அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் வாழும் முசுலிம்களின் வரலாற்றைக் குறிக்கிறது. இலங்கை மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் போது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து மட்டக்களப்பு பிரதேசமாக இருந்தது.

முஸ்லிம்கள் இன்று பெரும்பான்மையாக வாழும் தென்கிழக்குப் பிரதேசம் முற்காலத்தில் (கி.மு.300களில்) ருகுணு இராச்சியத்தின் ஒரு முக்கிய பிரிவாக காணப்பட்டது. துட்டகைமுனு மன்னனின் காலத்தில் அரேபிய கப்பல்கள் தங்கத்திலான தளபாடங்களை அவனுக்காக தென்கிழக்குக் கரைக்கு கொண்டு வந்தனர்.

மட்டக்களப்பின் பூர்வீக சரித்திரம் கூறும் தமிழ் ஏட்டுப் பிரதிகள், கல்வெட்டுக்கள் முதலியன முஸ்லிம்களின் குடியேற்றங்கள் பற்றிக் குறிப்பிடவில்லை. இவை வர்த்தக, வாணிப சம்பவங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன. குறிப்பாக, "பாணமையில் மரம் வெட்டி ஏற்றியது", "கல்முனையில் வியாபாரத்துக்காக பாளையம் போட்டது", "கோயில் திருவிழாக்களில் குகாரத்து மரபினர் கலந்து குடியேறியது" போன்றவைகளையே குறிப்பிடுகின்றன. இவற்றை மேற்கொண்ட முஸ்லிம்கள் பற்றி தெளிவாக எதனையும் அவை கூறவில்லை. தோணிகளிலும், வள்ளங்களிலும் குடியேற்றவாசிகள் (முக்குவர்கள்) இங்கு வருகை தந்தது போல், வர்த்தகத்துக்காக வந்த கப்பல்களில் வந்திறங்கியவர்களும் குடியேறினர். இங்கு கப்பல்களில் வர்த்தகத்துக்காக வந்து குடியேறியவர்கள் தென்னிந்தியா, அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களாகும். வர்த்தகத்திற்காக இங்கு குடியேறிய முஸ்லிம்கள், தாங்கள் வர்த்தகம் செய்ய முடியாதிருந்த காலங்களில் தமிழர்களோடு சேர்ந்து விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டனர்.

வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஏற்படுவது வழக்கம். தமது வியாபாரம் தோல்வியடையும்போது மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்கள் தமக்குப் பரீட்சயமான விவசாயத்தையே, தமது சீவனோபாயத்துக்காக மட்டுமன்றி நெல் வியாபாரத்திற்காகவும் செய்தனர். அவர்கள் விவசாயிகளுக்கு முற்பணம் கொடுத்தும் நெல்லை வாங்கினர். (C.R.De Silva)

மட்டக்களப்பு தென்பகுதியில் விவசாய நிலங்கள் இருந்தமையும், வாவிகள், குளங்கள் தூர்ந்து போன நிலையில் இருந்தமையும் அங்கு குடியேறிய மக்களை விவசாயம் செய்வதற்கு ஊக்கப்படுத்தின. மற்றும் மட்டக்களப்பில் மேலோங்கியிருந்த கலாச்சாரச் சூழல் விவசாயத்தோடு ஒட்டியிருந்ததும், பயிர் வளர்ப்பும், பண்ணை முறையும், குடியமைப்பும் விவசாயத்தையே அடிநாதமாகக் கொண்டிருந்தமையும், இங்கு வந்த முஸ்லிம்களை அதே முறையில் தங்களையும் ஒழுங்குபடுத்தி வாழ்வதற்குத் தூண்டின. அதனால் முஸ்லிம்கள் தென்பகுதிக்குக் குடியேறினார்கள். அங்கு குடிமுறையமைத்து, போடிமுறையிலே விவசாயம் செய்தனர். இது 13, 14ம் நூற்றாண்டுகளில் நடைபெற்றதாக நாடுகாடுப் பற்று பரவணிக் கல்வெட்டு கூறுகின்றது. 1887ல் நாடுகாடுப் பற்று பரவணிக் கல்வெட்டு "தப்றோபேனியன்" (Taprobanian) என்ற பிரசித்தி பெற்ற வரலாற்றுச் சஞ்சிகையில் பிரசுரமாகியது. இக்கல்வெட்டு 1397ல் நிகழ்ந்த சம்பவங்களையே மையமாகக் கொண்டிருக்கிறது. மட்டக்களப்பு தென்பகுதி வரலாற்றுச் சம்பவங்களை நாடுகாடுப் பற்று பரவணிக் கல்வெட்டு பொருளாகக் கொண்டுள்ளது என்று பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகின்றார்.

