உள்ளடக்கத்துக்குச் செல்

அன்வர் இப்ராகீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்வார் இப்ராஹிம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அன்வர் இப்ராகீம்
Anwar Ibrahim
安華易卜拉欣
2019 இல் அன்வர்
10-ஆவது மலேசியப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 நவம்பர் 2022
ஆட்சியாளர்அப்துல்லா
முன்னையவர்இஸ்மாயில் சப்ரி யாகோப்
12-ஆவது, 16-ஆவது எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
18 மே 2020 – 24 நவம்பர் 2022
ஆட்சியாளர்அப்துல்லா
பிரதமர்முகிதீன் யாசின்
இஸ்மாயில் சப்ரி யாகோப்
முன்னையவர்இஸ்மாயில் சப்ரி யாகோப்
பின்னவர்முகிதீன் யாசின்
பதவியில்
28 ஆகத்து 2008 – 16 மார்ச் 2015
ஆட்சியாளர்கள்மிசான் சைனல் அபிதீன்
(2008–2011)
அப்துல் ஆலிம்
(2011–2015)
பிரதமர்அப்துல்லா அகமது படாவி
(2008–2009)
நஜீப் ரசாக்
(2009–2015)
முன்னையவர்வான் அசிசா வான் இஸ்மாயில்
பின்னவர்வான் அசிசா வான் இஸ்மாயில்
மக்கள் நீதிக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 நவம்பர் 2018
Deputyஅஸ்மின் அலி
(2018–2020)
ராபிஸி ராம்லி
(2022 முதல்)
முன்னையவர்வான் அசிசா வான் இஸ்மாயில்
பாக்காத்தான் அரப்பான் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 மே 2020
குடியரசுத் தலைவர்வான் அசிசா வான் இஸ்மாயில்
முன்னையவர்மகாதீர் பின் முகமது
7-ஆவது மலேசிய துணைப் பிரதமர்
(பதில் பிரதமர்: 19 மே – 22 சூலை 1997)
பதவியில்
1 திசம்பர் 1993 – 2 செப்டம்பர் 1998
ஆட்சியாளர்கள்அசுலான் சா
யாஃபர்
பிரதமர்மகாதீர் பின் முகமது
முன்னையவர்காபார் பாபா
பின்னவர்அப்துல்லா அகமது படாவி
நிதி அமைச்சர்
பதவியில்
15 மார்ச் 1991 – 2 செப்டம்பர் 1998
ஆட்சியாளர்கள்அசுலான் சா
யாஃபர்
பிரதமர்மகாதீர் பின் முகமது
முன்னையவர்தயிம் சைனுதீன்
பின்னவர்மகாதீர் பின் முகமது
கல்வி அமைச்சர்
பதவியில்
11 ஆகத்து 1986 – 15 மார்ச் 1991
ஆட்சியாளர்கள்இசுக்காந்தர்
அசுலான் சா
பிரதமர்மகாதீர் பின் முகமது
முன்னையவர்அப்துல்லா அகமது படாவி
பின்னவர்சுலைமான் தவூத்
வேளாண்மைத் துறை அமைச்சர்
பதவியில்
17 சூலை 1984 – 10 ஆகத்து 1986
ஆட்சியாளர்இசுக்காந்தர்
பிரதமர்மகாதீர் பின் முகமது
கலாச்சார, இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர்
பதவியில்
2 சூன் 1983 – 17 சூலை 1984
ஆட்சியாளர்அகமது சா
பிரதமர்மகாதீர் பின் முகமது
Malaysian நாடாளுமன்றம்
for தம்பூன்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 நவம்பர் 2022
முன்னையவர்அகமது அசுமு
(பெ.நபெர்சாட்டு)
பெரும்பான்மை3,736 (2022)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அன்வர் பின் இப்ராஹிம்

10 ஆகத்து 1947 (1947-08-10) (அகவை 76)
புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு, மலாயா[1]
அரசியல் கட்சி அம்னோ (1982–1998)
மக்கள் நீதிக் கட்சி (PKR) (1999 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் ஹரப்பான் (PH) (2015 முதல்)
பாக்காத்தான் ராக்யாட் (PR) (2008–2015)
மாற்று பாரிசான் (BA) (1999–2004)
தேசிய முன்னணி (BN) (1982–1998)
துணைவர்
பிள்ளைகள்6
வாழிடம்சிலாங்கூர்
முன்னாள் கல்லூரிமலாய் கல்லூரி கோலாகங்சார் மலாயா பல்கலைக்கழகம் (இளங்கலை)
மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் (முதுகலை)
கையெழுத்து
இணையத்தளம்வலைதளம்

