அம்பிகா சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பிகா சீனிவாசன்
Ambiga Sreenevasan
我双向嘉 市東北議員山
அம்பிகா சீனிவாசன்
பிறப்பு13 நவம்பர் 1956 (1956-11-13) (அகவை 67)
 மலேசியா சிரம்பான்
இருப்பிடம்கோலாலம்பூர், மலேசியா
தேசியம்மலேசியர்
கல்வி இங்கிலாந்து
எக்ஸ்டர் பல்கலைக்கழகம்
LLB 1979
பணிவழக்கறிஞர்
பணியகம்அம்பிகா சீனிவாசன் நிறுவனம்
Sreenevasan Advocates & Solicitors
அறியப்படுவதுமலேசிய வழக்கறிஞர் கழகம், 24வது தலைவர்
மார்ச் 2007 முதல்
மார்ச் 2009 வரை[1]
மனித உரிமைப் போராளி
பெண் உரிமைப் போராளி
தலைவர், பெர்சே பேரணி 2.0[2]
சமய உரிமை நீதியாளர்
பட்டம்டத்தோ
சமயம்இந்து
பெற்றோர்டத்தோ டாக்டர் ஜி. ஸ்ரீநிவாசன்
ஆனந்த விகடன் நிறுவனர்
ஸ்ரீநிவாசனின் பேத்தி
வாழ்க்கைத்
துணை
சீனிவாசன் ஐயர்
பிள்ளைகள்1
விருதுகள்டத்தோ விருது 2008

அனைத்துலக மகளிர் உரிமைப் போராட்ட விருது 2009[3][4]
எக்ஸ்டர் பல்கலைக்கழக டாக்டர் விருது 2011

பிரான்ஸ், செவேலியர் விருது 2011[5][6]
வலைத்தளம்
sreenevasan.com

அம்பிகா சீனிவாசன் (Ambiga Sreenevasan பிறப்பு: நவம்பர் 13, 1956) மலேசியாவில் சமய, சட்ட, பெண் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதியாளர். மலேசியப் பொதுத் தேர்தல்களில் நியாயமான, நேர்மையான ஒழுங்கு முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் பெர்சே பேரணி அமைப்பின் தலைவர். மலேசிய வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவர்.

அம்பிகா சீனிவாசன், மலேசியப் பெண்களிடம் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார். சமயச் சகிப்புத் தன்மையைப் பொதுமக்களின் மனங்களில் விதைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். அவரின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில் உலகின் சில நாடுகள் அவருக்கு விருதுகளையும், சாதனைச் சின்னங்களையும் வழங்கிக் கௌரவித்து உள்ளன. 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதைப் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் செவேலியர் விருதைப் பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

குடும்பம்[தொகு]

அம்பிகாவின் தந்தை டத்தோ டாக்டர் ஜி. ஸ்ரீநிவாசன். இவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். 1974இல், கோலாலம்பூர் பொதுமருத்துவமனை சிறுநீரகவியல் துறையை நிறுவி அதன் தலைவராகச் சேவை செய்தவர். அம்பிகாவின் தாயார் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். இவர்களுக்கு அம்பிகாவையும் சேர்த்து மூன்று குழந்தைகள். இவருடைய தந்தைவழி தாத்தா, மலாயா ஆங்கிலேய ஆட்சியில் தொழிலாளர் துறையில் ஆணையராகப் பணிபுரிந்தவர். தாய்வழி தாத்தா பெரும்பாலோர் அறிந்த ஆனந்த விகடன் வார இதழின் நிறுவனர் ஸ்ரீநிவாசன் ஆவார்.

கல்வி[தொகு]

டத்தோ அம்பிகா 1956 நவம்பர் மாதம் 13ஆம் தேதி, மலேசியா நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பானில் பிறந்தவர். தன்னுடைய தொடக்கக் கல்வியையும், உயர்நிலைக் கல்வியையும் கோலாலம்பூர் புக்கிட் நானாஸ் கான்வெண்ட் பள்ளியில் பயின்றார். மலேசியாவின் அரசியல், பணபலம் படைத்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் பயிலும் பள்ளி என்று இந்தப் பள்ளி பெயர் பெற்றது.

