அம்பித்தியோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆம்பிக்தியோனி (amphictyony, கிரேக்கம்: ἀμφικτυονία, ஆம்பிக்தியோனியா) என்பது பண்டைய கிரேக்க "அண்டை நாடுகளின் கூட்டடமைப்பு" அல்லது ஆம்பிக்தியோனியக் கூட்டமைப்பு (Amphictyonic league) ஆகும். இது கிரேக்க பொலிசின் எழுச்சிக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பண்டைய கிரேக்க சமயத்தைச்[1] சேர்ந்த இனக்குழுவினரின் கூட்டமைப்பு ஆகும்.[2] கடலோர தென்மேற்கு அனடோலியாவின் ஆறு டோரியன் நகரங்கள் அல்லது வடக்கே உள்ள பன்னிரண்டு அயோனியன் நகரங்கள் கிமு 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மெலியாக் போருக்குப் பிறகு அயோனியன் கூட்டமைப்பை உருவாக்கின.

டெலோசில் உள்ள அப்பல்லோவின் சன்னதியின் கீழ் கிரேக்க அரசுகளின் கூட்டவை கி.மு. ஏழாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அங்கு கிரேக்க நாடுகள் கூட்டாக அயோனியன் திருவிழாவை கொண்டாடின. டெலியன் கூட்டமைப்பு கிமு 4 ஆம் நூற்றாண்டில் ஏதெனிய மேலாதிக்கத்தின் ஒரு கருவியாக உருவானது.

வரலாறு[தொகு]

பண்டைய கிரேக்கர்களின் புனிதத்தலமாக டெல்பி விளங்கியது. இது அப்பல்லோ கடவுளை வழிபடுவதற்கான முக்கிய புனிதத்தலமாக இருந்தது. மேலும் இங்கு குறிசொல்லுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இங்கு குறி கேட்பவர்கள், தெய்வத்திடம் பிராத்தினை செய்து கொண்டவர்கள், விழாக்களைக் காணவருபவர்கள் போன்றவர்களிடம் இருந்து ஏராளமான காணிக்கைகள் செலுத்தப்பட்டன. மேலும் பலர் இங்குள்ள கோயிலுக்கு நிலங்களையும் எழுதிவைத்தனர். இதனால் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. இவை அனைத்தையும் நிர்வகிக்க உருவானதே ஆம்ப்பிக்ட்டியோனிக் கூட்டமைப்பு ஆகும்.

கிரேக்கர்கள் பன்னிரண்டு பிரிவாக பிரிக்கபட்டு ஒவ்வோர் இனத்தினரும் இரண்டு பிரதிநிதிகள் விகிதம் இந்த அவைக்கு அனுப்ப உரிமை பெற்றிருந்தனர். ஆண்டுக்கு இந்த அவை கூடும். ஒருமுறை டெல்பியிலும் மறுமுறை தெர்மாப்பில் (Thermopylae) என்ற இடத்தில் கூடும். டெல்பி கோயில் சம்பந்தமான நிலபுலன்கள், சொத்துகள் ஆகியவற்றை அனைவரும் சேர்ந்து காக்கவேண்டும். அதற்காக ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது என பொது நியதிகள் இருந்தன. ஆனால் இந்த நியதிகளை மீறியும் சண்டைகள் நடைபெற்றன. அவை புனிதப் போர்கள் (Sacred Wars) என்று அழைக்கபட்டன.

இந்தக் கூட்டமைப்பு முதலில் கோயல் சொத்துக்களைக் காக்கும் அமைப்பாக துவக்கபட்டாலும், கால ஓட்டத்தில் பன்னாட்டு கிரேக்க கூட்டமைப்பாக மாறி அரசியல் கருவியாக மாறியது. எந்த கிரேக்க நகர அரசு எக்காலம் வரை செல்வாக்கு கொண்டதாக இருக்கின்றதோ அந்த இராச்சியமே இதில் மேலாதிக்கம் செலுத்தியது. முடிந்தமட்டில் கூட்டமைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திவந்தது. என்றாலும் இது கிரேக்கர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு சாதனமாக இருந்தது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Definition. "Amphictyony". 2014. Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2014.
  2. History.com பரணிடப்பட்டது ஏப்பிரல் 23, 2009 at the வந்தவழி இயந்திரம்; Encarta பரணிடப்பட்டது 2009-10-29 at the வந்தவழி இயந்திரம். http://encarta.msn.com/encyclopedia_761565255/Amphictyonic_League.html Archived பரணிடப்பட்டது 2021-01-11 at the வந்தவழி இயந்திரம் 2009-10-31.
  3. வெ. சாமிநாத சர்மா, 1. ஒன்றுபடுத்திய இரண்டு (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். பக். 100-102. 

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பித்தியோனி&oldid=3603689" இலிருந்து மீள்விக்கப்பட்டது