அப்துல் காதிர் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அப்துல் காதிர் (30 ஆகத்து 1866 - 1918) இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் ஆவார். 30 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மெய்ஞ்ஞான அருள்வாக்கி, யாழ்ப்பாண சங்கன் எனும் சிறப்புப் பெயர்களை தமது கவித் திறனால் பெற்றவர் ஆவார்.

வாழ்க்கை குறிப்பு[தொகு]

அப்துல் காதிர் அவர்கள் 30 ஆகத்து 1866 இல் இலங்கையில் கண்டி மாவட்டத்தில் உள்ள போப்பிட்டிய எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தை அல்லா பிச்சை ராவுத்தர் மற்றும் இவரது தாயார் அவ்வா உம்மா. அப்துல் காதிர் அவர்கள் சிறுவயதில் அரபுப் பள்ளியில் திருக்குர்-ஆனும், தமிழ்ப் பள்ளியில் தமிழ் கல்வியும், இராணி கல்லூரியில் (தற்போது கண்டி திரினித்தி கல்லூரி) ஆங்கிலமும் கற்றார். பின்னர் தென்னிந்தியாவில் திருப்பத்தூர் தமிழ் வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராக பதவி வகித்த முகமது முத்துபாவா புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை பயின்றார்.[1]

தமிழ்ப்பணி[தொகு]

அப்துல் காதிர் அவர்கள் தமது பதினாறாவது வயதில் இருந்து கவியரங்குகளில் கலந்து கொண்டார். இவர் மெய்ஞ்ஞான அருள்வாக்கி, யாழ்ப்பாண சங்கன், வித்துவ தீபம், கல்விக்கடல், உலக தீபம் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மேலும் கவி பாடி விளக்கை எரியச் செய்து கவியால் விளக்கை அணையச் செய்தவராக கருதப்படுகிறார். விளக்கை எரியச் செய்த மற்றும் விளக்கை அணையச் செய்த பாடல்கள் முறையே[2]

எரிவாய் விரிந்தெழுந்து எண்ணெய் மேல் தோய்ந்து

கரிவாய் இருள்போகிக் காட்ட – அரியணையின்

தூண்டா விளக்கே! சுடர்விட்டு நீயென்முன்

ஈண்டிங் கெழுந்து எரி.

தூண்டா மணிவிளக்கே, துகள்போக்கும் தூயொழியே

காண்டற்கரியதோர் காட்சியே – வேண்டி

எரியவுனை வைத்ததுபோல் எல்லோரும் பார்க்க

அரியணையில் நீ நின்றணை.

படைப்புக்கள்[தொகு]

 • கண்டிக் கலம்பகம்
 • கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி
 • கண்டி நகர்ப்பதிகம்
 • சலவாத்துப் பதிகம்
 • தேவாரப் பதிகம்
 • பதாயிகுப் பதிகம்
 • பிரான்மலைப் பதிகம்
 • திருபகுதாதந்தாதி
 • மெய்ஞ்ஞானக் குறவஞ்சி
 • மெய்ஞ்ஞானக் கோவை
 • கோட்டாற்றுப் புராணம்
 • உமரொலியுல்லா பிள்ளைத்தமிழ்
 • காரணப் பிள்ளைத்தமிழ்
 • சித்திரக் கவிப்புஞ்சம்
 • பிரபந்த புஞ்சம்
 • ஆரிபுமாலை
 • பேரின்ப ரஞ்சித மாலை
 • ஞானப்பிரகாச மாலை
 • புதுமொழி மாலை
 • திருமதீனத்துமாலை
 • வினோத பதமஞ்சரி
 • நவமணித் தீபம்
 • சந்தத் திருப்புகழ்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Noolagam". பார்த்த நாள் 10 செப்டம்பர் 2019.
 2. "மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர்".