ஆறாம் படிவம் படிக்கும் போது அப்பள்ளியின் தலைமை மாணவியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தன்னுடைய உயர்நிலைப் பள்ளிப்படிப்பை புக்கிட் நானாஸ் பள்ளியில் முடித்துக் கொண்ட அவர், மேல் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார்.

அம்பிகா இங்கிலாந்தில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில்[7] சட்டம் பயின்றார். 1979ஆம் ஆண்டு, ஒரு வழக்குரைஞராகப் பட்டம் பெற்றார். அவருடைய தந்தையார் அவரை ஒரு மருத்துவராகப் பார்க்க ஆசைப் பட்டார். ஆனால், பள்ளியியில் படிக்கும் போதே சட்டம் பயில வேண்டும் எனும் ஆசை அம்பிகாவிற்கு உருவாகிவிட்டது. அதுவே அவரைச் சட்டக் கல்லூரிக்கும் கொண்டு சென்றது.

பொது வாழ்க்கை[தொகு]

தாயகம் திரும்பிய அவர் கோலாலம்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1982ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி, மலேசிய வழக்கறிஞர்கள் கழகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டார். அதன் பின்னர், சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் இப்போது அம்பிகாவையும் சேர்த்து ஐந்து வழக்கறிஞர்கள் சேவை செய்கின்றனர்.[8]

திருமதி. ஜனனி ராஜேஸ்வரன்,[9] திருமதி. மகாலெட்சுமி பாலக்கிருஷ்ணன்,[10] திருமதி. ஷைரீன் செல்வரத்தினம்,[11] குமாரி. சோ பெங் ஹுய் ஆகியோர் அந்த வழக்கறிஞர்கள் ஆவர். அனைவரும் பெண்கள். இந்த நிறுவனம் இப்போது கோலாலம்பூர், டாமன்சாரா அலுவலக மையத்தில் இருக்கிறது.

மலேசிய வழக்கறிஞர்கள் கழகத் தலைவர்[தொகு]

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலேசிய வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அந்தக் கழகத்திற்கு இரண்டாவது முறையாக ஒரு பெண் தேர்வு பெற்றது ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அதற்கு முன்னர் ஹென்டோன் அப்துல்லா என்பவர் 1995-இல் இருந்து 1997 வரை தலைவராக இருந்தவர்.

நீதிக்கு ஓர் அணிவகுப்பு[தொகு]

மலேசிய வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகப் பதவி ஏற்ற ஆறாவது மாதத்தில், நீதிக்கு ஓர் அணிவகுப்பு (March for Justice) எனும் ஓர் அணியை உருவாக்கினார்.[12] மலேசிய நீதி அமைப்பில் சீரமைப்பு வேண்டும் என்று குரல் எழுப்பினார். ஒரு மூத்த வழக்கஞறிஞர், தனிநபர் ஒருவரை நீதிபதி பதவிக்குச் சிபாரிசு செய்யச் சொல்லிப் பிரதமரிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு தொலைபேசி உரையாடல், மலேசியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.[13]

அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ’நீதிக்கு ஓர் அணிவகுப்பு’ எனும் பெர்சே பேரணி கோலாலம்பூரில் நடைபெற்றது. அம்பிகா அதன் ஒருங்கிணைப்பாளராக விளங்கினார். அந்தக் கால கட்டத்தில், அவருடைய முற்போக்கான அணுகுமுறை மலேசியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மலேசிய அறிவுசார் சொத்துரிமைக் கழகம்[தொகு]

மலேசிய இணைய வலையமைப்புத் தகவல் பிரிவில், இணையப் பெயர் முரண்பாட்டுத் தீர்வுக் கொள்கைப் பிரிவு எனும் ஒரு பிரிவு உள்ளது. அந்தப் பிரிவில் இருக்கும் கோலாலம்பூர் வட்டார மைய நடுவர் தீர்ப்பாய வல்லுநர் குழுவில், 2006-ஆம் ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆன்டு வரை செயலாற்றியுள்ளார். இதை Kuala Lumpur Regional Centre for Arbitration under the Malaysian Network Information Centre Domain Name Dispute Resolution Policy (“MYDRP”)[14] என்று அழைப்பார்கள்.

