உள்ளடக்கத்துக்குச் செல்

அபிடோஸ் சமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிடோஸ் சமர்
பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் கிமு 411 நவம்பர்
இடம் அபிடோஸ் அருகே, தார்தனெல்சு நீரிணை
(இன்றைய நாரா பர்னு, கனக்கலே, துருக்கி)
ஏதென்சின் வெற்றி
பிரிவினர்
ஏதென்சு எசுபார்த்தா மற்றும் கூட்டணியினர்
தளபதிகள், தலைவர்கள்
Thrasybulus,
Thrasyllus,
ஆல்சிபியாடீசு
Mindarus
பலம்
74 கப்பல்கள் + 18 கப்பல்கள் (துணைப்படை) 97 கப்பல்கள்
இழப்புகள்
குறைந்தபட்சம் 30 கப்பல்கள்

அபிடோஸ் சமர் (Battle of Abydos) என்பது பெலோபொன்னேசியப் போரின்போது நடந்த ஒரு சமர் ஆகும். இதில் ஏதெனிய கடற்படை வெற்றி பெற்றது. போரில், எசுபார்த்தன் கடற்படை, மிண்டரசின் தலைமையின் கீழ், டார்டானசில் கரையோரமாக விரட்டப்பட்டிருந்த ஒரு சிறிய நட்பு கடற்படையை மீட்க முயன்றது. ஆனால் திராசிபுலசின் தலைமையிலான ஏதெனியன் கடற்படையால் தாக்கப்பட்டது. சமர் நீண்ட நேரம் சமநிலையிலேயே நடந்தது. ஆனால் மாலையில், ஏதெனியன் துணைப்படைகளுடன் ஆல்சிபியீசின் வருகை ஏதெனியருக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தியது. மேலும் பெலோபொன்னேசியர்கள் அபிடோசில் உள்ள தங்கள் தளத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். ஆனால் வழியில் பெரும் இழப்புகளை சந்தித்தனர்.

முன்னுரை[தொகு]

சைனோசெமா சமரில் ஏதெனியன் வெற்றிக்குப் பிறகு, ஏதெனியன் கடற்படை செஸ்டோசில் ஒரு தளத்தை நிறுவியது. இதனால் அபிடோசில் உள்ள எசுபார்த்தன் கடற்படையின் எந்தவொரு நகர்வுக்கும் விரைவாக எதிர்வினை ஆற்ற முடியக்கூடியதாக இருந்தது. எசுபார்த்தன் கடற்படை தளபதியான மிண்டரஸ், ரோடியன் தளபதி டோரியசை, அவரது 14 கப்பல்களுடன், அபிடோசில் தன்னுடன் வந்து சேருமாறு அழைத்தார். அப்படி அவர் வந்து சேர்ந்தால் போரில் தீர்க்கமான வெற்றியை ஈட்டலாம் என்று நம்பினார். [1] அதன்படி, டோரியஸ் ரோட்சிலிருந்து ஹெலஸ்பாண்ட் நோக்கி வடக்கே பயணம் செய்தார். எவ்வாறாயினும், அபிடோசை அடைவதற்கு முன்பு, அவரது கப்பல்கள் ஏதெனியன் கண்காணிப்பார்களின் பார்வையில் சிக்கின. அவர்களால் அந்தக் கப்பல்கள் கரையை நோக்கி விரட்டப்பட்டன. அவை ரேடியமில் சிக்கியதாக செனபோன் தெரிவிக்கிறார். [2] அதே நேரத்தில் வரலாற்றாளர் டொனால்ட் ககன் அந்த இடத்தை தார்தனஸ் (Dardanus) என்று தெரிவிக்கிறார்; [3] டோரியஸ் ரோட்டியத்தில் கரைக்கு விரட்டப்பட்டதாகவும், பின்னர் அபிடோசை நோக்கி சிறிது தூரம் முன்னேறி டார்டானசில் இரண்டாவது முறையாக மாட்டிக்கொண்டதாகவும் டொனால்ட் ககன் கூறுகிறார். [1]

டோரியசின் அவலநிலையைப் பற்றி அறிந்த மைண்டரஸ் திராய் நகரில் ஏதனாவுக்கு பலி இட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கிருந்து அபிடோசுக்கு விரைந்தார். அதே நேரத்தில் பர்னபாசஸ் தனது இராணுவத்தை நிலத்திலிருந்து டோரியசுக்கு ஆதரவாகக் கொண்டு வந்தார். டோரியசை மீட்பதற்காக மிண்டரஸ் தனது கப்பல்களை அபிடோசிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்; இதை கவனித்த ஏதெனியர்கள், அவரை எதிர்க்க செஸ்டோசிலிருந்து புறப்பட்டனர். [4]

சமர்[தொகு]

