அப்பர் தேவாரத்தில் காணப்படும் உவமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  சங்க இலக்கியத்திலிருந்து இன்றுள்ள இலக்கியங்கள் வரை எண்ணில்லா அணிகளைப் பாடல்களில் கவிஞர்கள் பாடியிருக்கின்றார். அப்பர் தேவாரத்திலும் பலவகையான அணிகள் இயல்பாக அமைந்துள்ளன. அப்பர் தேவாரத்தில் இடம்பெறும் உவமைகளைப் பின்வருமாறு கூறலாம். 

1) இறைவனைப் பற்றிய உவமைகள் 2) இறைவியைப் பற்றிய உவமைகள் 3) அப்பர் தம்மைப் பற்றிக் கூறும் உவமைகள் 4) திருவைந்தெழுத்து உவமைகள்

1- இறைவனைப் பற்றிய உவமைகள்

  இறைவனான சிவபெருமானைப் பற்றிய பல உவமைகளைப் பாடல்களில் காணமுடிகிறது. பண்ணில் ஓசை போலவும், பழத்தினில் சுவை போலவும், கண்ணில் மணி போலவும் கலந்துள்ளான் என்று குறிப்பிடுகின்றார் (1) இறைவனின் இணையடி நீழலை 
  மாசில் வீணையும் மாலை மதியமும் 
  வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
  மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
  ஈச எனந்தை யிணையடி நீழலே (2) 

என்ற பாடியிருக்கின்றார். இறைவனின் இணையடி நிழலானது அப்பருக்கு...

• குற்றமற்ற வீணை இசையைப் போன்றும் • மாலையில் தோன்றும் மதியின் நிலவைப் போன்றும் • வீசும் தென்றலின் இனிமையைப் போன்றும் • இளவேனிலின் மாண்பு போன்றும் • வண்டு ஒலிக்கும் தாமரைப் பொய்கை போன்றும்

உள்ளதாகக் கூறியிருக்கின்றார்.

2) இறைவியைப் பற்றிய உவமைகள்

    தனக்குவமை இல்லாத இறைவனைப் பற்றிய பாக்கள் தவிர, இறைவியைப் பற்றியும் உவமைகள் வாயிலாகப் போற்றியுள்ளார். 

• இறைவியின் திருவடியானது பஞ்சு போன்றிருந்தது (3) • பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி (4) • தோள் மூங்கில் போன்றுள்ளது (5) • புருவம் வில் போன்று அமைந்துள்ளது (6) • விரல்கள் பஞ்சு போன்றிருக்கின்றன. (7) இவை போன்ற பல பாடல்களில் இறைவியை உவமைகள் வாயிலாகக் கூறியிருக்கின்றார்.

3) அப்பர் தம்மைப் பற்றிக் கூறும் உவமைகள்

  அப்பர் பல பாடல்களில் தம்மைப் பற்றி உவமைகள் மூலம் விளக்கியிருக்கின்றார். 
  கரை ஏறாமலும் கடலிடை ஆடாமலும் இருக்கும் தோணிபோல ஐம்புலன்களின் தொலலையினால் உடலிடை இனிது நில்லாமலும் இறைவனது திருவருள் வெள்ளத்தில் முழுகாமலும் உள்ளேன் (8) என்று கூறியிருக்கின்றார். 
  மத்தினால் இடிபட்டுத் தயிர் சுற்றிச் சுழன்று உடைந்து உருவம் கெடுவது போல, சித்தத்துள் ஐவர் தீயவினை பலவும் செய்வதான் என்னுள்ளம் மறுகுகின்றது (9) என்று உவமைப்படுத்தியிருக்கின்றார்.
  ஒரு பாடலில் கயிற்றினால் கட்டப்பட்ட ஊசலைத் தம் நிலைக்கு உவமை ஆக்குகின்றார். 
  உறுகயி றூசல் போல ஒன்றுவிட் டொன்று பற்றி 
  மறுகயி றூசல் போல வந்துவந் துலவுநெஞ்சம் (10)

என்கிறார். நெஞ்சை ஊஞ்சலுக்கு உவமையாக்கிக் கூறியுள்ளார்.

 சைவ சமயத்தை விட்டுச் சமண சமயம் புகுந்து இடர்ப்பட்டதனை 
 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் 
 கரை நின்றவர் கண்டுகொ ளென்று சொல்லி 
 நீத்தாய கயம்புக நூக்கியிட 
 நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன் (11)

என்ற உவமை மூலம் விளக்கியிருக்கின்றார்.

4) திருவைந்தெழுத்து உவமைகள்

  பூவினில் சிறந்த தாமரை போலவும், அரன் அஞ்சாடுதலால் சிறந்த ஆவினைப் போலவும், கோட்டமில்லாத கோவினைப் போலவும் நாவினுக்கு அருங்கலமாகச் சிறப்பது திருவைந்தெழுத்தாகும். 
  விரதம் இருப்பவர்களுக்கு அருங்கலம் திருநீறே ஆதல் போலவும், அந்தணர்களுக்கு அருமறை ஆறு அங்கங்கள் அருங்கலம் ஆதல் போலவும், சிவபெருமானுக்குத் திங்கள் அருங்கலம் ஆதல் போலவும், அடியார்க்ளுக்குத் திருவைந்தெழுத்தே அருங்கலமாகும் என்கின்றார்.
  அப்பர் தேவாரத்தில் இடம்பெறும் உவமைகள் பெரும்பாலும் ‘போல்’ என்னும் உவம உருபு கொண்டே வந்துள்ளன. நான்காம் திருமுறையிலேயே மிக அதிகமான உவமைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த, உலாவிய, கொப்பளித்த, தழுவிய போன்ற சில அரிய உவம உருபுகள் ஆளப்பட்டுள்ளன. மொத்தம் 43 உவம உருபுகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்தாகும். 

துணை நூல் பட்டியில்

1) அப்பர் தேவாரம் - 5.47.8 2) அப்பர் தேவாரம் - 5.90.1 3) அப்பர் தேவாரம் - 6.74.2 4) அப்பர் தேவாரம் - 4.53.5 5) அப்பர் தேவாரம் - 4.110.1 - 6.76.6 6) அப்பர் தேவாரம் - 6.18.9 7) அப்பர் தேவாரம் - 6.13.6 - 6.53.7 8) அப்பர் தேவாரம் - 4.31.6 9) அப்பர் தேவாரம் - 4.52.9 10) அப்பர் தேவாரம் - 4.26.6 11) அப்பர் தேவாரம் - 4.1.5