டத்தோ ஸ்ரீ உத்தாமா அன்வார் இப்ராகிம் (ஆங்கிலம்: Anwar bin Ibrahim; மலாய்: Anwar bin Ibrahim; சீனம்: 安華易卜拉欣; பிறப்பு: 10 ஆகத்து 1947) மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2022 நவம்பர் 24-ஆம் தேதி முதல் மலேசியாவின் 10-ஆவது பிரதமராகப் பதவியில் உள்ளார்.[3]

ஆகத்து 2008 முதல் மார்ச் 2015 வரையும்; பின்னர், மே 2020 முதல் நவம்பர் 2022 வரையிலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். இவர் மே 2020 முதல் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவராகவும், நவம்பர் 2018 முதல் மக்கள் நீதிக் கட்சியின் தலைவராகவும் பதவியில் உள்ளார்.

அன்வார் தன் அரசியல் வாழ்க்கையை அங்காத்தான் பெலியா இசுலாம் மலேசியா (Angkatan Belia Islam Malaysia (ABIM) என்ற இளைஞர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராகத் தொடங்கினார்.[4] பின்னர், அப்போதைய பிரதமர் மகாதீர் பின் முகமதுவின் அழைப்பை ஏற்று, தேசிய முன்னணியின் முதன்மைக் கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பில் அன்வார் சேர்ந்தார். அதற்கடுத்து, அன்வார் 1980-களிலும் 1990-களிலும் அடுத்தடுத்த அரசுகளில் பல அமைச்சரவைப் பதவிகளை வகித்தார்.

பொது

[தொகு]

1990-களில் துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக இருந்தார், 1997 ஆசிய நிதி நெருக்கடியின் போது மலேசியாவை வெற்றிகரமாக முன்கொணர்ந்தார்.[5] 1998-இல், பிரதமர் மகாதீர் பின் முகமது இவரை அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கினார். இதனை அடுத்து அன்வார் அரசாங்கத்திற்கு எதிராக சீர்திருத்த இயக்கத்தை முன்னெடுத்தார். பாற்புணர்ச்சி வழக்கில் அன்வார் 1999 ஏப்ரலில் சிறையில் அடைக்கப்பட்டார். இது மனித உரிமைக் குழுக்களாலும் பல வெளிநாட்டு அரசுகளினாலும் விமர்சிக்கப்பட்டது.[6] அவரது தண்டனை ரத்து செய்யப்பட்ட பின்னர் 2004-இல் அவர் விடுவிக்கப்பட்டார்.

அன்வார் 2008 முதல் 2015 வரை எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் பதவிக்கு வந்தார், 2008, 2013 பொதுத் தேர்தல்களில் தோல்வியுற்ற பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் எதிர்க்கட்சிகளை இணைத்தார்.

மலேசியப் பொதுத் தேர்தல் 2013

[தொகு]

2013 தேர்தல் முடிவுகளை மறுத்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் போராட்டத்தை நடத்தினார். 2014-இல், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைவராவதற்கு அன்வார் எடுத்த முயற்சி ஒன்பது மாத அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. 2015-இல் இரண்டாவது பாற்புணர்ச்சிக் குற்றச்சாட்டில் அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[7]

சிறையில் இருக்கும் போதே, மகாதீர் பின் முகமதுவின் புதிய பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் அன்வார் மீண்டும் சேர்த்தார். அக்கூட்டணி 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. குறிப்பிடப்படாத இடைக்காலத்திற்குப் பிறகு அன்வார் தன்னைப் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கான திட்டத்தை மகாதீர் கோடிட்டுக் காட்டினார்.[8] அன்வார் கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது மன்னரிடம் இருந்து அரச மன்னிப்பைப் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[9][10]

போர்ட்டிக்சன் இடைத்தேர்தல்

[தொகு]

2018-ஆம் ஆண்டு போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் திரும்பினார். அதே நேரத்தில் அவரின் மனைவி வான் அசிசா வான் இஸ்மாயில் அரசாங்கத்தில் துணைப் பிரதமராக பணியாற்றினார். 2020–22 மலேசிய அரசியல் நெருக்கடியின் போது பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சரிவடைந்தது. முகிதீன் யாசின் தலைமையிலான புதிய பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.