Intellectual Property Sub-Committee of the Bar Council எனும் மலேசிய வழக்கறிஞர்க் கழக அறிவுசார் சொத்துரிமைத் துணைக் குழுவில் 2005-ஆம் ஆண்டில் இருந்து 2006-ஆம் ஆன்டு வரை சேவை செய்துள்ளார். தவிர மலேசிய அறிவுசார் சொத்துரிமைக் கழகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மலேசிய மகளிருக்கான உதவி அமைப்பு[தொகு]

தற்சமயம் டத்தோ டாக்டர் அம்பிகா, சவால்மிக்க Mediator on the Panel of the Bar Council எனும் மலேசிய வழக்குரைஞர் கழகத்தின் நடுவர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார். வழக்குரைஞர்க் கழகத்தின் பூர்வீகக் குடிமக்களின் உரிமைகள்மீதான செயற்குழுவின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். மலேசிய மகளிருக்கான உதவி அமைப்பின் செயற்குழுவில் இடம் பெற்று, மலேசியப் பெண்களுக்குப் பலவகையான உதவிகளையும் செய்து வருகிறார்.

அடுத்து, மலேசிய அறிவுசார் சொத்துடைமைச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் ஆவார். International Association for the Protection of Intellectual Property (AIPPI) எனும் அனைத்துலக அறிவுசார் சொத்துடைமை பாதுகாப்புக் கழகம், Asian Patent Attorneys Association (APPA)[15] எனும் ஆசிய வழக்குரைஞர் புனைவுரிமைச் சங்கம் போன்றவற்றிலும் இடம் பெற்றுள்ளார்.

மனித உரிமை ஆய்வுகள்[தொகு]

இன்னும் சில முக்கியமான தேசியக் கழகங்களிலும் டத்தோ அம்பிகா அங்கம் வகிக்கிறார். அவற்றில் ஒன்று, பங்கு வர்த்தகத் தொழில்துறை இடர்பாட்டுத் தீர்வு மையம் ஆகும். Securities Industry Dispute Resolution Centre என்று அழைக்கப்படும் அந்த மையத்தின் இயக்குநராகவும் சேவை செய்து வருகிறார்.[16]

நீதி நிர்வாகம், பொது ஒழுங்கு, சட்ட உதவி, சமய மாற்றம், மனித உரிமை போன்ற சட்ட, சமூகத் துறைகள் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளை உள்நாட்டு, வெளிநாட்டு மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.

அனைத்துலக துணிவுமிக்க பெண்கள் விருது[தொகு]

இனம், மொழி, சமயம் தாண்டிய ஒரு நிலையில் மக்களின் மனங்களில் ஒரு சகாப்தமாக அம்பிகா பதிவாகி இருக்கிறார். இவருக்கு 2009 ஆம் ஆண்டிற்கான International Women of Courage எனும் ’அனைத்துலக துணிவுமிக்க பெண்கள்’ விருது வழங்கப்பட்டது. அனைத்துலக நிலையில் எண்மருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் டத்தோ அம்பிகாவை இவ்வாறு அறிமுகம் செய்து வைத்தார்.

பெண்களுக்குச் சட்டம்குறித்த விழிப்புணர்வு[தொகு]

“அம்பிகா மலேசியாவின் மிக விநோதமான ஆளுமை படைத்தவர். மலேசியச் சூழலில் அவருடைய வித்தியாசமான அடைவுகள் கவனிக்கத்தக்கவை. புதிய சட்ட சீர்த் திருத்தங்களையும் செயலாக்கங்களையும் உருவாக்கும் வல்லமை படைத்தவர். நிர்வாகத் திறமையிலும் நீதித்துறையிலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அம்பிகா தொடர்ந்து கடமையாற்றி வருவது மிகவும் பாராட்டத்தக்கது.