கண்டி அரசன் தென்கிழக்குப் பிரதேசத்திலிருந்த பள்ளிவாசல்களைத் தரிசித்து அவைகளுக்கு உதவிகள் செய்ததை நாடுகாடுப் பற்று பரவணிக் கல்வெட்டு " வரிப்பத்தான்சேனை முஸ்லிம் பள்ளிக்கு பத்திப்போடி வெளியில் இலவசம் கொடுக்கச் சொல்லிப்போட இராஜபக்ச முதலியார் கொடுத்துப் போட்டார் " என்று குறிப்பிடுகின்றது. முஸ்லிம்கள் காடு வெட்டி விவசாயம் செய்ததையும், இறக்காமம், வரிப்பத்தான்சேனை, வட்டிவெட்டி, மல்கம்பிட்டி, கொண்டவட்டுவான், அக்கரைப்பற்று போன்ற இடங்களில் அப்போது வாழ்ந்த சிங்கள மக்களிடம் உதவி கேட்டு வந்ததாகவும் கூறுகின்றது.

ஏலம், கறுவா, சாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களுக்காகவே போத்துக்கேயர் இலங்கைக்கு வந்தனர். ஆனால் சிங்கள மன்னர்களின் பலவீனத்தை அறிந்து கொண்டதும் அவர்கள் இராசதானியைக் கைப்பற்றத் திட்டமிட்டனர். இந்நேரம் மலைநாட்டுச் சிங்கள மக்களுடன் சேர்ந்து முஸ்லிம்களும் போத்துக்கேயர்களை எதிர்த்தனர். புவனேகபாகுவும் அதன் பின்னர் அரசனாக வந்தவர்களும் இலங்கையின் முழு வர்த்தகத்தையும் போத்துக்கேயர்களுக்குத் கொடுத்ததும் முஸ்லிம்கள் நிலைதளும்பினர். 1526 ல் போர்த்துக்கேயர் முஸ்லிம்களை நாடு கடத்தும் உத்தரவைப் பிறப்பித்தபோது அவர்களின் நிலை மேலும் பலவீனமாகியது. இந்த உத்தரவு இந்தியாவிலிருந்து வர்த்தகத்திற்காக வந்த முஸ்லிம்களை வெகுவாகப் பாதித்ததனால் அவர்களின் மேற்குக்கரை வர்த்தகம் ஸ்தம்பிதமடைந்தது.[1] அப்போது மேற்குக்கரையிலிருந்த போத்துக்கேயரின் கண்காணிப்பு கிழக்குக் கரையிலிருக்கவில்லை. ஆதலால் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு மட்டக்களப்புத் துறைமுகமும், கிழக்குக் கரையோரமும் சுதந்திர பூமிபோல காணப்பட்டது.[2] 1625 ல் போர்த்துக்கேய தளபதியான கொசுதாந்தின் டீ சா முஸ்லிம்களை நாடு கடத்தும் தடையுத்தரவைத் தீவிரமாக அமுலாக்கினான். இதை அவனுடைய " மட்டக்களப்புத் துறைமுகத்தைச் சார்ந்து பல கிராமங்களில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளேன். " என்ற குறிப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

