அரசு மத்திய அச்சகம், சென்னை

ஆள்கூறுகள்: 13°06′13″N 80°16′48″E / 13.103542°N 80.280084°E / 13.103542; 80.280084
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மத்திய அச்சகம் (Government Central Press) தமிழகத்தில் சென்னையில் உள்ள அச்சகம் ஆகும். இங்கு  தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சிடும் துறை உள்ளது. இந்த அச்சகத்தில் மாநில அரசின் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் அரசுப் பதிவுகளை பராமரிக்கும் பணியும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்போது, இந்த அச்சகத்தின் கட்டுப்பாட்டில் எட்டு கிளை அச்சகங்கள் மற்றும் எழுதுபொருள் கடைகள் இயங்கி வருகின்றன. 2017 ஆம் ஆண்டில், இந்தத் துறையில் 433 பெண்கள் உட்பட 1,646 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். [1] 

வரலாறு[தொகு]

இந்த கட்டிடம் 1807 ஆம் ஆண்டில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டது . அரசு மத்திய அச்சகம் 17 டிசம்பர் 1831 ஆம் நாளன்று நிறுவப்பட்டது. [1]

கட்டிடம்[தொகு]

அரசு அச்சகக் கட்டடம் எல் வடிவ ஒற்றை மாடி கட்டிடம் ஆகும். இந்தக் கட்டடம் 5.5 ஏக்கர் நிலத்தில் 36,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. [2][1]இந்த வளாகத்தில் இருந்த சரக்கறை 2013 ஜூன் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் நாசமானது. 2017 ஆம் ஆண்டில், ரூ.125 மில்லியன் செலவில் இந்த கட்டடத்தைப் புதுப்பித்து அமைக்க அரசு முன்மொழிவினைத தந்தது.

அச்சகம் மற்றும் அதன் செயல்பாடுகள்[தொகு]

அரசு மத்திய அச்சகம், சென்னையில் ஜார்ஜ் டவுனில் உள்ள மிண்ட் தெரு என்று அழைக்கப்படுகின்ற தங்கசாலைத் தெருவில் உள்ள மிண்ட் கட்டிடங்களில் அமைந்துள்ளது. இது 5.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அச்சகத்தில் 880 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். [1]

இந்த அச்சகத்தில் அரசு மத்திய அச்சகம், அரசு எழுதுபொருள் கடைகள் மற்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் உள்ள அரசு கிளை அச்சகம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் நகரத்திலேயே அமைந்துள்ளன. இதற்கான கிளை அச்சகங்கள் மதுரை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, விருத்தாசலம், மற்றும் மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்ற கட்டிடங்களில் இயங்கி வருகின்ற அரசு கிளை அச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தின் அச்சிடும் பணிகளை பூர்த்தி செய்து வருகிறது. [1]

இந்த அச்சகமானது சேவைத் துறை என்ற அளவில் தமிழக அரசால் கருதப்படுகிறது. தமிழக அரசின் அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் தொடர்பான அச்சுப் பணிகளும்இந்த அச்சகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரச மத்திய அச்சகத்தில் அரசிதழ்கள், சட்டசபை விவாதங்கள், அறிக்கைகள், நிதி நிலை அறிக்கைகள், பருவ மலர்கள், தேர்தல் ஆவணங்கள், கணக்காளர் நாயகத்தின் அறிக்கைகள், மோட்டார் வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள், அரசு அலுவலர்களின் கடித முகப்புகள், அரசு விதி முறைகள், கையேடுகள், பருவ இதழ்கள், படிவங்கள் மற்றும் பதிவேடுகள் மற்றும் அரசாங்க தேர்வுக்குரிய பொருட்கள் உள்ளிட்டவை அச்சிடல் போன்ற முக்கிய செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. [1]

பொதுமக்கள் சேவை[தொகு]

இந்த அச்சகமானது பொதுமக்களுடன் நல்ல உறவினைப் பேணி வருகிறது. பிறப்புச் சான்றிதழ் தொடங்கி இறப்புச் சான்றிதழ் வரை அனைத்து வகையான சான்றிதழ்களையும் இது அச்சிடுகிறது. அனைத்திற்கும் மேலாக உரிய காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் உரிய நேரத்தில் உரிய துறைக்கு அனுப்பி வருகிறது. அரசு எழுதுபொருள் அங்காடி என்பது ஆண்டுதோறும் அரசிற்கு எழுதுபொருள் தொடர்பானவற்றை வழங்குவதற்காக மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக அமைந்து செயல்பட்டு வருகிறது. [1]


மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "History of Stationery and Printing Department". Stationary and Printing Department. Government of Tamil Nadu. n.d. பார்க்கப்பட்ட நாள் 17 December 2017.
  2. . Chennai. 

வெளி இணைப்புகள்[தொகு]