அம்ஜத் சப்ரி
அம்ஜத் சப்ரி | |
|---|---|
| பிறப்பு | 23 திசம்பர் 1976 கராச்சி, சிந்து, பாகிஸ்தான் |
| இறப்பு | 22 சூன் 2016 (அகவை 39) கராச்சி, சிந்து, பாகிஸ்தான் |
| இறப்பிற்கான காரணம் | துப்பாக்கிச் சூட்டுக் காயம் |
| கல்லறை | பாபோஷ் நகர் கல்லறை, கராச்சி, பாகிஸ்தான் |
| பணி | குழுப் பாடகர் (1992-1996) முதன்மைக் கவ்வாலிப் பாடகர் (1996-2016) |
| செயற்பாட்டுக் காலம் | 1985-2016 |
| பெற்றோர் | குலாம் பரித் சப்ரி (தந்தை) |
| பிள்ளைகள் | 5 குழந்தைகள் - முஜாதித் (மகன்), அவ்ன் (மகன்), முஹிப் (மகன்) |
| உறவினர்கள் | மக்பூல் அகமது சப்ரி (மாமா) |
| இசை வாழ்க்கை | |
| இசை வடிவங்கள் | சூபி |
| இசைக்கருவி(கள்) |
|
| இணைந்த செயற்பாடுகள் | சப்ரி சகோதரர்கள் |
அம்ஜத் பரீத் சப்ரி (Amjad Sabri) (23 டிசம்பர் 1976 – 22 ஜூன் 2016) பாகித்தானைச் சேர்ந்த கவ்வாலி பாடகரும் சூஃபி இசுலாமிய மரபின் முக்கிய முன்னோடியுமானவர். சப்ரி சகோதரர்கள் குழுவைச் சேர்ந்த குலாம் பரீத் சப்ரியின் மகனும் மக்பூல் அகமது சப்ரியின் மருமகனுமான இவர், தெற்காசியாவின் குறிப்பிடத்தக்க கவ்வாலி பாடகர்களில் ஒருவராக உயர்ந்தார்.[1][2][3][4] 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கராச்சியில் தெஹ்ரீக் இ தாலிபான் பாகித்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் இவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு அந்த அமைப்பின் ஹகிமுல்லா மெசூத் பிரிவு பொறுப்பேற்று, இவர் இறைநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டி கொலை செய்ததாக அறிவித்தது.[5][6][7][8]
ஆரம்ப வாழ்க்கையும் இசைப் பயணமும்
[தொகு]அம்ஜத் பரீத் சப்ரி 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று சிந்து மாகாணத்தின் கராச்சியில் பிறந்தார். ஒன்பது வயதில் தனது தந்தையிடம் கவ்வாலி இசையைப் பயிலத் தொடங்கிய இவர், 1982 ஆம் ஆண்டு முதல் தனது தந்தையுடன் மேடைகளில் பாடத் தொடங்கினார்.[9][10][11] இவரது தந்தை, அதிகாலை நேரத்தில் பாடப்படும் பைரோன் இராகத்தில் இவருக்குப் பயிற்சி அளித்தார். இதற்காக நள்ளிரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு இசைப் பயிற்சியில் ஈடுபட வேண்டியிருந்தது.[12] சப்ரி தனது குடும்பத்தின் புகழ்பெற்ற கவ்வாலிகளைப் பாடியதுடன், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அங்கு இவர் கவ்வாலி இசையின் ராக் நட்சத்திரம் என்று போற்றப்பட்டார். இறக்கும் காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மிகவும் புகழ்பெற்ற கவ்வாலி பாடகர்களில் ஒருவராக விளங்கிய இவர், உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்.[13][14][15] ஆரம்பத்தில், சப்ரி சகோதரர்கள் குழுவில் தந்தை,மாமாவுக்கு பின்புலப் பாடகராக இருந்து கைத்தட்டல் செய்தார். ஆறு வயதிலேயே, 1982 ஆம் ஆண்டு வெளியான சஹாரே என்ற பாகித்தானிய திரைப்படத்தில் தந்தை குலாம் பரீத் சப்ரி, மாமா மக்பூல் அகமது சப்ரியுடன் தோன்றினார். அந்தப் படத்தில் இவர்கள் புகழ்பெற்ற தாஜ்தார் ஏ ஹரம் கவ்வாலியைப் பாடினர். அதே படத்தில் அம்ஜத், அல்லாமா இக்பாலின் லப் பே ஆதி ஹை துவா என்ற கவிதையையும் பாடினார்.