மேற்குக் கரையோரம் படிப்படியாக போர்த்துக்கேயரின் பூரண கட்டுப்பாட்டிற்குள்ளானதனால், போர்த்துக்கேயருக்கெதிரான தாக்குதல்களை நடத்த கிழக்குக் கரையோரத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் சிங்கள மன்னர்களுக்கு ஏற்பட்டது. மட்டக்களப்புப் பிரதேசம் போர்த்துக்கேயரின் கைகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அக்கறை கொண்ட சிங்கள மன்னர்கள், பல்வேறு இராஜதந்திர கடமைகளையும், உளவு வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம், மற்றும் கடல் சார்ந்த சண்டைகளிலும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மேலும் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை மட்டக்களப்பு துறைமுகப் பிரதேசங்களில் குடியமர்த்தினார்கள். இது அங்கு ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியையும் பலத்தையும் கொடுத்தது. இதை போல்டியசின் பின்வரும் கூற்று வலுப்படுத்துகின்றது.

" It was determined and resolved council to give all possible encouragement and protection to sea-faring men by giving them grants of lands as an inducement to settle themselves to his mejestic dominions so that they might in process of time augment in number and be usefully employed in naval battles " - (Page-56 Baldeus)

போர்த்துக்கேயரை முற்றாக விரட்டியடிக்கத் திட்டமிட்டு வெளிநாட்டு உதவிகோர முதலில் செனரத் மன்னனும் (1602 - 1635), அதன் பின்னர் அவனது மகனான இரண்டாம் இராஜசிங்கன் மன்னனும் (1635 - 1658) முன்வந்தனர். இது மட்டக்களப்பு முஸ்லிம்களின் வாழ்வில் புதியதோர் சூழ்நிலையைத் தோற்றுவித்தது. இரண்டாம் இராஜசிங்கன் மன்னன், மட்டக்களப்பில் போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையைக் கைப்பற்றித் தன்னிடம் ஒப்படைக்கும்படியும், அதற்குரிய செலவையும் மட்டக்களப்புத் துறைமுக வர்த்தகத்தையும் டச்சுக்கம்பனிக்குத் தருவதாக 1638 ல் ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆனால் இந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை. டச்சுக்காரர்கள் கோட்டையைக் கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது மாத்திரமின்றி மட்டக்களப்புத் துறைமுக வர்த்தகத்தையும் நேரடியாகக் கண்காணிக்கத் தொடங்கினார்கள். இது டச்சுக்காரர்களுக்கும், துறைமுக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களுக்குமிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியது. கண்டி மன்னனை நாட்டின் மத்தியில் இருக்கவிட்டு கரையோரப் பிரதேசங்கள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவது டச்சுக்காரர்களின் நோக்கமாக இருந்தது. இது மட்டக்களப்பு கரையோரப் பிரதேசத்தை யுத்த பூமியாக மாற்ற வழிகோலியது. டச்சுக்காரர்கள் குடியிருப்புகளுக்குத் தீமூட்டி மக்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள். இந்த அழிவுகளினால் அங்கிருந்த முசுலிம் மக்கள் மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கள மக்களும் நாட்டின் மத்திய பிரதேசத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். மீண்டும் இரண்டாவது முறையாக அம்பாறை மாவட்டம் இருள் சூழ்ந்த பிரதேசமாகியது. என்றாலும் அங்கே வாழ்ந்த முஸ்லிம் மக்களும், மட்டக்களப்பிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து டச்சுக்காரர்களின் எதிர்ப்பையும் மீறி அங்கே வாழத்தொடங்கினார்கள்.

1766 ம் ஆண்டு கண்டி இராசதானிக்கும், டச்சுக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கை மட்டக்களப்பு கரையோரத்தை டச்சுக்காரர்களின் நேரடி பரிபாலிப்புக்குட்பட்ட பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியது. கண்டி மன்னன் 1766 ல் இப்பிரதேசத்தின் பூரண இறைமையை டச்சுக்காரர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டான். டச்சுக்காரர்கள் இப்பிரதேசத்தை பின்வருமாறு எட்டு பற்றுக்களாகப் பிரித்தனர்.

