அமதெரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமதெரசு குகையில் இருந்து வெளிப்படுதல்

அமதெரசு என்பவர் சின்டோ மதத்தினர் வழிபடும் ஒரு முக்கிய பெண் கடவுள் ஆவார். இவர் கதிரவனின் கடவுளும் விண்ணகத்தின் கடவுளும் ஆவார். விண்ணகத்தில் ஒளிவீசும் என்ற பொருள் உடைய அமதெரு என்ற சொல்லிலிருந்து அமதெரசு என்ற பெயர் தோன்றியது. இவருடைய முழுப்பெயர் அமதெரசு-ஓமிகாமி. இதற்கு விண்ணகத்தில் ஒளிவீசும் பெரும் மாட்சிமையுள்ள கடவுள் என்று பொருள். கோசிகி மற்றும் நிகோன் சோகி போன்ற சப்பானிய தொன்மவியல் நூல்களின் படி சப்பானிய பேரரசர்கள் அமதெரசுவின் நேரடி வாரிசுகளாகக் கருதப்படுகின்றனர்.

பிறப்பு[தொகு]

கதிரவக் கடவுளான அமதெரசு புயல் மற்றும் கடல் கடவுள் சுசானவோ மற்றும் நிலா கடவுள் சுக்குயோமி ஆகியோரின் உடன்பிறந்தவர் ஆவர். இவர்கள் மூவருமே இசநாகி செய்த சுத்தப்படுத்தும் சடங்கின் மூலம் பிறந்தனர். இசநாகி தன் இடது கண்ணைக் கழுவிய போது அமதெரசுவும், வலது கண்ணை கழுவிய போது சுக்குயோமியும் மூக்கைக் கழுவிய போது சுசானவோவும் பிறந்தனர்.

அமதெரசு மற்றும் சுக்குயோமி[தொகு]

ஆரம்பத்தில் அமதெரசு தன் உடன்பிறந்தவரான சுக்குயோமியுடன் சேரந்து வானத்தை சரிநிகராக ஆண்டு வந்தார். ஒருநாள் அமாதெரசு தன் உயிர்த் தோழியான உணவு கடவுள் உகே மோச்சி அழைத்த விருந்திற்கு தனக்கு பதிலாக சுக்குயோமியை சென்று வருமாறு அனுப்பினார். அங்கு சென்ற சுக்குயோமிக்கு உகே மோச்சியின் உணவு பரிமாறிய விதம் சற்றும் பிடிக்காத்தால் அவரைக் கொன்றார். இதையறிந்து கோபமுற்ற அமாதெரசு இனி சுக்குயோமியின் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்று கூறி அவரை விட்டு நிரந்தமாகப் பிரிந்தார். பிறகு சுக்குயோமி பாதாளத்திற்குச் சென்றதால் அவரது ஒளி குன்றியது. அமதெரசு காலை நேரத்திலும் சுக்குயோமி இரவு நேரத்திலும் வானத்தை ஆட்சி செய்தனர். இதுவே காலையும் மாலையும் தோன்றக் காரணமானது.

அமதெரசு மற்றும் சுசானவோ[தொகு]

இசநாகி சுசானவோவை விண்ணுலகை விட்டு செல்லுமாறு கட்டளையிட்டார். சுசானவோ இறுதியாக அமதெரசுவை சந்தித்து விடைபெற்றுச் செல்ல நினைத்தான். ஆனால் அமதெரசு அவரை நம்பவில்லை. இதனால் சுசானவோ தன்னை நிரூபிக்க்க ஒரு சவால் விடுத்தான். அந்த சவாலின் படி இருவரும் பொருட்களில் இருந்து கடவுள்களை பிறக்க வைத்தனர். சுசானவோவின் வாளின் மூலம் அமதெரசு மூன்று பெண் கடவுள்களை உருவாக்கினார். அமதெரசுவின் அணிகலன் மூலம் சுசானவோ ஐந்து ஆண் கடவுள்களை உருவாக்கினார், பிறகு அமதெரசு அந்த ஐந்து ஆண் கடவுள்கள் தன் அணிகலனில் இருந்து பிறந்ததால் தனக்கே உரிமையானது என்றும் சவாலில் தானே வெற்றி பெற்றதாகவும் கூறினார். இதனால் இருவருக்கும் சண்டை நடந்தது. சுசானவோ தன் வலிமை மூலம் அமதெரசுவின் வயல்களை அழித்தார். மேலும் அமதெரசுவின் வண்டியில் இருந்த குதிரையையும் அவரது ஊழியர்களில் ஒருவரையும் கொன்று விட்டார். இதனால் அமதெரசு கோபத்துடன் அம-னோ-இவாடோ என்ற குகையில் மறைந்து கொண்டார். இதனால் உலகம் இருண்டது. இதற்கு தண்டனையாக சுசானவோ விண்ணகத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார்.