பெண்களுக்கு மத்தியில் சட்டம்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மதச் சகிப்புத்தன்மையை எல்லோர் மனங்களில் விதைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவருடைய இந்தச் சேவைகள் அவரை உலகின் நல்ல சிறந்த ஒரு பெண்மணியாக அடையாளப் படுத்துகிறது. ஆகையால் அவரின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில் அவர் இந்த மேடையில் கௌரவிக்கப்படுகிறார்.” அது ஓர் உலகளாவிய கௌரவிப்பு நிகழ்ச்சி ஆகும்.

கௌரவ டாக்டர் பட்டம்[தொகு]

சென்ற 2011ஆம் ஆண்டு அவர் படித்த அதே எக்ஸ்டர் பல்கலைக்கழகம் அவரை அழைத்து, கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துச் சிறப்பு செய்தது. ஒரு வழக்கறிஞராக, தனது உயரிய சேவையை வழங்கியதற்காகவும் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகப் பணியாற்றியதற்காகவும் அம்பிகாவிற்கு அந்த டாக்டர் விருது வழங்கப்பட்டது.

பெர்சே பேரணி[தொகு]

பெர்சே பேரணிகளுக்கு தலைமை தாங்கியதன் காரணமாக, இவருக்குப் பல வகையான தொல்லைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுக்கப்படுகின்றன.[18] ஒரு சில தரப்பினர் இவருடைய இல்லத்திற்கு முன்னால், அங்காடிக் கடைகளைப் போட்டுப் போக்குவரத்து இடைஞ்சல்களை ஏற்படுத்தி வருகின்றனர். இவருடைய உயிருக்கு மிரட்டல் ஏற்படுத்தும் கடிதங்கள், அஞ்சல் பொட்டலங்கள் அவருக்கு அனுப்பப்படுகின்றன.[19]

இருப்பினும், மலேசியாவில் ஒரு நேர்மையான அரசாங்க ஆளுமை இருக்க வேண்டும் எனும் போராட்டத்தில் இவர் தளராத நம்பிக்கையைக் கொண்டுள்ளார். இவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இவருடைய சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து, பல இலட்சம் மலேசியர்கள் இவர் பின்னணியில் செயல்பட்டு வருகின்றனர்.[20][21]

பெர்சே 1.0[தொகு]

பெர்சே தன்னுடைய முதல் அரங்கேற்றத்தை மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 23 ஆம் திகதி நடத்தியது. அதில் டாக்டர் வான் அசிஷா, சிவராசா ராசய்யா, லிம் குவான் எங், திரேசா கோக், எஸ்.அருட்செல்வன், சையட் ஷாரிர், மரியா சின், யாப் சுவீ செங் போன்றவர்கள் முக்கியத் தலைவர்களாக விளங்கினர்.

பெர்சே 2.0[தொகு]

2007 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பெர்சே 2.0 பேரணிக்குத் தலைமை வகித்தார். இந்தப் பேரணியில் அண்டிரூ சியூ, கா. ஆறுமுகம், பாருக் மூசா, மரியா சின், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், ரிச்சர்ட் இயோ, சாயிட் காமாருடின் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். மலேசியாவின் புகழ்பெற்ற மலாய் தேசிய இலக்கியவாதி சமாட் சாயிட் அவர்களும் பங்கு கொண்டார்.

பெர்சே 2.0 பேரணியில், அம்பிகா பல இலட்சம் மக்களை ஒன்றாக இணைத்துக் களம் இறக்கினார். அந்தப் பேரணியில் இனம், சமயம், மொழி பேதம் எதுவும் இல்லை. யார் இந்த அம்பிகா சீனிவாசன் என்று எல்லோரும் கேட்கத் தொடங்கினார்கள். அம்பிகா சீனிவாசன் எனும் சொல் அப்போது மலேசியா முழுவதும் ஒரு பெரும் தாகத்தை ஏற்படுத்தியது.[22]

அம்பிகாவின் தலைமையில் பெர்சே 2.0 பேரணி[தொகு]

