உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பிகா துரந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பிகா துரந்தர்
பிறப்பு(1912-01-04)4 சனவரி 1912
இறப்பு3 சனவரி 2009(2009-01-03) (அகவை 96)
தேசியம்• பிரித்தானிய இந்தியர் (1912-1947)
• இந்தியர் (1947-2009)
படித்த கல்வி நிறுவனங்கள்சர் ஜம்சேத்ஜி ஜீஜாபாய் கலைப்பள்ளி
அறியப்படுவதுஓவியக் கலை
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
• சம்யுக்த மகாராட்டிர இயக்கம்
தந்தைம. வி. துரந்தர்

அம்பிகா மகாதேவ் துரந்தர், (Ambika Mahadev Dhurandhar, 4 ஜனவரி 1912-3 ஜனவரி 2009) மும்பையிலுள்ள உள்ள சர் ஜே. ஜே. கலைப்பள்ளியில் ஓவியத்தைப் படித்த முதல் சில பெண்களில் ஒருவர் ஆவார்.[1] இவர் புகழ்பெற்றக் கலைஞர் ம. வி. துரந்தரின் மகள் ஆவார். சர் ஜே. ஜே. கலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான இவரது தந்தை அங்கேயே ஆசிரியராகச் சேர்ந்து பள்ளியின் முதல் இந்திய இயக்குநராக இருந்தார்.

அம்பிகா தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் ஓவியம் கற்றார். தந்தையின் பரந்த கலைப்படைப்புகளை கவனித்தார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் தந்தையின் பாணியிலேயே வரைந்தார். சர் ஜே. ஜே. கலைப் பள்ளியில் கல்விக் கலையின் பொற்காலத்தின் விளைவு இவருடன் வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்தது.[2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ஆரம்பத்தில், துரந்தர் குடும்பம் தாகூர் வீட்டில் வசித்து வந்தது. அம்பிகா அவர்களின் இல்லத்திற்கு அருகில் உள்ள நவ்ரோஜி தெருவிலுள்ள கர்வே பல்கலைக்கழகத்தின் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அதைத் தொடர்ந்து, இடைநிலை வகுப்பு வரை வீட்டிலேயே படித்தார். அம்பிகா ஆரம்பத்தில் இருந்தே கலைகளில் ஆர்வம் கொண்டிருந்ததால், இவரது தந்தை இவரை கலைப் பள்ளியில் ஓவியம் பயில அனுமதித்தார்.[3]

அம்பிகா, ஓவிய வகுப்புகளில் சேர்ந்து ஓவியத் தேர்வுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். 1931 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவ்வாறு பட்டம் பெற்ற இரண்டாவது பெண் இவர்.[4] அமெரிக்கக் கலைஞர் ஏஞ்சலா டிரின்டேட் அந்த நேரத்தில் இவரது சகாக்களில் ஒருவர்.[5][6]

தொழில் மற்றும் தாக்கங்கள்

[தொகு]

புராண மற்றும் வரலாற்றுக் காட்சிகள் அம்பிகாவின் படைப்புகளின் முக்கிய பாடங்களாக இருந்தன.[7] இவரது படைப்புகளில் மனித உருவங்களின் வெவ்வேறு வெளிப்பாடுகளைப் பயன்படுத்தினார். மும்பை கலைச் சங்கக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழா மற்றும் ஆதிசக்தி தனது யோகினிகளுடன் இருப்பது போன்று இவர் வரைந்த ஓவியங்கள் இதற்கு சான்றாக இருந்தன. இந்த நிகழ்வில் இவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.[5]

Painting by Ambika Dhurandhar
அம்பிகா தேவி எனும் ஆதிசக்தி தனது யோகினிகளுடன் (1941)

இதனைத் தொடர்ந்து, இவரது ஓவியங்கள் சிம்லா, தில்லி, பெங்களூரு, மைசூர் மற்றும் கோலாப்பூர் போன்ற இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டன.[7] இங்கு இவரது ஓவியங்கள் பாராட்டைப் பெற்றது. மேலும் இந்த கண்காட்சிகளில் பல விருதுகளையும் வென்றார்.[8]

