அமிர்குஸ்ரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமிர்குசுரு (இறப்பு 1325) இந்துஸ்தானி இசை வளர்ச்சியுறக் காரணமாக இருந்த முன்னோடியாவார். இவர் பல தாளங்களையும், இராகங்களையும், உருப்படிகளையும், புதிய இசைக்கருவிகளையும் அறிமுகப் படுத்தியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அமிர்குஸ்ருவின் இயற்பெயர், அபூ-அல்-ஹசன்-யானுமித்-தின்-குஸ்ரு என்பதே ஆகும். இவரின் தந்தையார் துருக்கி நாட்டவர். இவர்கள் பின்னர் துருக்கியினின்று வெளியேறி இந்தியாவின் பட்டியாலி என்ற இடத்தில் குடியேறினார்கள்.

இவர் தன் ஏழு வயதில் தன் தந்தையாரை இழந்தார். சிறு வயதிலேயே உருது, பாரசீக மொழிகளில் பாடல் இயற்றுவதில் வல்லமை பெற்றிருந்தார். குறுகிய காலத்திற்குள் பெருமளவு பாடல்கள் இயற்றினார். இவர் ஹிந்தி மொழிகளில் இயற்றிய பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன.

பட்டமும், அறிமுகப்படுத்திய இராகங்களும்[தொகு]

இவர் டில்லி சமஸ்தான சுல்தானின் அவைப் புலவராக (ஆஸ்தான வித்துவானாக) விளங்கினார். ஜலால் உத்தின் கில்ஜி என்பவர் டெல்லி சுல்தானாக இருந்த போது அமிர்கிஸ்ரு "அமிர்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் அரேபிய, இந்திய, பாரசீக இசை வகைகளை ஒப்பு நோக்கினார். அவர் காலத்தில் பிரபலமாக இருந்த பல கஷ்டமான பாடல்களை மாணவர்கள் பாட என இலகுவாக்கி வழிவகை அமைத்தார். யமன்கல்யாண், பூர்வி, பீலு, பஹார் போன்ற பல புதிய இராகங்களை உருவாக்கினார்.

அறிமுகப்படுத்திய உருப்படிகள், தாளங்கள்[தொகு]

புதிய உருப்படி வகைகளான குல்பானா, தரானா, குவாலி-கயால் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். இவரே சித்தார், தபலா, டோலக் ஆகிய இசைக்கருவிகளை உருவாக்கினார். மேலும் ஜால்-திரிதால், பாஷ்டோ போன்ற புதிய தாளங்களையும் அறிமுகப்படுத்தினார்.

சிறப்புத்தன்மையும், இறப்பும்[தொகு]

இவர் சிறந்த பாடகராக விளங்கினார். ஒரு முறை கோபால் நாயக் அரசவையில் பாடும் பொழுது மறைந்திருந்து கேட்டு விட்டு அனைவரும் பிரமிக்கும் படி மறுபடி அதை பாடிக்காட்டினார். இவர் 1325 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்குஸ்ரு&oldid=394577" இருந்து மீள்விக்கப்பட்டது