மே 2020-இல் அன்வார் இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார். பக்காத்தான் ஹராப்பானை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு 2022 மலேசிய பொதுத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற அன்வார், 2022 நவம்பர் 24 அன்று மலேசியாவின் பத்தாவது பிரதமராகப் பதவியேற்றார்.[11]

அன்வார் நீண்ட காலமாக இசுலாமிய மக்களாட்சிக்காகவும், மலேசியாவின் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அரசியலுக்கு வெளியே, அன்வார் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பதவி வகித்துள்ளார்.

மலேசியப் பொதுத் தேர்தல் 2018

[தொகு]

இரண்டாவது முறையாக, அன்வார் இப்ராகிம் சிறையில் இருந்தபோது, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. சில நாட்களுக்குப் பிறகு, அன்வார் மலேசியப் பேரரசரிடம் இருந்து அரச மன்னிப்பைப் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

2018-ஆம் ஆண்டு போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் அவர் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 2020 பிப்ரவரி 24-ஆம் தேதி, மகாதீர் பின் முகமது தம்முடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து ஆளும் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து 26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (பி.பி.பி.எம்) விலகியது. கூடுதலாக, கெஅடிலான் (Parti Keadilan Rakyat) கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளைத் துறப்பு செய்தனர்; சுயேச்சையான ஒரு கூட்டணியை உருவாக்கினர். இதன் மூலம் பாக்காத்தான் ஹரப்பான் அரசு கவிழ்ந்து. அன்வார் எதிர்க் கட்சித் தலைவர் ஆனார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

அன்வார் இப்ராகிம், மலாயா, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், செருக் தோக்குன் கிராமப் பகுதியில் பிறந்தவர்.[12] அவரின் தந்தையார், இப்ராகிம் பின் அப்துல் ரகுமான் (Ibrahim bin Abdul Rahman), ஒரு மருத்துவமனையில் சுமை தூக்குபவராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர்.

பின்னர், இப்ராகிம் பின் அப்துல் ரகுமான் அரசியலில் ஈடுபட்டார். அயராத உழைப்பு, விடா முயற்சியின் காரணமாக 1959 - 1969-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய செபராங் பிறை பகுதியில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டார்.

1964 முதல் 1969 வரை சுகாதார அமைச்சகத்தில் நாடாளுமன்றச் செயலாளராகவும் சேவை செய்தார். 1969-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் கெராக்கான் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அன்வாரின் தாயார், சே யான் பிந்தி உசைன் (Che Yan binti Hussein), பினாங்கின் அம்னோ அரசியலில் சாதாரண சேவைகளில் ஈடுபட்டு வந்த ஓர் இல்லத்தரசி ஆகும்.[13]

இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்

[தொகு]

அன்வார் இப்ராகிம், தன் இடைநிலைக் கல்வியை, கோலாகங்சார் மலாய்க் கல்லூரியில் (Malay College Kuala Kangsar) பயின்றார். பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்த அவர், அங்கு மலாய் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அதன் பின்னர் 1974-ஆம் ஆண்டு முதல் 1975-ஆம் ஆண்டு வரையில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (National University of Malaysia) மாணவராகப் பதிவு செய்து கொண்டு மலாய் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[14]

ஆரம்ப ஆண்டுகள் (1968-1982)

[தொகு]
2005-ஆம் ஆண்டில் அன்வார் இப்ராகிம்

1968-ஆம் ஆண்டு முதல் 1971-ஆம் ஆண்டு வரை மலாயாப் பல்கலைக்கழக மாணவராக இருந்த போது, முஸ்லீம் தேசிய மாணவர் சங்கத் தலைவராகவும் (National Union of Malaysian Muslim Students), மலாயாப் பல்கலைக்கழக மலாய் மொழி சங்கத்தின் (University of Malaya Malay Language Society) தலைவராகவும் இருந்தார். 1971-ஆம் ஆண்டில், அவர் அபீம் (ABIM) எனும் மலேசிய இசுலாமிய இளைஞர்கள் (Angkatan Belia Islam Malaysia) அணியின் உறுப்பினரானார்.