1. பாணமைப்பற்று

2. அக்கரைப்பற்று

3. கரவாகுப்பற்று

4. மண்முனைப்பற்று

5. எருவில்பற்று

6. போரதீவுப்பற்று

7. மட்டக்களப்புப்பற்று

8. கோரளைப்பற்று

முஸ்லிம்களில் ஒரு தொகையினர் கோரளைப்பற்று, ஏறாவூர், புளியந்தீவு பிரதேசங்களில் வாழ்ந்தனர். டச்சுக்காரர்களுக்கு செலுத்தப்பட்ட வரியினைக் கணக்காக வைத்து அப்பிரதேசத்தில் வாழ்ந்த அறுபதினாயிரம் மக்களில் இருபதாயிரம் பேர் முஸ்லிம்களாக இருந்தனர் என்று ஜேக்கப் பெர்ணாந்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மற்றும் பெருந்தொகையினர் பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, கரவாகுப்பற்று என்ற தென்கிழக்குப் பிரதேசத்தில் வாழ்ந்தனர். நெல் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என நினைத்த டச்சுக்காரர்கள் பல புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கினார்கள். தென்கிழக்கில் அம்பாறை வில்லு, குடா வில்லு, பட்டிப்பளை என்பவற்றைப் புனர்நிர்மாணம் செய்ததினால் முஸ்லிம்கள் நன்மையடைந்தனர். பட்டிப்பளை ஆற்றினை மறித்து ஜேக்கப் பெர்ணாந்து கட்டிய அணைக்கட்டையே இன்றும் சம்மாந்துறை மக்கள் பெர்ணாந்துக்கட்டு என்று அழைத்து வருகின்றனர்.

டச்சுக்காரர்களின் நூற்றி ஐம்பது வருட ஆட்சியில் தென்கிழக்குப் பிரதேசம் செழிப்புற்று விளங்கியது. அவ்வாட்சியின் கடைசி மூன்று தசாப்த காலத்தின்போது ஜேக்கப் பெர்ணாந்து ஆற்றிய தொண்டு அளப்பெரியது. நிந்தவூர், கரவாகு, சம்மாந்துறை, பொத்துவில், அக்கரைப்பற்று என்பனவற்றின் விவசாய விருத்திக்காக அவர் புனர்நிர்மாணம் செய்த பட்டிப்பளை ஆற்று நீர்ப்பாசனத்திட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகும். இக்காலத்தில் மட்டக்களப்புத் துறைமுகத்திலிருந்து நூற்றி ஐம்பதாயிரம் பரா நெல் ஏற்றுமதியாகியது என்று பிரித்தானிய அதிகாரி பெற்றோலகி (Betrolacci) கூறினார். ஜேக்கப் பெர்ணாந்து தென்னைமரப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காக இம்முழு மாவட்டத்திலும் நூறு ஆயிரம் தென்னை மரக்கன்றுகளை விநியோகித்தார்.

விவசாயம் விருத்தியடைய விளைநிலங்களை எவரும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என நினைத்த டச்சுக்காரர்கள், முக்குவர்களின் குல முறைப்படி விற்க முடியாது ஒத்திக்கு வைத்த நிலங்களை உடனடியாக மீட்டுக் கொள்ளவேண்டுமென்றும், அவ்வாறு மீட்டுக்கொள்ளாத நிலங்கள் ஏலத்தில் விற்கப்படும் என்றும் சட்டமியற்றியது. இதன்படி மட்டக்களப்பில் ஏலத்தில் விடப்பட்ட நெற்காணிகளை பணவசதியுள்ள முஸ்லிம்கள் விலை கொடுத்து வாங்கினர். இதனால் முஸ்லிம்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகள் சொந்தமாயின. அவர்கள் அக்காணிகளில் வேலைக்கு ஆள் வைத்து விவசாயம் செய்தனர். இதேபோல் அம்பாறை மாவட்டத்திலேயும் கூடுதலான நெற்காணிகளை வைத்திருந்தோர் தங்கள் காணிகளில் வேலைக்கு ஆள் வைத்து விவசாயம் செய்வதில் ஈடுபட்டனர்.