தந்தை மறைந்த பிறகு, சப்ரி சகோதரர்கள் குழுவை மக்பூல் அகமது சப்ரி வழிநடத்தினார். அப்போது அம்ஜத் துணைப் பாடகராகவும் பாங்கோ இசைக்கருவி வாசிப்பவராகவும் செயல்பட்டார். 1996 ஆம் ஆண்டு தனது சகோதரர்கள், நண்பர்களுடன் இணைந்து தனக்கென ஒரு இசைக் குழுவைத் தொடங்கினார். இவரது முதல் இசைத்தொகுப்பான பலகல் ஓலா பே கமாலேஹி 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் இவரது தந்தை,மாமா பாடிய சர் ஏ லா மகான் சே தலப் ஹுயி முக்கியப் பாடலாக இடம்பெற்றது. ஆரம்பத்தில் தந்தை, மாமாவின் கவ்வாலிகளையே பாடிய இவர், பின்னர் தனது சொந்தப் பாடல்களையும் சேர்த்தார். இவரது புகழ்பெற்ற கவ்வாலிகளில் அலி கே சாத் ஹை செஹ்ரா கி ஷாதி, நா பூச்சியே கே க்யா ஹுசைன் ஹை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவருடைய மிகவும் பிரபலமான நாத் பாடல் கரம் மாங்தா ஹூன் ஆகும்.[16] இவர் பாடிய பிற குறிப்பிடத்தக்க பாடல்களில் மைன் நசர் கரூன் ஜானே ஜிகர், அல்லாஹ் அல்லாஹ், தூம் மச்சா தோ, காபே கி ரௌனக், காஷ் யே துவா மேரி, அலி மேரா தில், பிர் திகா தே ஹரம், துலூ ஏ சஹர் ஹை ஷாம் ஏ கலந்தர், இவரது இறுதி நாத் பாடலான ஐ சப்ஸ் கும்பத் வாலே ஆகியவை அடங்கும். மேலும், 2008 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படமான ஹல்லா போல் படத்தில் மோரே ஹாஜி பியா என்ற பாடலையும் பாடினார். இவரது கடைசி இசைத் திட்டம் கோக் ஸ்டுடியோ பாகித்தான் நிகழ்ச்சியாகும். அதன் ஒன்பதாவது பருவத்தின் ஏழாவது பகுதியில் ரஹத் ஃபதே அலி கானுடன் இணைந்து ஆஜ் ரங் ஹை என்ற கவ்வாலியைப் பாடினார். கோக் படமனையில் இவர் அளித்த முதல் நிகழ்ச்சியும் அதுவே கடைசி நிகழ்ச்சியுமாக அமைந்தது.[17]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அம்ஜத் சப்ரி எப்போதும் புன்னகையுடன் பழகும் அன்பான மனிதராக நண்பர்களாலும் குடும்பத்தினராலும் நினைவுகூரப்படுகிறார். பலகை விளையாட்டுகளை விரும்பிய இவர், குழந்தைத்தனமாக குறும்புகள் செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.[18] 2002 ஆம் ஆண்டு நண்பர்கள் மூலம் அறிமுகமான நாதியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். பரபரப்பான இசைப் பயணத்திற்கிடையிலும் மனைவி ,குழந்தைகளுடன் நேரம் செலவிட விரும்பிய இவர், வெளிநாட்டுப் பயணங்களின்போது வீட்டை மிகவும் நினைத்து ஏங்குவார்.[19] இவரை நெருக்கமாக அறிந்தவர்கள், இவர் சற்றே வித்தியாசமான இயல்பும் வெளிப்படையாகப் பேசும் குணமும் கொண்டவர் என்று கூறியுள்ளனர். உலகப் புகழ் பெற்ற பிறகும், தனது தந்தை கட்டிய வீட்டுடன் ஆன்மிகப் பிணைப்பு இருப்பதாகக் கருதி, கராச்சியின் லியாகதாபாத் பகுதியில் உள்ள எளிமையான இல்லத்திலேயே வாழ்ந்தார்.[20]
மறைவு
[தொகு]2016 ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று, காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியேறிய அம்ஜத் சப்ரி, கராச்சியின் லியாகதாபாத் பகுதியில் தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சப்ரி, இவரது உதவியாளர்,ஓட்டுநர் கடுமையாகக் காயமடைந்தனர். சப்ரியின் தலையில் இரண்டு முறை, காதில் ஒருமுறை துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.[21] இவர்கள் அனைவரும் அப்பாசி ஷஹீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அம்ஜத் சப்ரி உயிரிழந்தார். இவரது தந்தையின் பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை அருகே இந்தப் படுகொலை நடைபெற்றது. இவரது இறுதிச்சடங்கில் கராச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாசிமாபாத்தில் உள்ள பபோஷ் கல்லறையில், தந்தை குலாம் பரீத் சப்ரி, மாமா மக்பூல் அகமது சப்ரி ஆகியோரின் கல்லறைகளுக்கு அருகில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். இவரது படுகொலை பாகித்தான், இந்தியாவின் பல முக்கியப் பிரமுகர்களால் கண்டிக்கப்பட்டது. இந்தக் கொலைக்கு எதிராக பல போராட்டங்களும் நடைபெற்றன.[22][23]
குற்றவாளிகள்