1974-ஆம் ஆண்டில், கிராமப்புற வறுமை மற்றும் பட்டினி ஆகியவற்றுக்கு எதிராக மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act (ISA) கீழ் அன்வார் கைது செய்யப்பட்டார். கமுந்திங் தடுப்பு மையத்தில் அவருக்கு (Kamunting Detention Centre) 20 மாதங்கள் சிறைவாசம்

அரசாங்க பணிகள் (1982-1998)

[தொகு]

1982-ஆம் ஆண்டில் மலேசிய இசுலாமிய இளைஞர்கள் அணியின் மூலமாக அம்னோவில் இணைந்தார். குறுகிய காலத்திலேயே உயர்ப் பதவிகளுக்கு உயர்ந்தார்.

 • 1983-ஆம் ஆண்டில் கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்ப் பதவி;
 • 1984-ஆம் ஆண்டில் விவசாயத் துறை அமைச்சர்ப் பதவி;
 • 1986-ஆம் ஆண்டில் கல்வி அமைச்சர்ப் பதவி;

ஆகிய அமைச்ச்சர் பதவிகளை வகித்தார். கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தேசியப் பள்ளி பாடத் திட்டத்தில் பல புதிய கொள்கைகளை அறிமுகப் படுத்தினார். அவரின் முக்கிய மாற்றங்களில் ஒன்று; மலேசியாவின் தேசிய மொழியின் பெயரைப் பகாசா மலேசியா (Bahasa Malaysia) என்பதில் இருந்து பகாசா மலாயு (Bahasa Melayu) என மாற்றியது ஆகும்.

விமர்சனங்கள்

[தொகு]

மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் அவரின் இந்த நடவடிக்கையை விமர்சித்தனர். இளைய தலைமுறையினர் தேசிய மொழியில் இருந்து விலகுவதற்கு அது ஒரு காரணமாக அமையலாம் என்று விமர்சித்தனர். ஏனெனில் அது மலேசியர்களுக்குச் சொந்தமானது அல்ல; மலாய்க்காரர்களுக்குச் சொந்தமானது என்றும் விமர்சித்தார்கள்.

யுனெசுகோவின் (United Nations Educational, Scientific and Cultural Organization) 25-ஆவது பொது மாநாட்டில் அன்வார் இப்ராகிம் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-ஆம் ஆண்டில், மலேசிய அனைத்துலக இசுலாமிய பல்கலைக்கழகத்தின் (International Islamic University of Malaysia) இரண்டாவது தலைவராக நியமிக்கப் பட்டார்.

மலேசியாவின் துரிதப் பொருளாதார வளர்ச்சி

[தொகு]

மலேசியாவின் முன்னாள் சட்ட அமைச்சர் சாயித் இப்ராகிமின் (Zaid Ibrahim) கூற்றுப்படி, அன்வார் இப்ராகிம், "முழு அரசாங்க அமைப்பையும் இசுலாமிய மயமாக்க உதவினார்; மேலும் 1980-களில் கல்வி அமைச்சராக இருந்தபோது கல்வி முறையை இசுலாமிய மயமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.[15]

பின் 1991-ஆம் ஆண்டில், அன்வார் இப்ராகிம் மலேசியாவின் நிதி அமைச்சரானார். அவர் பதவி வகித்த காலத்தில், அவரின் தாக்கம் உடனடியாகத் தெரிய வந்தது. மலேசியா துரிதப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது.

சிறந்த நிதி அமைச்சர்

[தொகு]

அன்வார் இப்ராகிம் நிதியமைச்சரான சிறிது காலத்திலேயே, யூரோமனி அமைப்பு (Euromoney), அவரை உலகில் சிறந்த முதல் நான்கு நிதி அமைச்சர்களில் ஒருவராகத் தேர்வு செய்தது. 1996 ஆம் ஆண்டில் ஆசியமனி (Asiamoney) அமைப்பு, அவரை ஆண்டின் சிறந்த நிதி அமைச்சராக அறிவித்தது.

1997 ஆசிய நிதி நெருக்கடியின் போது, அன்வார் இப்ராகிம், மலேசியாவின் துணைப் பிரதமராகவும் மற்றும் நிதியமைச்சராகவும் இருந்தார். பிரச்சினைக்கு உரிய ஒரு காலக் கட்டத்தில் மலேசியாவை நல்ல முறையில் வழிநடத்தியதற்காக இன்றும் பாராட்டப்படுகிறார். நாட்டின் அதிகமான செலவுகளைக் குறைத்தார்.