பெர்சே 2.0 பேரணிக்கு அம்பிகா தலைமை தாங்கிய போது:

  • 7000 போலீஸ்காரர்கள் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
  • 3 கண்ணீர்ப் புகை பாய்ச்சும் நீர் வண்டிகள் தயார் நிலையில் நின்றன.
  • நூற்றுக் கணக்கான கண்ணீர்ப் புகை குண்டுகள் காத்திருந்தன.
  • 5 ஹெலிகாப்டர்கள் பேரணி வளாகத்தில் சுற்றிக் கொண்டு இருந்தன
  • நான்கு K9 நாய் போலீஸ் குழுக்கள் தயார் நிலையில் இருந்தன.
  • கோலாலம்பூரின் 8 பிரதான சாலைகள் முற்றாக மூடபட்டன.
  • 50க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டன.
  • பேருந்து, டாக்சி, இரயில் சேவை போன்ற பொது போக்குவரத்து வசதிகள் முற்றாக முடக்கப்பட்டன.

2007 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, சரியாக 2.00 மணிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகப் கோலாலம்பூர் மாநகரத்திற்குள் படை எடுக்கத் தொடங்கினர். பேரணி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தப் பல தடைகள் போட்டப்பட்டன. அம்பிகாவிற்கு பல மிரட்டல்கள் வந்தன. அவருக்குச் ‘சட்டவிரோதப் பெண்மணி’ என்று முத்திரை குத்தப்பட்டது. இருந்த போதும் அத்தனைத் தடைகளையும் மீறி ஏறக்குறைய 200,000 மக்கள் கோலாலம்பூரில் ஒன்று திரண்டனர்.[23]

நேர்மையான தேர்தலுக்கு எட்டு கோரிக்கைகள்[தொகு]

பொதுமக்கள் அவர்களுடைய வாகனங்களை 10 கிலோமீட்டர் தொலைவிலேயே நிறுத்தி வைத்தனர். அதன் பின்னர் ஒன்றுகூடும் இடத்திற்கு நடந்தே வந்தனர். பெர்சே 2.0 பேரணியை வெற்றியடையச் செய்தனர். மலேசியாவின் மூத்த தமிழ்க் காப்பாளர்களில் ஒருவரான கா. ஆறுமுகம் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்தப் பெர்சே பேரணி நேர்மையான தேர்தலுக்கு எட்டு கோரிக்கைகளை அடிப்படையாக முன் வைத்தது. அவை:

  1. தேர்தலில் விரைவில் அகலாத கருப்பு மையைப் பயன்படுத்த வேண்டும்.
  2. குறைந்த பட்சம் 21 நாட்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்க வேண்டும்.
  3. தூய்மையான வாக்களிப்பு முறை வேண்டும்.
  4. அஞ்சல் ஓட்டுகள் முறையைச் சீரமைக்க வேண்டும்.
  5. நேர்மையான, சுதந்திரமான ஊடகச் செயல்பாடு வேண்டும்.
  6. பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
  7. ஊழலை ஒழிக்க வேண்டும்.
  8. கறை படிந்த அரசியலை நிறுத்த வேண்டும்.

பெர்சே 3.0[தொகு]

பெர்சே 3.0 பேரணி இந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்றது. இது ஒரு குந்தியிருப்பு போராட்டம். 250,000 பேர் கலந்து கொண்டனர். மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 2007ஆம் ஆண்டிலிருந்து, பொது ஊடகங்களின் வழியாக ‘பெர்சே’வில் கலந்து கொள்ளக் கூடாதெனப் பொது மக்களுக்கு எச்சரிக்கைகள், விளம்பரங்கள், அறிவிப்புகள் செய்யப்பட்டன.[24]

இருப்பினும் பொது மக்கள், இலட்சக்கணக்கில் அம்பிகாவின் பின்னால் அணிவகுத்து நின்றனர். அதன் பின்னர், அம்பிகாவைச் சிறுமைப்படுத்தி பல குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. அவருக்கு எதிராக நாடு முழுமையும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. 'அம்பிகா ஒரு பயங்கரவாதி எனும் போர்வையில் ஓர் இந்துப் பெண்'[25] என்றும் பழி சுமத்தப்பட்டார்.[26]