அம்பிகா தனது குடும்பத்துடன் இந்தியா முழுதும் பயணம் செய்தார். பின்னர் வெளிநாடுகளுக்குத் தனியேச் சென்றார். இவரது தந்தை பல அரச குடும்பத்தாரால் ஓவியங்களை உருவாக்க அடிக்கடி அழைக்கப்பட்டார். பரோடா, குவாலியர், இந்தோர், கோலாப்பூர் போன்ற அரச குடும்பங்களின் அழைப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகு, தனது குடும்பத்துடன் இந்த அரச இல்லங்களில் பயணம் செய்து தங்குவதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.[2]

தந்தையின் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை

[தொகு]

1944 ஆம் ஆண்டில் தனது தந்தை இறந்த பிறகு, அவரது கலைப்படைப்புகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அவரது மாணவர்களின் உதவியுடன் அவற்றை கண்காட்சிகளுக்கு வைத்தார். 1949 ஆம் ஆண்டில், மும்பையின் கர் பகுதியில் துரந்தர் கலைப் பள்ளி என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பல மாணவர்களுக்கு ஓவியத்தைக் கற்பித்தார்.[7]

அம்பிகா இந்திய விடுதலை இயக்கத்திலும் பின்னர் ஐக்கிய மகாராட்டிரா இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். இந்த நிகழ்வுகளுக்காக இவர் சில கலைப்படைப்புகளையும் வரைந்திருந்தார்.[9] 1930 முதல் 1950 வரையிலான தனது பயணங்களின் நினைவுகளைப் பற்றி அம்பிகா குறிப்புகள் எழுதியிருந்தார். இவரது மரணத்திற்குப் பிறகு 2010 ஆம் ஆண்டில் அந்தக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ‘என் நினைவுகள்’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் கலை வரலாற்றை ஆவணப்படுத்துகிறது மற்றும் அரச குடும்பங்களின் உச்சக்கட்ட நாட்களில் கலை தயாரிப்பு, கலை கற்பித்தல், வணிகம் மற்றும் வர்த்தகத்தை விவரிக்கும் ஒரு முக்கியமான ஆவனமாக செயல்படுகிறது. அம்பிகா திருமணமாகாதவர். மேலும், மும்பையின் கர் நகரிலுள்ள துரந்தர் இல்லமான அம்பாசாதனில் தனியாக வசித்து வந்தார். அம்பிகா 2009 இல் முதுமையில் நோயால் இறந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dhurandhar, Ambika (August 2010). Majhi Smaranchitre (in Marathi). Majestic Publishing House. p. 43.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Suhas Bahulkar, ed. (2021-03-02). Encyclopaedia visual art of Maharashtra: Artists of the Bombay school and art institutions (late 18th to early 21st century). Mumbai: Pundole Art Gallery. ISBN 978-81-89010-11-9. கணினி நூலகம் 1242719488. Archived from the original on 2022-03-04.
  3. Dhurandhar, M. V. (August 2018). Kalāmandirātīla ekecāḷīsa varshe : 8 Jānevārī 1890 te 31 Jānevārī 1931 (in Marathi). Deepak Ghare. Mumbai: Majestic Publishing House. p. 174. ISBN 978-93-87453-24-1. கணினி நூலகம் 1097364249. Archived from the original on 2022-01-09. Retrieved 2022-03-04.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Bahulkar, Sadhana (November 2021). बॉम्बे स्कूल कला परंपरेतील स्त्री चित्रकार : 1857-1950 (in Marathi). Pune: Rajhans Prakashan. p. 147. ISBN 978-93-91469-33-7. கணினி நூலகம் 1298711896.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 5.2 शिल्पकार चरित्रकोश खंड ६ - दृश्यकला (in Marathi). मुंबई: साप्ताहिक विवेक, हिंदुस्थान प्रकाशन संस्था. 2013. pp. 241–243. Archived from the original on 2022-03-04. Retrieved 2022-03-04.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  6. "NOTICES". Journal of the Royal Society of Arts 87 (4522): 921–924. 1939. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-9114. https://www.jstor.org/stable/41362591. 
  7. 7.0 7.1 7.2 "धुरंधर, अंबिका महादेव". महाराष्ट्र नायक (in ஆங்கிலம்). Archived from the original on 2022-03-04. Retrieved 2022-03-04.
  8. "त्या दोघीजणी". Maharashtra Times (in மராத்தி). Archived from the original on 2022-03-04. Retrieved 2022-03-04.
  9. "Pinching Salt – B is for Bapu" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-03-04. Retrieved 2022-03-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_துரந்தர்&oldid=4243385" இலிருந்து மீள்விக்கப்பட்டது