அனைத்துலக நாணய நிதியம்

[தொகு]

1998 மார்ச் மாதம் தொடங்கி முதல் 1998 செப்டம்பர் வரை உலக வங்கி (International Monetary Fund (IMF) மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் மேம்பாட்டுக் குழுவின் (Chairman of the Development Committee of World Bank) தலைவராகவும் அன்வார் இப்ராகிம், தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16]

பின் 1991 ஆம் ஆண்டில்,. நிதி அமைச்சர் பதவி வகித்த காலத்தில், அவரது தாக்கம் உடனடியாக இருந்தது; மலேசியா துரித பொருளாதார வளர்ச்சி பெற்றது. 1993 ஆம் ஆண்டில் அப்போதைய அம்னோ துணைத் தலைவராக இருந்த கபார் பாபாவைத் தோற்கடித்தார். வெற்றி பெற்ற அவர் பிறகு துணைப் பிரதமராக ஆனார்.

ஒரு காலக் கட்டத்தில் மகாதீர் பின் முகமதுவின் தீவிர ஆதரவாளரான அன்வார் இப்ராகிம், காலப் போக்கில் அவரின் எதிரியானார். மகாதீரின் சர்வதிகாரப் போக்கு, குடும்ப அரசியல், ஊழல், நிதி மோசடி போன்றவை முதன்மைக் காரணங்கள் என அவர் குறிப்பிட்டார். இத்தகைய வெளிப்படையான குற்றச்சாட்டுகள் இருவருக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தின.

துணைப் பிரதமர் பதவி (1993–1998)

[தொகு]
1998-இல் பென்டகன் அலுவலகத்தில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் வில்லியம் கோகன் (வலது புறம்); அன்வார் இப்ராகிம்ச் சந்திப்பு.

1993-ஆம் ஆண்டில், அம்னோ மாநாட்டில் அம்னோவின் துணைத் தலைவராக இருந்த காபார் பாபாவிற்கு (Ghafar Baba) எதிராகப் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு, மலேசியாவின் துணைப் பிரதமரானார். மகாதீருடன் "மகன்-தந்தை" உறவைப் பற்றி அடிக்கடி பொதுவெளியில் குறிப்பிட்டு வந்தார்.

அந்த வகையில் மகாதீருக்குப் பிறகு மலேசியாவின் பிரதமராக அவர் எதிர்பார்க்கப்பட்டார். அப்போது, துணைப் பிரதமர் பதவிக்கு அன்வார் உயர்த்தப் படுவார் என்றும் ஊகங்கள் பரவின.

தற்காலிகப் பிரதமர் பதவி

[தொகு]

1997 மே மாதம், மகாதீர் இரண்டு மாத விடுமுறை எடுத்தார். அன்வாரை தற்காலிகப் பிரதமராக நியமித்தார்.[17] மகாதீர் இல்லாத காலத்தில், அன்வார் சுதந்திரமாக தீவிர நடவடிக்கைகளை எடுத்தார்.

அவை மகாதீரின் கொள்கைகளுடன் நேரடியாக முரண்பட்டன; நாட்டின் ஆளும் வழிமுறைகளையும் மாற்றியது. நிதி நெருக்கடிக்கு மலேசியா எவ்வாறு பதிலளிக்கும் என்பது போன்ற பிரச்சினைகள் இந்த மோதலின் முன்னணியில் இருந்தன.

இருப்பினும், 1990-களின் இறுதியில், இருவரின் எதிர்மறையான கருத்துக்களால் மகாதீருடனான உறவு மோசம் அடையத் தொடங்கியது.[18][19]

அன்வாரின் வெளிப்படையான குற்றச்சாட்டுகள்

[தொகு]

அம்னோவிலும் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் கூட்டணியிலும் பரவலான நிலையில் ஊழல் இருப்பதாக அன்வார் விமர்சித்தார். குருதிச் சலுகை என்று அழைக்கப்படும் உறவினர்களுக்கு அளிக்கும் தனிச் சலுகைகள் (nepotism); தகுதி பாராமல் முக்கியப் பதவிகளில் நண்பர்களை அமர்த்துதல் (குரோனிசம் - cronyism) போன்ற ஒரு கலாசாரம் நாட்டில் மலிந்து வருவதாகவும் அன்வார் விமர்சனம் செய்தார்.