பெர்சே வேதனைகள்[தொகு]

பெர்சே பேரணிக்கு அம்பிகா தலைமை தாங்கியது ஒரு சாராருக்குப் பிடிக்கவில்லை.[27] அதனால், அம்பிகாவின் வீட்டிற்கு முன்னால் ‘பர்கர்’ கடைகளைத் திறந்தனர்.[28] பெர்சே 3.0 பேரணியினால் அங்காடி வியாபாரிகளுக்கு 200,000 ரிங்கிட் நட்டம் என்று குற்றம் சுமத்தினார்கள். அந்தச் சாலையில் பயணித்தவர்களுக்கு இலவசமாகப் புலால் உணவுகள் வழங்கப்பட்டன. அம்பிகாவிடமே கொண்டு போய்ப் புலால் உணவைக் கொடுத்தார்கள். அம்பிகா சைவ உணவு உண்பவர். புலால் உண்ண மாட்டார் என்று தெரிந்து இருந்தும் அவரிடம் புலால் உணவைக் கொடுத்தார்கள்.[29]

அதன் பின்னர், முன்னாள் போர் வீரர்கள் 200 பேர் அவருடைய வீட்டிற்கு முன்னால் ஒன்று கூடினர். தங்களின் பிட்டங்களைக் காட்டி அசிங்கப்படுத்தினர்.[30] அம்பிகாவை மிகவும் வேதனைப் படுத்தினார்கள். அவரை மட்டும் அல்ல. அந்தக் குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த அத்தனை பேரும் வேதனை அடைந்தனர். மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒரு பெண்ணுக்கு இந்த நிலையா என்று பலர் வேதனைப்பட்டனர்.[31]

விருதுகள்[தொகு]

2011 செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி, இவருக்குப் பிரான்சு நாட்டின் மிக உயரிய விருதான Chevalier de Legion d’Honneur எனும் செவேலியர் விருது[32] வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் மனித உரிமைகளுக்காகவும், சட்ட ஆளுமைக்காகவும் அம்பிகா போராடி வருகிறார். அதைச் சிறப்பிக்க அந்த விருது வழங்கப்பட்டது. இந்தச் செவேலியர் விருது மலேசியாவில் இதுவரையில் 20 பேருக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. அவர்களில் மாட்சிமை தங்கிய பேரரசர் துவாங்கு மிஷான் ஜைனல் அபிடின், டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், நடிகை மிச்சல் இயோ போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேலும், 2008ஆம் ஆண்டில் பேராக் சுல்தான், மாண்புமிகு ராஜா அஸ்லான் ஷா, அம்பிகாவிற்கு DPMP எனும் டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.

இவர் வாதாடிய வழக்குகளில் லீனா ஜோய்[33] என்பவரின் வழக்கே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒரு முஸ்லீம் சமயத்தவர் அவருடைய விருப்பத்தின் பேரில் மற்ற சமயங்களுக்கு மாற முடியும் என்று வாதாடினார். 2007ஆம் ஆண்டு மலேசிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அது ஒரு நீண்ட வழக்கு. மலேசிய அரசியலமைப்பின் Article 121(1A) சட்டப்பிரிவின் கீழ் அந்த வழக்கு நடந்தது.

துணிச்சல்மிக்க அம்பிகா[தொகு]

