உள்ளடக்கத்துக்குச் செல்

அயனிச் சேர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு எளிய படிகச் சேர்மமான சோடியம் குளோரைடின் (NaCl) படிக அமைப்பு. செவ்வூதா நிறக் கோளங்கள் சோடியம் நேரயனிகளையும், Na+, மற்றும் பச்சை நிறக் கோளங்கள்  குளோரைடு எதிரயனிகளையும், Cl− குறிக்கின்றன..

வேதியியலில், ஒரு அயனிச் சேர்மம் என்பது ஒரு அயனிகளுக்கிடையே உள்ள நிலைமின்னியல் கவர்ச்சி விசைகளினால் பிணைக்கப்பட்ட அயனிகள் அயனிப் பிணைப்பால் இணைந்த வேதிச் சேர்மம் ஆகும்.  ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது சேர்மமானது மின்சுமையற்றதாக அதாவது நடுநிலையானதாக இருக்கும். ஆனால், நேர்மின் சுமை கொண்ட நேரயனிகளையும், எதிர்மின்சுமை கொண்ட எதிரயனிகளையும் கொண்ட சேர்மமாகும். இவை சோடியம் குளோரைடில் காணப்படுவது போன்ற சோடியம்(Na+) மற்றும் குளோரைடு (Cl) போன்ற எளிய அயனிகளாகவோ அல்லது அம்மோனியம் கார்பனேட்டில் காணப்படுவது போன்று அம்மோனியம்(NH+
4
) மற்றும் கார்பனேட்டு (CO2−
3
) போன்ற பல்லணு அயனிகளாகவோ காணப்படலாம். ஒரு அயனிச் சேர்மத்திலுள்ள தனித்த அயனிகள் வழக்கமாக, பல அருகாமை அயனிகளை அக்கம்பக்கத்தில் கொண்டிருக்கலாம். ஆகவே, இவை மூலக்கூற்றின் பகுதிகளாக கருதப்படுவதில்லை. ஆனால், இதற்குப் பதிலாக, படிக அமைப்பில் இவை தொடர் முப்பரிமாண வலைப்பின்னலில் ஒரு பகுதியாக இருக்கின்றன.

நீரிய மின்மிகளைக்(H+) கொண்டுள்ள அயனிச் சேர்மங்கள் காடி அல்லது அமிலம் என வகைப்படுத்தப்பட்டும், கார அய்தராக்சைடு (OH) அல்லது ஆக்சைடு (O2−) அயனிகளைக் கொண்டவை காரம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அயனிகளைக் கொண்டிராத அயனிச் சேர்மங்கள் உப்புகள் என அழைக்கப்படுகின்றன. இவை அமில-கார வினைகளினால் உருவாக்கப்படலாம். அயனிச் சேர்மங்கள் அவை உருவாகக் காரணமான அயனிகளிலிருந்து கரைப்பானின் ஆவியாதல், வீழ்படிவாதல், உறைதல், திண்ம நிலை வினைகள் அல்லது வினைத்திறன் மிக்க உலோகங்கள் வினைத்திறன் மிக்க அலோகங்களுடன்  இலத்திரான் மாற்ற வினைகள் மூலமாகவும் தயாரிக்கப்படலாம்.

அயனிச் சேர்மங்கள் இயல்பாக அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளன. மேலும், அயனிச்சேர்மங்கள் கடினமாகவும் நொறுங்கும் தன்மை உடையனவாகவும் காணப்படுகின்றன. திண்மமாக இருக்கும் போது மின் கடத்தாப் பொருட்களாகவும், ஆனால், உருகிய நிலையிலோ அல்லது கரைந்த நிலையிலோ அயனிகள் இயங்கும் வாய்ப்பைப் பெறுவதால் அதிக மின் கடத்தும் திறனைப் பெற்றவையாகவும் உள்ளன.