இவையே மகாதீருக்கு எதிராக அன்வாரின் முன்னணித் தாக்குதல்களாக அமைந்தன. மகாதீர் அமைத்து வைத்து இருந்த பாதுகாப்புவாதக் கொள்கைகளை (protectionist policies) அகற்றுவதற்கு அன்வார் இப்ராகிம் முயற்சிகள் செய்தார். அன்வாரின் அந்த முயற்சிகள் மகாதீரை மேலும் கோபப் படுத்தின. நாட்டில் ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளுக்கு "குரோனிசம்" என்பது ஒரு முக்கிய காரணம் என்று அன்வாரால் அடையாளம் காணப்பட்டது.

1997 ஆசிய நிதி நெருக்கடி

[தொகு]

1997 ஆசிய நிதி நெருக்கடியின் போது, அன்வார் இப்ராகிம், ஒரு நாட்டின் நிதி அமைச்சர் எனும் தகுதியில் உலக வங்கியின் திட்டங்களை ஆதரித்தார். அந்த வகையில் அரசாங்க செலவினங்களை 18% குறைத்தார். அமைச்சர்களின் சம்பளத்தை குறைத்தார்.

பெரிய திட்டங்களை ஒத்திவைக்கும் சிக்கன நகர்வுகளையும் அறிமுகம் செய்தார். மகாதீரின் வளர்ச்சித் திட்டங்களின் மூலக் கல்லாக விளங்கிய "மெகா திட்டங்கள்" பெருமளவில் குறைக்கப் பட்டன.[19]

தடையற்ற சந்தை அணுகுமுறை

[தொகு]

பல மலேசிய நிறுவனங்கள் திவால் நிலையை எதிர்கொண்டன. இருந்தாலும், அந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவிகள் செய்யாது என்று அன்வார் அறிவித்தார். "வங்கிகள் தங்களைத் தாங்களாகவே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் தலையிடாது" என்று அறிவித்தார்.

அந்நிய முதலீடு மற்றும் வர்த்தக தாராள மயமாக்கல் உள்ளிட்ட நெருக்கடிக்கு தடையற்ற சந்தை அணுகுமுறையை அன்வார் ஆதரித்தார். ஜார்ஜ் சொரெஸ் (George Soros) போன்ற நாணய ஊக வணிகர்கள் தான், 1997 ஆசிய நிதி நெருக்கடிக்கு காரணமானவர்கள் என மகாதீர் குற்றம் சாட்டினார்; மற்றும் நாணயக் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் மீது இறுக்கமான கட்டுப்பாடுகளையும் விதித்தார்.[20]

அன்வார் பிரதமராக முடியாது

[தொகு]

1998-ஆம் ஆண்டில் நியூஸ் வீக் (Newsweek) இதழ் அன்வாரை "ஆண்டின் ஆசியர்" (Asian of the Year) என்று அறிவித்தது. இருப்பினும், அதே ஆண்டில், அன்வார் மற்றும் மகாதீருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளும் மோசம் அடைந்தன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அம்னோ பொதுக் கூட்டத்திலும் அன்வார் மற்றும் மகாதீருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் மேலும் மோசம் அடைந்தன.

அன்வாரின் நண்பரான அகமத் சாகிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) தலைமையிலான அம்னோவின் இளைஞர் பிரிவு, "குரோனிசம் மற்றும் நேபாட்டிசம்" (cronyism and nepotism) பற்றிய விவாதத்தைத் தொடங்கும் என்று அறிவிப்பைச் செய்தது. இதைத் தொடர்ந்து, அம்னோ பொதுக் கூட்டத்தில், காலித் சாப்ரி (Khalid Jafri) என்பவர் எழுதிய ஒரு நூல் விநியோகிக்கப்பட்டது. அந்த நூலின் பெயர்: அன்வார் பிரதமராக முடியாது என்பதற்கான 50 காரணங்கள். (ஆங்கிலம்: 50 Reasons Why Anwar Cannot Become Prime Minister; மலாய்: 50 Dalil Kenapa Anwar Tidak Boleh Jadi PM). அந்த நூலில் ஓரினச் சேர்க்கை பற்றிய படங்கள் இருந்தன; மற்றும் அன்வாருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்தன.

காலித் சாப்ரியின் மீது அவதூறு வழக்கு

[தொகு]

காலித் சாப்ரி என்பவர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த உத்துசான் மலேசியா (Utusan Malaysia) செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர்; நிறுத்தப்பட்ட அரியான் நேசனல் (Harian National) பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்தவர்.