[தொகு]பாகித்தானின் உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, தெஹ்ரீக் இ தாலிபான் பாகித்தான் அமைப்பு அம்ஜத் சப்ரியை கொலை செய்ததற்குப் பொறுப்பேற்றது. அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காரி சைஃபுல்லா மெசூத் இதை அறிவித்தார். பின்னர், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று ஆப்கானித்தானின் கோஸ்ட் மாகாணத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரியால் காரி சைஃபுல்லா மெசூத் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பல பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையதாக பாகித்தானால் மிகவும் தேடப்பட்ட தளபதிகளில் ஒருவராக இருந்தார். 2016 ஆம் ஆண்டு அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்ட அவர், ஆப்கானித்தானில் பதினான்கு வாரங்கள் சிறையில் இருந்த பிறகு விடுவிக்கப்பட்டார்.[24]
விருதுகளும் அங்கீகாரமும்
[தொகு]- 2018 ஆம் ஆண்டு, பாகித்தானின் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான சிதாரா இ இம்தியாஸ் விருது, அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் அவர்களால் அம்ஜத் சப்ரிக்கு மறைவிற்குப் பிறகு வழங்கப்பட்டது.[25]
- 2019 ஆம் ஆண்டு கோல்ட்பிளே இசைக்குழுவின் எவ்ரிடே லைஃப் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற சர்ச் என்ற பாடலில் அம்ஜத் சப்ரியின் குரல் பயன்படுத்தப்பட்டது.
மரபு
[தொகு]பாகித்தானின் முக்கிய நாளிதழ் ஒன்றின் கருத்துப்படி, உலகியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்ந்த அம்ஜத் சப்ரி, தனது காலத்து மற்ற பாடகர்களை போட்டியாளர்களாக ஒருபோதும் கருதவில்லை. பாடகர் அதிஃப் அஸ்லம், அம்ஜத்தின் தந்தை முதலில் பாடிய புகழ்பெற்ற தாஜ்தார் ஏ ஹரம் கவ்வாலியைப் பாட விருப்பம் தெரிவித்தபோது, அம்ஜத் அதற்கு அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல், அவரது பாடலை மனமாரப் பாராட்டியும் இருந்தார்.[26] தேசிய பொது வானொலி வெளியிட்ட அவரது இரங்கல் குறிப்பில், தெற்காசியாவில் கவ்வாலி என்பது இசுலாம், சூஃபி மரபின் மிகவும் பிரபலமான வெளிப்பாடுகளில் ஒன்றாகவும், இறைவனுடன் தனிப்பட்ட தொடர்பை வலியுறுத்துவதோடு சகிப்புத்தன்மை, அமைதி , சமத்துவத்தை முன்னிறுத்தும் இசை வடிவமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[27]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khurram Sohail (23 June 2016). "Amjad Sabri – The man behind a towering legacy". Dawn newspaper இம் மூலத்தில் இருந்து 22 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240222090356/https://www.dawn.com/news/1266567/amjad-sabri-the-man-behind-a-towering-legacy.
- ↑ Gaffey, Conor (23 June 2016). "Pakistan's Amjad Sabri, Famous Sufi Singer, Gunned Down in Suspected Taliban Attack". Newsweek magazine இம் மூலத்தில் இருந்து 1 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231001100437/https://www.newsweek.com/pakistans-amjad-sabri-famous-sufi-singer-gunned-down-suspected-taliban-attack-473488.
- ↑ Imtiaz Ali (22 June 2016). "Famed qawwal Amjad Sabri gunned down in Karachi". Dawn newspaper. https://www.dawn.com/news/1266514.
- ↑ Tsioulcas, Anastasia (26 June 2016). "Why Muslim Musician Gunned Down In Pakistan?". National Public Radio (NPR) - USA website. Archived from the original on 13 November 2023. Retrieved 2 July 2024.
- ↑ Gaffey, Conor (23 June 2016). "Pakistan's Amjad Sabri, Famous Sufi Singer, Gunned Down in Suspected Taliban Attack". Newsweek magazine இம் மூலத்தில் இருந்து 1 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231001100437/https://www.newsweek.com/pakistans-amjad-sabri-famous-sufi-singer-gunned-down-suspected-taliban-attack-473488.
- ↑ Tsioulcas, Anastasia (26 June 2016). "Why Muslim Musician Gunned Down In Pakistan?". National Public Radio (NPR) - USA website. Archived from the original on 13 November 2023. Retrieved 2 July 2024.