வரலாறு மற்றும் கண்டுபிடிப்பு

[தொகு]

அயனி (ஆங்கிலத்தில் ion என்ற வார்த்தை கிரேக்கத்தில் (ἰόν, ion), "போகின்ற" அல்லது (ἰέναι,ienai), "போவதற்கு" கொண்டுள்ளது. இந்த வார்த்தையானது ஆங்கிலேய இயற்பிலார் மற்றும் வேதியியலார் மைக்கேல் பாரடேவால் 1834 ஆம் ஆண்டு அறியப்படாத ஒரு பகுதி நீர்க்கரைசலில் ஒரு மின்வாயிலிருந்து மற்றொரு மின்வாய்க்குச் செல்வதைக் கண்ட போது சூட்டப்பட்டது.[1][2]

பிராக் என்பவரால் வடிவமைக்கப்பட்ட X-கதிர் நிறமாலைமானி

1913 ஆம் ஆண்டில் சோடியம் குளோரைடின் படிக அமைப்பானது வில்லியம் ஹென்றி பிராக் மற்றும் வில்லியம் லாரன்ஸ் பிராக் ஆகியோரால் கண்டறியப்பட்டது.[3][4][5] இது ஆறு சமதூரத்திலுள்ள அருகாமையிலுள்ள அடுத்தடுத்த அணுக்கள், படிக அமைப்பில் பங்கு பெறும் அணுக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட மூலக்கூறுகளாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட கூட்டுப்பொருட்களாகவோ இல்லை என்பதையும், மாறாக படிக ஒழுங்கில் ஒரு நீள்-தொடர் வலையமைப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர்த்தியது.[5] இன்னும் பல கனிமச் சேர்மங்கள் கூட இத்தகைய அமைப்பு பண்புகளையே கொண்டுள்ளது கண்டறியப்பட்டது.[5] விரைவிலேயே, இத்தகைய சேர்மங்கள் நடுநிலையான அணுக்களால் அல்லாமல் அயனிகளால் ஆக்கப்பட்டவையாக இருக்கக்கூடும் என வரையறுக்கப்பட்டன. ஆனால், இந்தக் கருதுகோளுக்கான நிரூபணம் 1920-களின் மத்திய காலம் வரை கண்டறியப்படவில்லை. 1920-களின் மத்தியில் X-கதிர் விலகல் சோதனைகள் நிகழ்த்தப்பட்டு எதிர்மின்னிகளின் அடர்வு கண்டறியப்பட்ட பிறகே முன்னர் கூறிய கருதுகோளுக்கான நிரூபணம் கிடைத்தது.[5][6]

மாக்ஸ் போர்ன், ஃபிரிட்ஸ் ஹேபர், ஆல்பிரட் லாண்டே, எர்வின் மாதேலுங், பால் பீட்டர் எவால்டு, மற்றும் காசிமியெர்சு பாஜன்சு ஆகியோர் அயனி படிக அமைப்பைப் பற்றிய கருத்தியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த முதன்மையான அறிவியலாளர்கள் ஆவர்.[7] போர்ன் அயனிக்கூறுகளின் அடிப்படையில் ஊகித்த படிக ஆற்றல்கள் கணிப்பானது (வெப்பவேதியியல் அளவீடுகளோடு நல்லதொரு தொடர்பைக் கொண்டிருந்தன) அயனிச் சேர்மங்களின் உருவாக்கம் தொடர்பான ஊகங்களுக்கு மேலும் வலுசேர்த்ததெனலாம்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Michael Faraday (1791–1867).UK:BBC.
  2. "Online etymology dictionary". Archived from the original on 2011-05-14. பார்க்கப்பட்ட நாள் 2011-01-07.
  3. Bragg, W. H.; Bragg, W. L. (1 July 1913). "The Reflection of X-rays by Crystals". Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 88 (605): 428–438. doi:10.1098/rspa.1913.0040. Bibcode: 1913RSPSA..88..428B. 
  4. Bragg, W. H. (22 September 1913). "The Reflection of X-rays by Crystals. (II.)". Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 89 (610): 246–248. doi:10.1098/rspa.1913.0082. Bibcode: 1913RSPSA..89..246B. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Sherman, Jack (August 1932). "Crystal Energies of Ionic Compounds and Thermochemical Applications". Chemical Reviews 11 (1): 93–170. doi:10.1021/cr60038a002. 
  6. James, R. W.; Brindley, G. W. (1 November 1928). "A Quantitative Study of the Reflexion of X-Rays by Sylvine". Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 121 (787): 155–171. doi:10.1098/rspa.1928.0188. Bibcode: 1928RSPSA.121..155J. 
  7. Pauling 1960, ப. 505.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனிச்_சேர்மம்&oldid=3585957" இலிருந்து மீள்விக்கப்பட்டது