இதற்கிடையில் காலித் சாப்ரியின் நூல் மேலும் விநியோகிக்கப் படுவதைத் தடுக்க அன்வார் இப்ராகிம், நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றார். அத்துடன் நூலின் ஆசிரியர் காலித் சாப்ரியின் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். தவறான செய்திகளுடன் தீங்கு இழைத்ததாக நூலின் ஆசிரியர் மீது காவல்துறை குற்றப் பதிவைப் பதிவு செய்தது. அந்த நூலின் உண்மைத் தன்மையை விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.[21]

பதவி பறிப்பு மற்றும் கைது

[தொகு]

1998 செப்டம்பர் 2-ஆம் தேதி, அன்வார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் மலேசியாவில் சட்டவிரோதமான ஒரு செயலுக்காக அவர் விசாரணையில் இருப்பதாகவும் பல அறிக்கைகள் வெளியாகின. அடுத்த நாள், 1998 செப்டம்பர் 3-ஆம் தேதி, அன்வார் அம்னோவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்டு நாளிதழ் (Sydney Morning Herald) "அப்பட்டமான அரசியல் பிழை" (blatantly political fix-up) என்று செய்தி வெளியிட்டது.[22] அன்வார் 1998 செப்டம்பர் 20-ஆம் தேதி, கைது செய்யப்பட்டார். நாட்டின் சர்ச்சைக்குரிய மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act (ISA) கீழ் விசாரணையின்றி காவலில் வைக்கப் பட்டார்.

கருமை நிறக் கண்

[தொகு]

அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர், பிரதமர் மகாதீர். சில வாரங்களுக்குப் பிறகு, போலீஸ் விசாரணையில் தலையிட்டதாக அன்வார் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 1998-இல் அவர் போலீஸ் காவலில் இருந்தபோது, அன்வாரை அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) அப்துல் ரகீம் முகமட் நூர் (Abdul Rahim Mohd Noor) தாக்கியதாகவும் அறியப் படுகிறது.

முதன்முறையாக அன்வார் நீதிமன்றத்திற்குகு அழைத்து வரப்பட்ட போதுதான், அவரின் இடது கண் கருமை நிறம் அடைந்து இருப்பதைப் பொதுமக்களும், ஊடகங்களும் பார்த்தனர். பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக அன்வார் தன்னைத் தானே ஏற்படுத்திக் கொண்ட காயமாக இருக்கலாம் என்று மகாதீர் கூறினார்.

இருப்பினும் 2000-ஆம் ஆண்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ரகீம் முகமட் நூர், அன்வாரைத் தாக்கியதாக் குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அப்துல் ரகீம் முகமட் நூர், அன்வாரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்; நஷ்ட ஈடும் கொடுத்தார்.[23]

டி. என். ஏ. சாட்சியங்கள்

[தொகு]

விசாரணையின் போது, அன்வாரின் விந்து கறை படிந்ததாகக் கூறப்படும் மெத்தை, அன்வாரின் பாலியல் செயல்களுக்கான டி. என். ஏ. (DNA) ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. டி. என். ஏ. சோதனைகள் நேர்மறையாக அமைந்தாலும், மெத்தைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அன்வார் மறுத்தார்.

டி. என். ஏ. வேதியியலாளர் லிம் காங் பூன் (Lim Kong Boon) என்பவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போது; மெத்தையில் இருந்த 13 விந்து கறைகளில் 10-இல் இருந்து எடுக்கப்பட்ட டி. என். ஏ. அன்வாரின் டி. என். ஏ.வுடன் ஒத்துப் போகிறது என்று கூறினார்.[24][25]

எதிர்த்தரப்பு வாதங்கள்

[தொகு]

அன்வார் மயக்கம் அடைந்த நிலையில் இருந்த போது அவரிடம் இருந்து டி. என். ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று எதிர்த்தரப்பு வாதிட்டது. போலீஸ் காவலில் அன்வார் தாக்கப்பட்ட பிறகு, தவறான தடயவியல் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் எதிர்த்தரப்பு வாதிட்டது. இருப்பினும், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அகஸ்டின் பால் (Augustine Paul), டி. என். ஏ. ஆதாரத்தை ஏற்றுக் கொண்டார்.[24][25]

1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதன் முடிவை வழங்கியது. ஊழல் மற்றும் ஓரினப் புணர்ச்சிக்காக அன்வாருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மற்றும் ஒரு குற்றத்திற்காக ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஊழல் குற்றத்திற்கான ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை முடித்த பிறகு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.[26]

பன்னாட்டு மன்னிப்பு அவை

[தொகு]

அன்வார் மீதான வழக்கு விசாரணையும்; அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும்; அனைத்துலகச் சமூகத்தவரால் பரவலாக விமர்சிக்கப்பட்டு குறை சொல்லப்பட்டது.

