அப்துல் வாகித் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஸ்தாத் அப்துல் வாகித் கான்
பிற பெயர்கள்கிரானா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பிறப்பு1871 (1871)
இறப்பு1949 (அகவை 77–78)
சகாரன்பூர், இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாடகர், இந்திய செம்மொழி பாடகர்,
பாரம்பரிய இந்துஸ்தான் இசையில் கிரானா கரானா பாணியின் நிறுவனர் ஒருவர்

உஸ்தாத் அப்துல் வாகித் கான் (Ustad Abdul Wahid Khan) (1871-1949) கிரானா கரானாவைச் சேர்ந்த இந்திய பாரம்பரிய பாடகராவார். இவர் இந்தியாவின் சகாரன்பூரில் 1949 இல் இறந்தார். [1] [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

இவர், 1871 இல் உத்தரப் பிரதேசத்தின் கிரானாவில் பிறந்தார். [3] 1857 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் தில்லியிலிருந்து குடிபெயர்ந்த முகலாய அரசவையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களின் பல குடும்பங்களுக்கு கிரானா நகரம் ஆதரவாக இருந்தது. கிரானா கரானாவின் மூன்று பிரிவுகள் ருத்ரவீணை, சாரங்கி மற்றும் வாய்ப்பட்டு. [4] இவர், ஆரம்பத்தில் தனது தந்தை உஸ்தாத் அப்துல் மஜீத் கானிடமிருந்து வாய்ப்பாட்டும் சாரங்கியும் கற்றுக்கொண்டார். 12 வயதில், வீணையிலும், குரலிசையிலும் புகழ்பெற்ற மேதையான மியான் பாண்டே அலி கானின் சீடரான உஸ்தாத் இலாங்டே ஐதர் பக்ச் கானிடமிருந்து கற்றுக்கொள்ள இவர் கோலாப்பூருக்குச் சென்றார்.

இவர்,19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனது உறவினர் உஸ்தாத் அப்துல் கரீம் கானுடன் கிரானா கரானா இசைக் குடும்பத்தை நிறுவினார். [4] உஸ்தாத் அப்துல் கரீம் கான் இவரது சகோதரி கபூரான் பீபியை மணந்தார். பின்னர், அப்துல் கரீம் கபூரான் பீபியை புறக்கணித்து தனது மாணவியான தாராபாய் மனேவை மணந்ததினால் இவர்களுக்குள் உறவு மோசமைடைந்தது. இவரது கேட்கும் திறன் குறைபாடுடையது. இவர் சில சமயங்களில் பெஹ்ரே வாஹித் கான் (காது கேளாத கான்) என்று அழைக்கப்பட்டார். இவரது மகன் உஸ்தாத் அபீசுல்லா கான் 1946 இல் பிறந்தார். அபீசுல்லாவின் மாமாக்கள் அவருக்கு இசையில் பயிற்சி அளித்தனர், மேலும் அவர் ஒரு சாரங்கி கலைஞரானார். [3]

பாடும் தொழில்[தொகு]

இவர், மற்ற பாடகர்களின் சாயலைத் தவிர்ப்பதற்காக தனது நிகழ்ச்சியைப் பதிவு செய்வதைத் தடைசெய்தார். இவரது மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே தப்பிப்பிழைத்தன. சதுர் லால் என்பவரின் தபலாவுடன் பாடப்பட்ட பட்டீப், முல்தானி, தர்பாரி கானடா ஆகிய இராகங்களின் பதிவுகள், இசைத் தயாரிப்பாளர் ஜீவன் லால் மட்டூ அவர்களால் பாதுகாக்கப்பட்டது. இவரது பாணியை ஆவணப்படுத்த, இசைத் தயாரிப்பாளர் ஜீவன் லால் மட்டூ, அவர் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, 1947 இல் ஒரு வானொலி ஒலிபரப்பை ரகசியமாக பதிவு செய்தார். [5]

இறப்பு[தொகு]

இவர், 1949 இல் சகாரன்பூரில் இந்திய நாட்டவராக இறந்தார். [5] [6] இவரது மாணவர்களில் பண்டிட் ஜெய்சந்த் பட் (கியால் பாடகர்), சுரேஷ்பாபு மானே, கிராபாய் பரோடேகர், பேகம் அக்தர், சரசுவதிபாய் ரானே, பிரண் நாத், சுகதேவ் பிரசாத், ராம் நாராயண், முகமது ரபி ஆகியோர் அடங்குவர் .

இவரது மிகப் பெரிய பங்களிப்பு அவர் முறையான சீடர்களில் ஒருவரல்ல என்றாலும் இந்தூர் கரானாவின் அமீர் கான் மீது இவர் செலுத்திய செல்வாக்காகும். உஸ்தாத் அப்துல் கரீம் கானுடன் சேர்ந்து விலம்பிட் கியாலை உருவாக்கத் தொடங்கினர். மேலும் இவர்களின் பணிகள் அமீர்கானுக்கு தனது வர்த்தக முத்திரையான அதி விலம்பிட் பாடலை உருவாக்கத் தூண்டின . [2]

"இவர், ஒரு இராகத்தின் பாடல்களை ஏறக்குறைய 20 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை நீட்டிப்பதன் மூலம் பாரம்பரிய இந்துஸ்தானி இசையை உருவாக்கினார்." [4] "இவர் கிரானா கரானாவின் மிகச்சிறந்த குறியீடுகளில் ஒருவராவார்." [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_வாகித்_கான்&oldid=3708043" இருந்து மீள்விக்கப்பட்டது