மிண்டரஸ், டோரியசுடன் இணைந்த பிறகு, அவரது தலைமையின் கீழ் 97 கப்பல்கள் இருந்தன; [5] ஏதெனியன் கடற்படையில் 74 கப்பல்கள் இருந்தன. [6] எசுபார்த்தன்கள் ஹெலஸ்பாண்டின் ஆசியக் கரைக்கு முதுகு காட்டியபடி போருக்காக அணிவகுத்தனர். மைண்டாரஸ் வலதுபுறம் தலைமை ஏற்றார் மற்றும் சிராகுசன்கள் இடதுபுறம் இருந்தனர்; ஏதெனியர்கள் அவர்களுக்கு எதிரே வரிசையாக நின்றனர். திராசிபுலஸ் வலதுபுறமும் திராசில்லஸ் இடதுபுறமும் தலைமை வகித்தனர். [7] தளபதிகள் சமிக்ஞை செய்தபிறகு போர் தொடங்கியது. சமிக்ஞை எக்காளக்காரர்களால் கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது. போர் சமமான நிலையில் நடந்துவந்தது. நேரம் செல்லச் செல்ல, சமோசில் இருந்து 18 கப்பல்களுடன் ஆல்சிபியாடீசு வரும் வரை இரு தரப்பினராலும் தீர்க்கமான நன்மையைப் பெற முடியவில்லை. ஆரம்பத்தில், இரு கடற்படைகளும் தொலைவில் வந்து கொண்டிருக்கும் துணைப்படைகள் தங்களுடையதாக இருக்கலாம் என்று நம்பினர். ஆனால் ஆல்சிபியாடீசு அருகில் வந்தவுடன் அவர் ஒரு சிவப்புக் கொடியை ஏந்தினார். இது ஏதெனியர்களுக்கு கப்பல்கள் தங்களுடையது என்று சொன்ன ஒரு முன் ஏற்பாடு செய்யப்பட்ட சமிக்ஞை ஆகும். இதைக்கண்ட ஏதெனியர்கள் கப்பல்கள் தங்களுடையது என்று உணர்ந்தனர். இதைப் புரிந்து கொண்ட, எசுபார்த்தன் கடற்படை அபிடோசுக்கு தப்பிச் சென்றது, ஆனால் ஏதெனியர்கள் கப்பல்களைத் தாக்கியதால், வழியில் பெரும் இழப்புகளைச் சந்தித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏதெனியர்கள் 30 எசுபார்த்தன் கப்பல்களைக் கைப்பற்றினர். மேலும் சைனோசெமா போரில் எசுபார்த்தன்களால் கைப்பற்றபட்டிருந்த தங்களது 15 கப்பல்களையும் மீட்டனர். [8]

பின்விளைவு[தொகு]

இந்த கடுமையான தோல்வியை அடுத்து, மைண்டரஸ் மற்றும் எசுபார்த்தன் கடற்படையினர் கப்பல்களை பழுது பார்க்கவும், மீண்டும் கட்டவும் அபிடோசுக்கு திரும்பினர். மைண்டரஸ் எசுபார்த்தாவுக்கு துணைப்படைகளுக்கு அனுப்பப்பட்டார். மேலும் பர்னபாசசுடன் எதிர்கால போர்ப் பயணங்களுக்குத் திட்டமிட்டார். இதற்கிடையில், ஏதெனியர்கள் அவர்கள் பெற்ற வெற்றியில் அழுத்தி காலூன்ற முடியவில்லை. அவர்களின் கருவூல இருப்பு குறைவாக இருந்ததாலும், கிளர்ச்சியில் இருந்த யூபோயாவினால் நெருக்கடி ஏற்பட்டதாலும், ஏதெனியர்கள் தங்கள் முழு கடற்படையையும் ஹெலஸ்பாண்டில் வைத்திருக்க முடியவில்லை. அதற்கு பதிலாக யூபோயாவில் கிளர்ச்சியாளர்களைத் தாக்க 30 கப்பல்களை தெரமெனிசின் தலைமையில் அனுப்பினர். கிளர்ச்சியாளர்கள் போயோட்டியாவிற்கு ஒரு தரைப்பாதையை உருவாக்குவதைத் தடுக்க ஏதெனியர்களால் முடியவில்லை என்றாலும், யூபோயா, போயோட்டியா, ஏஜியன் ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளில் சூறையாடி அதன் மூலம் கணிசமான அளவு பணத்தை திரட்டுவதில் வெற்றி பெற்றனர். [9]

போருக்குப் பிறகு, ஐயோனியாவிலிருந்து திசாபெர்னெஸ் என்ற பாரசீக சட்ராப் (ஆளுநர்) வந்தார். ஒரு காலத்தில் திசாபெர்னசின் உதவியாளராகப் பணியாற்றிய ஆல்சிபியாடீசு, தனக்கு சட்ராப்பிடம் உள்ள செல்வாக்கை நிரூபிக்க விரும்பி, அவரைச் சந்திக்க, பரிசுகளைக் கொண்டு சென்றார். எவ்வாறாயினும், ஆல்சிபியாடீசு அப்போதைய நிலைமையை தவறாக மதிப்பிட்டிருந்தார். திஸ்ஸபெர்னசிடம் இருந்து தங்களுக்குக் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று பாரசீக மன்னனிடம் எசுபார்த்தன்கள் புகார் அளித்திருந்தனர். இதனால் அந்த ஆளுநர் எதாவது செய்து பாரசீக மன்னருக்கு தனது அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதனால் தன்னைக் காணவந்த ஆல்சிபியாடீசைக் கைது செய்து, அவரை சர்திசில் சிறை வைத்தார். [10] ஆல்சிபியாடீசு ஒரு மாதத்திற்குள் தப்பித்தார், என்றாலும் திசாபெர்னசுடனான அவரது செல்வாக்கின் பெருமிதம் அழிக்கப்பட்டது. [11]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Kagan, The Peloponnesian War, 407
 2. Xenophon, Hellenica 1.1.2
 3. Diodorus Siculus, Library 13.45.3
 4. Xenophon, Hellenica 1.1.5
 5. Kagan, The Peloponnesian War, 408
 6. Diodorus Siculus, Library 13.45.2
 7. Diodorus Siculus, Library 13.45.7
 8. The account of the battle given here follows that of Kagan, The Peloponnesian War, 408, and combines details from Diodorus Siculus, Library 13.45.8-13.46.5 and Xenophon, Hellenica 1.1.5-8.
 9. Kagan, The Peloponnesian War, 409
 10. Plutarch, Life of Alcibiades, 27.1-7
 11. Kagan, The Peloponnesian War, 410
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிடோஸ்_சமர்&oldid=4016752" இலிருந்து மீள்விக்கப்பட்டது