அயனிய ஒழுங்கு


அயனிய ஒழுங்கு என்பது, செந்நெறிக்காலக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகளுள் அல்லது ஒழுங்கமைப்பு முறைமைகளுள் ஒன்று ஆகும். ஏனைய இரண்டு ஒழுங்குகள் டொரிய, கொறிந்தியன் என்பன. இவை தவிர தசுக்கன், கூட்டு என்னும் இரண்டு ஒழுங்குகள் 16 ஆம் நூற்றாண்டு இத்தாலியில் சேர்க்கப்பட்டன.
அயனிக் ஒழுங்கு கிமு 6 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் அயோனியாவில் உருவானது. அயோனியா, அயோனிய மொழி பேசிய கிரேக்கர்கள் குறியேறி இருந்த சின்ன ஆசியாவின் கரையோரப் பகுதிகளையும், தீவுகளையும் உள்ளடக்கியிருந்தது. அயனிக் ஒழுங்கில் அமைந்த தூண்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரீசுத் தலைநிலப் பகுதியில் புழக்கத்தில் இருந்தது. ரோய்க்கோசு என்னும் கட்டிடக்கலைஞரால், கிமு 570க்கும் 560 க்கும் இடையில் கட்டப்பட்ட சாமோசில் உள்ள ஹேரா கோயிலே அயனிய ஒழுங்கில் கட்டப்பட்ட முதல் பெரிய கோயில் ஆகும். இக் கோயில் பத்தாண்டுக் காலம் மட்டுமே இருந்து, பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாகத் தரைமட்டம் ஆகியது. நீண்டகாலம் நிலைத்திருந்த அயனிய ஒழுங்கில் அமைந்த கோயில் எபெசசு என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆர்ட்டெமிசு கோயில் ஆகும். இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக விளங்கியது.
கிரேக்க டொரிய ஒழுங்கைப் போலன்றி அயனிய ஒழுங்கில் தூண் ஒரு அடித்தளத்தின் மீது அமைந்திருந்தது. இந்த அடித்தளம் தூண் தண்டை அதைத் தாங்கிய மேடையில் இருந்து பிரித்தது. இத் தூண்களின் போதிகைகள் இரட்டை நத்தையோடு போன்ற சுருள் வடிவம் கொண்டவையாக இருந்தன.