1815 ல் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றி சிவில் நிர்வாகத்தை உருவாக்கிய போது சிங்கள உயர்வகுப்பு மக்கள் அதை எதிர்த்தனர். 1817 ல் கண்டி மீதான பிரித்தானியரின் அதிகாரத்தை நீக்கி சிங்கள மக்களின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் நோக்கத்துடனும், வெல்லச பகுதி முஸ்லிம்களுக்கு பிரித்தானியர் அளித்த அந்தஸ்த்தை மையப்படுத்தியும் குடிமக்கள் கலவரம் வெல்லசப் பகுதியில் ஏற்பட்டது. கலவரம் உத்வேகமடைந்தபோது, கலவரக்காரர்களைப் பிடிக்கவும், கலவரம் பற்றி விசாரனை நடத்தவும் சென்ற ஹாஜி நெய்னா மரிக்கார் மற்றும் பிரித்தானிய உயரதிகாரி வில்சன் ஆகியோர் கலகக்காரர்களினால் கொலை செய்யப்பட்டனர்.

தென்கிழக்கு முஸ்லிம்களின் எழுச்சி வெல்லசக் கலவரத்தின் பின்விளைவாகுமென்றால் அது மிகையாகாது. ஏனெனில் வெல்லசக் கலவரத்தின்போது முஸ்லிம்களின் ஆற்றலையும், திறமையையும், பொறுப்புணர்ச்சியையும் நன்கு விளங்கிக்கொண்ட ஆங்கிலேயருக்கு, முஸ்லிம்களோடு நல்லுறவைப் பேணவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதை எமெர்சன் ரென்னன்ட் இவ்வாறு கூறுகின்றார்.

" The Moors are almost the only section of the native population who divide the valuable culture with the English. They have numerous flourishing villages throughout the district and almost monopolize the trade of Batticaloa, exporting ebonym, satinwood and the timber and introducing cotton goods and brassware from the Coromandel coast. Their Dhoneys ply between Ceylon and the French possession at Pondicheri and Karaikal " (1854) (Emerson Tennent)

பிரித்தானியர் ஆட்சி முஸ்லிம்களுக்கு இருவகைகளில் உதவி புரிந்தது, ஒருபுறம் அவர்களுக்கு உயர்நிர்வாகப் பதவிகளை வழங்கியது. மறுபுறம் விவசாயப் பூமிகளை மிக இலகுவாகப் பெற்றுக் கொடுத்தது. ஒரு ஏக்கருக்கு ஐம்பது ரூபா செலுத்தி எத்தனை ஏக்கரையும் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம் எனவும், இப்பணத்தை உடனடியாகவோ அல்லது தவணை முறையிலோ செலுத்தி முடிக்கலாம் என்ற 27.02.1857 ம் திகதியத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்திய பெருமை J.W.Birch என்ற அரசாங்க அதிபரையே சாரும். இப்பூமிகளை வாங்கிய முஸ்லிம்கள் காடு வெட்டி சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொண்டு அவற்றை நெற்காணிகளாக்கினர்.

ஆதாரங்கள்[தொகு]

  • கலாச்சார சமய, அலுவல்கள் அமைச்சு. முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு - 1974, பக்கம் 130 - 152
  • North-East Srilanka - A Compandium - 1998

மேற்கோள்கள்[தொகு]

  1. C.R.De Silva
  2. பேராசிரியர் அரசரத்தினம், றைமர் (Reimer) எழுதிய குறிப்புக்கள்