ஒரு நாட்டின் வழக்கறிஞர் கழகத் தலைவராக இருந்த அம்பிகா சீனிவாசன், இன்று ஓர் ஆளுமைக்குச் சவால் விடும் மிகப் பெரிய சக்தியாக உருமாறியுள்ளார். துணிச்சலான ஒரு தமிழ்ப்பெண். மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராக அப்போது இருந்தார். துணிச்சல் மிக்க ஒரு தலைவராக இப்போது இருக்கின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ambiga Sreenevasan
  2. Dato’ Ambiga Sreenevasan (Co-Chairperson)
  3. "Ambiga Sreenevasan masterfully uses the rule of law to advance human rights, the status of women, and religious tolerance". Archived from the original on 2009-03-07. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.
  4. "In the face of death threats and intimidation, Ms.Ambiga has emerged as a strong voice of tolerance and justice". Archived from the original on 2009-03-07. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.
  5. "Bersih's Ambiga receives top French award". Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-10-28.
  6. Conferment of the insignia of Chevalier of the Legion of Honour to Dato Ambiga Sreenevasan
  7. University of Exeter
  8. "Sreenevasan was established in 2002, on a vision of service and excellence". Archived from the original on 2016-04-03. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  9. Janini, a founding partner of Sreenevasan was called to the Bar of England & Wales in 1992. She was admitted as an Advocate & Solicitor of the High Court of Malaya in 1994.
  10. Maha was called to the Bar of England & Wales in 1998. She was admitted as an Advocate & Solicitor of the High Court of Malaya in 1999.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Shireen was called to the Malaysian Bar in 1996 and has been in legal practice ever since. Shireen joined Sreenevasan in June 2008". Archived from the original on 2016-08-28. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  12. "Lawyers have decided to march on Tuesday, 29 November 2011 from the Lake Gardens to the Parliament in protest against the sham Peaceful Assembly Bill". Archived from the original on 5 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2012.
  13. Correct! Correct! Correct! (Lingam Tape in Full Transcript).
  14. KLRCA, taking cognisance of the growing importance of intellectual property in the arena of Information and Communications Technology, offers domain name dispute resolution services.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "The Asian Patent Attorneys Association is a non-governmental organisation dedicated to promoting and enhancing intellectual property protection in the Asian region". Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  16. Established on 1 March 1993 under the Securities Commission Act 1993, the SC is a self-funding statutory body with investigative and enforcement powers.[தொடர்பிழந்த இணைப்பு]
  17. "Ambiga Sreenevasan is someone who is not only working in her own country, but whose influence is felt beyond the borders of Malaysia". Archived from the original on 2009-03-12. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
  18. Ms Ambiga has become the target of what she describes as “relentless attacks”, including death threats.
  19. A posse of traders turned up outside her door frying burgers to protest; offensive to a Hindu vegetarian. A group of ex-soldiers marched on her house and shook their buttocks at it.
  20. Ambiga has become a household name in recent years.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. Seen as a hero for human rights by some, and a trouble causing villain wanting to disrupt the "peace" in the country by others.[தொடர்பிழந்த இணைப்பு]
  22. Press Statement by Datuk Ambiga Co- Chairperson Bersih 2.0 steering committee.
  23. "High Court: Hisham's order to declare Bersih illegal 'tainted with irrationality'". Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  24. Open letter to IGP and Immigration regarding harassment against BERSIH 2.0 Steering Committee.
  25. "'பயங்கரவாதி இந்து பெண்' எனும் வகையில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் டத்தோ அம்பிகா வசைப்படுத்தப்பட்டிருந்தார்". Archived from the original on 2011-09-21. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  26. Police urged to provide protection for Datuk Ambiga.
  27. Who’s afraid of Ambiga Sreenevasan?
  28. A group of about 50 to 60 marched and chanted that Ambiga should be chased out of the country before they were stopped by the authorities at the barricade.
  29. "Ambiga: Recent protests will not affect decision on Bersih 4.0". Archived from the original on 2012-08-28. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  30. Group performs ‘butt exercises’ in front of Ambiga’s home.[தொடர்பிழந்த இணைப்பு]
  31. "DBKL moves to clean up paint outside Ambiga's home". Archived from the original on 2012-08-26. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  32. "The Legion d'Honneur is France's highest decoration. It was created by Napoleon Bonaparte in May 1802". Archived from the original on 2013-01-21. பார்க்கப்பட்ட நாள் 2012-10-28.
  33. Lina Joy is a Malay convert from Islam to Christianity.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_சீனிவாசன்&oldid=3905693" இலிருந்து மீள்விக்கப்பட்டது