவ்வேறு தேச அரசுகளின் தரப்பினர்களுக்கிடையில் அல்லது உள்நாட்டில் உள்ள இரண்டு அதிகாரப் பிரிவினருக்கிடையே கூட்டணிக்காக செய்யப்படும் இராசதந்திர ரீதியிலான திருமணம் ஆகும். இது மேற்கத்திய கிரேக்க கலாச்சாரங்களில் இருந்து தமிழகம் வரை பண்டைய காலங்களில் இருந்து வந்த ஒரு நடைமுறையாகும்.

ஐரோப்பா[தொகு]

7 திசம்பர், 1697 அன்று அன்டோயின் டியூவால் பர்கண்டி டியூக்குக்கு சவோயின் மேரி அடிலெய்டுடன் நடக்கும் திருமணம்

சமகால மேற்கத்திய வாழ்வில் திருமணமானது காதலிக்கும் இரு நபர்களுக்கிடையேயான ஒரு தனித்துவமான பிணைப்பாகக் கருதும் அதே வேளையில், பரம்பரை அதிகாரம் இருக்கும் குடும்பங்கள் (அரச குடும்பங்கள் போன்றவை) பெரும்பாலும் திருமணத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்கின்றன. பெரும்பாலும் அரசியல் அல்லது காதல் அல்லாத திருமணங்களில் வாழ்க்கைத் துணைகளின் குடும்பத்தின் செல்வமும் அதிகாரமும் முதன்மையாக கருதப்படுகின்றன. அரசியல், பொருளாதாரம் அல்லது இராஜதந்திர காரணங்களுக்காக திருமணம் செய்துகொள்வது பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய ஆட்சியாளர்களிடையே இருந்ததுவந்தது. [1]

ஒரு அரச குடும்பத்தின் அந்தஸ்தைத் தக்கவைக்க வாழ்க்கைத் துணையை கவனமாகத் தேர்ந்தெடுப்பது அவசியமாக இருந்தது. ஏனெனில் ஒரு இளவரசரோ, மன்னரோ, அரச குருதியைச் சேராத ஒரு சாமானியரை மணந்தால், அதற்கு அரச குடுமும்பத்தின் ஒப்புதல் இருந்தாலும் கூட, மன்னருக்கும், சாமானியருக்கும் பிறந்தவர் அரசரின் மகன் என்ற முறையில், தன் தந்தைக்குப் பிறகான அரச பதவியைக் கோர முடியாது என்ற நிலை இருந்தது. [1]

பாரம்பரியமாக, அரச திருமணங்களை ஏற்பாடு செய்வதில் பல காரணிகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. அத்தகைய காரணிகளில் ஒன்றாக, சம்மந்தம் வைத்துக் கொள்ளும் அரச குடும்பத்தால் ஆளப்படும் அல்லது கட்டுப்படில் உள்ள நிலப்பகுதிகளின் அளவு கருத்தில் கொள்ளப்பட்டது. [1] மற்றொரு காரணி அரசியல் கூட்டணி திருமணம் என்பது அரச குடும்பங்கள் மற்றும் நாடுகளிடையே அமைதியை நிலைநாட்ட, ஒற்றுமையை உண்டாக்க ஒரு முக்கிய வழியாக இருந்தது. [1]

சமயத்தின் முக்கியத்துவம்[தொகு]