உலகில் இருள் சூழ்ந்து உயிரினஙக்ள் அனைத்தும் துன்ப்ப்பட்டன. அமதெரசுவை திரும்பக் கொண்டு வர அனைத்து கடவுள்களும் திட்டம் தீட்டினர். .அதற்காக ஒரு மரத்தில் யாடா-நோ-ககாமி என்னும் கண்ணாடியையும் யசகானி நோ மகடமா என்னும் முத்து நகையையும் குகையின் வாயிலுக்கு நேர் எதிராக கட்டி வைத்தனர். பிறகு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அந்த சத்தங்களைக் கேட்ட அமதெரசு காரணத்தை அறிய சிறிய துளை வழியாக வெளியே நோக்கினார். அப்போது சில கடவுள்கள் தங்களுக்கு வேறு ஒரு புதிய கதிரவ கடவுள் கிடைத்துவிட்டதாக கூறி மகிழ்ந்து கொண்டாடினர். இதைக்கேட்டு கோபமடைந்த அமதெரசு குகையின் வாயிலை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார். அப்போது அவர் தன் முன்னே கட்டப்பட்டிருந்த கண்ணாடியில் தன் பேரொளி வீசும் முகத்தை பார்த்தார். அதனால் அவரது ஒளி பிரதிபலிப்படைந்து இருண்ட பூமியில் பட்டது. இதனால் பூமி பழைய நிலைக்கு திரும்பியது. பயிர்கள் செழித்தன, உயிரினங்கள் வாழ்வு பெற்றன. பிறகு வலிமையின் கடவுள் அமெ-னோ-தசிகராவோ தன் பலத்தால் குகையை நிரந்தரமாக மூடிவிட்டார். பிறகு அமதெரசு மீண்டும் விண்ணுலகம் சென்று தன் பணியைத் தொடர்ந்தார்.

பிற்காலத்தில் சுசானவோ, அமதெரசுவுடன் ஏற்பட்ட சண்டையை மறந்து சமாதானமாகினார். அதற்கு அடையாளமாக குசநகி-நோ-சுருகி என்ற வாளை அமதெரசுவிற்கு உடன்பாடு பரிசாக அளித்தார்.

அமதெரசுவின் மூன்று பரிசுகள்[தொகு]

அமதெரசு தன் மகனான அமா-னோ-ஒசிகோ-மிமியிடம் பூமியை ஆளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் அமா-னோ-அசித்ததேயில் (விண்ணுலகம்-மண்ணுலகம் இரண்டையும் இணைக்கும் பாலம்) நின்றுகொண்டு பூமியில் நிகழும் பாவங்களைக் கண்டார். இதனால் பூமியை ஆள அவர் மறுத்துவிட்டார். பிறகு பூமியை ஆள பலரும் மறுத்துவிட்டனர். இறுதியாக அமதெரசுவின் பேரனும் அமா-னோ-ஒசிகோ-மிமியின் மகனுமான நினிங்கி பூமியை ஆள சம்மதித்தார். இதனால் மகிழ்ந்த அமதெரசு நினிங்கிக்கு மூன்று பரிசுகளை கொடுத்தனுப்பினார். அவை குகை நிகழ்வின் போது இருந்த யசாகானி-நோ-மகடமா என்னும் நகை மற்றும் யாடா-நோ-ககாமி என்னும் கண்ணாடி ஆகியவையும் சுசானவோ அளித்த குசநகி-நோ-சுருகி வாளும் ஆகும். இந்த மூன்றுமே நினிங்கியின் சின்னங்களாயின. பிற்காலத்தில் வந்த சப்பானிய பேரரசர்கள் இந்த மூன்றையும் தங்கள் அரசு சின்னமாகக் கொண்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  • ^ Akira Matsumura, ed. (1995). Daijirin (in Japanese) (2nd ed.). Sanseido Books. ISBN 978-4385139005.
  • ^ Jacques H. Kamstra, Encounter Or Syncretism: The Initial Growth of Japanese Buddhism
  • ^ Wallin, edited by Anne Buttimer, Luke (1999). Nature and Identity in Cross-Cultural Perspective. Dordrecht: Springer Netherlands. ISBN 9789401723923
  • ^ Roberts, Jeremy (2010). Japanese Mythology A To Z (PDF) (2nd ed.). New York: Chelsea House Publishers. ISBN 978-1604134353.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமதெரசு&oldid=2695682" இலிருந்து மீள்விக்கப்பட்டது