- ↑ "Amjad Sabri, Sufi singer – obituary". The Telegraph newspaper. 23 June 2016 இம் மூலத்தில் இருந்து 23 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160623172745/https://www.telegraph.co.uk/obituaries/2016/06/23/amjad-sabri-sufi-singer--obituary/.
- ↑ Graham-Harrison, Emma (23 June 2016). "Amjad Sabri: Pakistani Sufi singer shot dead in Karachi". The Guardian newspaper இம் மூலத்தில் இருந்து 22 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240622002219/https://www.theguardian.com/world/2016/jun/22/pakistani-sufi-singer-shot-dead-in-karachi.
- ↑ Khurram Sohail (23 June 2016). "Amjad Sabri – The man behind a towering legacy". Dawn newspaper இம் மூலத்தில் இருந்து 22 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240222090356/https://www.dawn.com/news/1266567/amjad-sabri-the-man-behind-a-towering-legacy.

- ↑ H. A. Kay (23 June 2016). "RIP Ghulam Amjad Sabri - I hope this won't be the end of tolerant, courageous voices". The Nation newspaper இம் மூலத்தில் இருந்து 13 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231113110248/https://www.nation.com.pk/23-Jun-2016/rip-ghulam-amjad-sabri-i-hope-this-won-t-be-the-end-of-tolerant-courageous-voices.
- ↑ "Amjad Sabri: a look back at the life of the legendary qawwal". The News International newspaper. 22 June 2016. https://www.thenews.com.pk/latest/129854-Amjad-Sabri-a-look-back-at-the-life-of-the-legendary-qawwal.
- ↑ "Amjad Sabri, Sufi singer – obituary". The Telegraph newspaper. 23 June 2016 இம் மூலத்தில் இருந்து 23 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160623172745/https://www.telegraph.co.uk/obituaries/2016/06/23/amjad-sabri-sufi-singer--obituary/.
- ↑ Gaffey, Conor (23 June 2016). "Pakistan's Amjad Sabri, Famous Sufi Singer, Gunned Down in Suspected Taliban Attack". Newsweek magazine இம் மூலத்தில் இருந்து 1 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231001100437/https://www.newsweek.com/pakistans-amjad-sabri-famous-sufi-singer-gunned-down-suspected-taliban-attack-473488.
- ↑ Graham-Harrison, Emma (23 June 2016). "Amjad Sabri: Pakistani Sufi singer shot dead in Karachi". The Guardian newspaper இம் மூலத்தில் இருந்து 22 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240622002219/https://www.theguardian.com/world/2016/jun/22/pakistani-sufi-singer-shot-dead-in-karachi.
- ↑ H. A. Kay (23 June 2016). "RIP Ghulam Amjad Sabri - I hope this won't be the end of tolerant, courageous voices". The Nation newspaper இம் மூலத்தில் இருந்து 13 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231113110248/https://www.nation.com.pk/23-Jun-2016/rip-ghulam-amjad-sabri-i-hope-this-won-t-be-the-end-of-tolerant-courageous-voices.
- ↑ "Amjad Sabri, Rahat Fateh, Abida Parveen kick-start Coke Studio 9 with an emotional tribute". Images magazine (Dawn Group of Newspapers). 2016-08-06. https://images.dawn.com/news/1175988/amjad-sabri-rahat-fateh-abida-parveen-kick-start-coke-studio-9-with-an-emotional-tribute.
- ↑ "They killed him". The Express Tribune (in ஆங்கிலம்). 2016-06-22. Retrieved 2021-08-13.
- ↑ Baloch, Saher (2017-06-22). "Remembering Amjad Sabri, the family man who loved playing Ludo" (in en). Dawn newspaper. https://www.dawn.com/news/1340680.
- ↑ "They killed him". The Express Tribune (in ஆங்கிலம்). 2016-06-22. Retrieved 2021-08-13.
- ↑ Khan, Faraz (22 June 2016). "Amjad Sabri shot dead in Karachi". The Express Tribune newspaper இம் மூலத்தில் இருந்து 23 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160623154933/https://tribune.com.pk/story/1128177/two-injured-amjad-sabris-car-comes-attack-karachi/.
- ↑ "Malala Yousafzai sends condolence message over Sabri's death". Geo TV News website. 23 June 2016. Retrieved 2 July 2024.
- ↑ "Civil society stages protest against Amjad Sabri's murder". Dunya News. 23 June 2016. Retrieved 2 July 2024.
- ↑ Uddin, Islam (29 December 2019). "Pakistani Taliban's key leader killed in Afghanistan". Anadolu Agency. https://www.aa.com.tr/en/asia-pacific/pakistani-taliban-s-key-leader-killed-in-afghanistan/1687167.
- ↑ "President Mamnoon confers civil awards on Yaum-i-Pakistan". Dawn newspaper. 23 March 2018 இம் மூலத்தில் இருந்து 28 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221128192849/https://www.dawn.com/news/1397075.