எப்போதுமே சமயம் அரசியல் விவகாரங்களுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இன்றும் பல நாடுகளில் இது தொடர்கிறது. அரச குடும்பங்களுக்கிடையேயான திருமணங்களில், குறிப்பாக உத்தியோகபூர்வ சமயம் இருந்த நாடுகளில் சமயக் கருத்துக்கள் பெரும்பாலும் முக்கியமானவையாக இருந்தன. ஒரு அரச குடும்பம் தனது பிள்ளைகளில் ஒருவரின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யத் தயாராகும் போது, அதே சமயத்தைப் பின்பற்றும் துணையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமானது. அல்லது குறைந்தபட்சம், திருமணத்திற்கு முன் மணமகள் சமயம் மாறத் தயாராக இருக்க வேண்டும். கத்தோலிக்கரல்லாத அரச குடும்பங்களில், கத்தோலிக்கராக இருக்கும் ஒருவரை திருமணம் செய்வது மோசமான விசயமாக இருந்தது. [1] 1701 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேற்றச் சட்டத்தின்படி, கத்தோலிக்கரை மணந்த எவரும் அரியணை ஏறுவதை தடை செய்தது. ஒரு சீர்திருத்தக் கிறித்துவ இளவரசர் கத்தோலிக்க சமயத்துக்கு மாறியபோது, அவர் தனது குடும்பத்தினரால் ஏற்க்கப்படவில்லை. [1] அவர் அரியணை ஏறாமல் தடுக்கப்பட்டார். ஐரோப்பாவில் சமயப் போர்கள் முடிந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இந்தச் சட்டங்களில் சில தொடர்ந்து நடைமுறையில் இருந்தன.

உரோமன் கத்தோலிக்க நாடுகளில் இதே போன்ற சட்டங்களும் கண்டிப்புகளும் இருந்தன. உதாரணமாக, பிரான்சில் கத்தோலிக்கரல்லாதவர்களை அரியணையில் ஏறுவதை தடை செய்தது. கத்தோலிக்கரல்லாத அரச குடும்பத்தில் திருமணம் செய்வதை சட்டம் தடை செய்யாவிட்டாலும், இளவரசர்களை அவ்வாறு செய்யாமல் தடுக்க அரசியல் சூழ்நிலைகளும் மக்களின் உணர்வுகளுமே போதுமானதாக இருந்தன.

இந்தியத் துணைக்கண்டம்[தொகு]

இந்தியத் துணைக்கண்டத்தில் அரசுகளுக்கிடையே அமைதி முயற்சி மற்றும் கூட்டணிகளின் ஒரு பகுதியாக திருமண உறவுகள் இருந்தன. சோழர்கள் அரசியல் கூட்டணியில் ஒரு பகுதியாக கீழைச் சாளுக்கியருடன் மண உறவுகளைக் கொண்டிருந்தனர்.

மேலும் அரச பதவிக்கு வருபவர்கள் அரச குருதியைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்று பார்க்கபட்டது. இலங்கையின் தொன்மங்களில் கூறப்படும் விசயன் இலங்கை வந்து சேர்ந்தவுடன் தனக்கு உதவிய குவேனி என்ற என்ற பெண்ணை மணக்கிறான். ஆனால் தனக்கு வாரிசாக அரச குருதியைச் சேர்ந்தவனே வரவண்டும் என்பதற்காக தமிழகத்தின் பாண்டிய அரசனின் மகளை மணந்து அரச வாரீசை பெறுகிறான்.

வரலாற்றின் பிற்காலத்தில் சாதியும் அரச பதவிக்கு வருவதற்கான ஒரு தகுதியாக இருந்தது. இராமநாதபுரம் இராச்சியத்தில் அரசபதவிக்கு வருபவர் மன்னருக்கும் செம்பிநாட்டு மறவர் குலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் பிறந்தவராக இருப்பது அவசியமானதாக இருந்தது. அவ்வாறு இல்லாதவர்களுக்கு அரசு உரிமை மறுக்கபட்டு வந்தது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Fleming, Patricia H. (June 1973). "The Politics of Marriage Among Non-Catholic European Royalty". Current Anthropology 14 (3): 231–249. doi:10.1086/201323. https://archive.org/details/sim_current-anthropology_1973-06_14_3/page/231. 
  2. எஸ். எம். கமால் (2003). "சேதுபதி மன்னர் வரலாறு/ii. முத்து விஜயரகுநாத சேதுபதி". நூல். சர்மிளா பதிப்பகம். pp. 53–55. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_திருமணம்&oldid=3833207" இலிருந்து மீள்விக்கப்பட்டது