உள்ளடக்கத்துக்குச் செல்

அம்புலுவாவ கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்புலுவாவ கோபுரம்

அம்புலுவாவ இலங்கை கண்டி மாவட்டத்திலுள்ள ஒரு மலைச்சிகரம் ஆகும். கம்பளை நகரிலிருந்து சுமார் 5 கி. மீ. தொலைவில் உள்ளது. இந்த மலையடிவாரத்தில் உள்ள கிராமம் கொடகம என அழைக்கப்படுகிறது.

பண்டைய வரலாறு

[தொகு]

14 ஆம் நூற்றாண்டில் கண்டி இராச்சியத்தை ஆண்ட நான்காம் புவனேகபாகு கம்பளை நகரைத் தலைநகராகக் கொண்டு இந்த இடத்தில் தன் அரண்மனையைக் கொண்டிருந்தான் என வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தை பிரிட்டன் கைப்பற்றிய பின்னர் இந்தப் பிராந்தியத்தில் இருந்த வரலாற்று உட்கட்டமைப்புகள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டு அந்த நிலம் காபி சாகுபடிக்குப் பயன்படுத்தப்பட்டது.

மத, கலாசார முக்கியத்துவம்

[தொகு]

இந்த இடத்தின் பண்டைய கலாசார, மத வரலாற்றைக் கருத்தில் கொண்டு 1997 ஆம் ஆண்டு இந்த இடம் இலங்கை அரசால் மீள் புனரமைக்கப்பட்டது.[1] மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக மலை உச்சியில் பௌத்த ஆலயம், இந்து கோவில், கிறீஸ்தவ தேவாலயம், இஸ்லாமிய மசூதி ஆகியவை கட்டப்பட்டுள்ளன. பௌத்த ஆலயத்தின் முன்னால், அநுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரசு மரத்தின் கிளை ஒன்று எடுத்துவரப்பட்டு இங்கு நாட்டப்பட்டுள்ளது.[2]

கோபுரம்

[தொகு]

மலை உச்சியில் ஒரு உயர்ந்த ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. 223 அடி உயரமுள்ள இந்தக் ஸ்தூபி விவசாய சமூகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அடித்தளம் ஒரு அரிசி தானியத்தையும், இரண்டாவது அடுக்கு காய்கறி விவசாயத்தையும், மூன்றாவது அடுக்கு பழ விவசாயத்தையும் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நான்காவது அடுக்கில் நினைவுச் சின்னங்கள் உள்ள ஸ்தூபியின் உச்சியில் ஒரு கலசம் உள்ளது. ஸ்தூபியில் பல்வேறு நிலைகளில் கண்காணிப்பு தளங்கள் உள்ளன. இவற்றைச் சென்றடைவதற்கு ஒரு குறுகிய சுழல் படிக்கட்டு உள்ளது. ஸ்தூபியின் மேல் ஏறிச்சென்றால் சுற்று வட்டாரக் காட்சிகளை 360 டிகிரி காட்சியாகப் பார்க்க முடியும். இதனால் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குறிய ஓரிடமாகத் திகழ்கின்றது.

வானியல் கண்காணிப்பு கோபுரம்

[தொகு]

இரவு நேரங்களில் வானத்தைக் கண்காணிக்கக்கூடிய ஒரு கண்காணிப்புக் கோபுரம் இந்த வளாகத்தில் உள்ளது. இது பெரும்பாலும் மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

பல்லுயிர் வளாகம்

[தொகு]

அம்புலுவாவா ஒரு பல்லுயிர் வளாகமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி அரிப்பை எதிர்க்கும் ஒரு இன்செல்பெர்க் புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. இலங்கையின் அதிக மழைப்பொழிவு மற்றும் வளமான நிலைமைகள் காரணமாக, மலை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பல்வேறு வகையான தாவரங்களுக்கு தாயகமாக உள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள பல்லுயிர் பூங்கா பல அரிய மற்றும் உள்ளூர் தாவர இனங்களைப் பாதுகாக்கிறது, இது இந்த இடத்தை கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பாரம்பரியத்தின் கலவையாக மாற்றுகிறது.[3]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Ambuluwawa Dissanayake Mudiyanselage Jayaratne Religious Centre and Bio-Diversity Complex Trust Fund Act, No. 44 of 2009" (PDF). Lanka Law. 21 August 2009. Retrieved 21 November 2025.
  2. "Things to Do". ambuluwawa.com. 8 January 2024. Retrieved 21 November 2025.
  3. "Ambuluwawa Tower and Biodiversity Complex". Lankapradeepa - Gateway to Sri Lanka. 30 March 2024. Retrieved 21 November 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்புலுவாவ_கோபுரம்&oldid=4410321" இலிருந்து மீள்விக்கப்பட்டது