அபிதான சிந்தாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு 1934 இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. 1981 இலே தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது. அண்மையில் 2001ம் ஆண்டு தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ், 11ம் பதிப்பினை வெளியிட்டுள்ளது.

ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியாற்றினார். அப்போது தொகுக்கப்பட்டது தான் "அபிதான சிந்தாமணி". அவர் அபிதான சிந்தாமணியை தொகுத்து முடித்த பின் பதிப்பாளர்கள் யாரும் அச்சேற்ற உதவ முன் வரவில்லை. அப்போது இராமநாதபுரம் சேதுபதி அரச பரம்பரையை சேரந்த பாண்டித்துரை தேவர் அவர்கள் உதவியால் முதல் பதிப்பினை வெளியிட்டார்

தமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மொழியில் கலைக்களஞ்சிய வரிசையில் தமிழகத்திலிருந்து வெளிவந்த முதல் நூல் இது. இதற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான அபிதான கோசம் நூலைவிட இதில் அதிகமான பெயர்களுக்கு மிகுதியான விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதனோடு வேதம், திருமுறை, அரசர், முனிவர் முதலிய பிரிவுகள் பற்றிய செய்திகளை 48 தலைப்புகளிலும், சமயம், மடம், கோவில் பற்றிய செய்திகளை 15 தலைப்புகளிலும், ஜோதிடம் பற்றிய செய்திகளை 4 தலைப்புகளிலும் ஜாதி, நாடு பற்றிய செய்திகளை ஏழு தலைப்புகளிலும் அகரவரிசைகளில் அழகாக தொகுத்து வழங்குகிறது.


வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிதான_சிந்தாமணி&oldid=2084575" இருந்து மீள்விக்கப்பட்டது