அன்வார் மீதான விசாரணையில் "காவல்துறை, அரசு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்களின் அரசியல் ஊடுருவல்கள் உள்ளன" என்று பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) கூறியது. (The trial proceedings exposed a pattern of political manipulation of key state institutions including the police, public prosecutor's office and the judiciary)

அன்வாரை ஓர் அரசியல் எதிரியாகவும்; அவரை அமைதிப் படுத்துவதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டு; அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கலாம் என்றும் பன்னாட்டு மன்னிப்பு அவை கூறியது. அன்வாரை ஒரு மனசாட்சிக் கைதியாக (prisoner of conscience) அறிவித்தது.[27]

2005 செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் (Federal Court) அன்வாரின் தண்டனையை ரத்து செய்தது; மற்றும் அவரைத் தனிமைச் சிறையில் (solitary confinement) இருந்தும் விடுவித்தது.[28]

அன்வார் தொடுத்த அவதூறு வழக்குகள்

[தொகு]

காலித் சாப்ரி அவதூறு வழக்கு 2004

[தொகு]

2004-ஆம் ஆண்டில் அன்வார் மீதான முதலாம் ஓரினச் சேர்க்கையின் தீர்ப்பு ஓரளவிற்கு ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவாக அன்வார் ஏற்கனவே ஊழல் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து விட்டதால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[29]

அன்வார் பிரதமராக முடியாது என்பதற்கான 50 காரணங்கள் (50 Reasons Why Anwar Cannot Become Prime Minister) எனும் நூலை எழுதிய காலித் சாப்ரி (Khalid Jafri) என்பவர் மீது அன்வார் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் 2005-ஆம் ஆண்டு, காலித் சாப்ரி, நீரிழிவு நோயால் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்து விட்டார். இருப்பினும் காலித் சாப்ரி அவதூறு செய்ததாக நீதிமன்றம் கண்டறிந்தது. அந்த வகையில் காலித் சாப்ரி அன்வாருக்கு மில்லியன் கணக்கான ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.[30]

மகாதீர் அவதூறு வழக்கு 2004

[தொகு]

1999-ஆம் ஆண்டில், மலேசியாவில் நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் அன்வார் ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டார் என்றும்; அன்வார் ஓர் ஓரினச் சேர்க்கையாளர் என்றும்; பிரதமர் மகாதீர் கூறியதற்காக, மகாதீருக்கு எதிராக அன்வார் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.[31]

1998-ஆம் ஆண்டு அன்வாரை மகாதீர் தன் அமைச்சரவைப் பதவிகளில் இருந்து நீக்கியது அரசியலமைப்பு படி செல்லுபடியாகும் என்று கூட்டரசு நீதிமன்றம் 2010 மார்ச் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது.[32]

மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு 2004

[தொகு]

அன்வார் ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான மேல்முறையீடு 2004 செப்டம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மலேசிய சட்டத்தின்படி, ஒரு நபர் தன் தண்டனைக் காலம் முடிந்து, ஐந்து ஆண்டுகளுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் மேல் முறையீட்டில் வெற்றி பெற்றால் அவர் உடனடியாக அரசியலுக்குத் திரும்பலாம். செப்டம்பர் 7-ஆம் தேதி, அன்வாரின் மேல்முறையீட்டை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

இருப்பினும், செப்டம்பர் 15-ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றம், அன்வாரைக் குற்றவாளியாகக் கண்டறிந்தது. உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை நிலைநிறுத்தியது. 14 ஏப்ரல் 2008 வரை மலேசிய அரசியலில் அன்வார் ஈடுபடக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

சிறைத் தண்டனைக்குப் பின்னர் 2005-2006

[தொகு]

2005 செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் (Federal Court) அன்வாரின் தண்டனையை ரத்து செய்தது. அவர் சிறையில் இருந்து வெளியானதும் பற்பல பொதுநல வேலைகளில் ஈடுபட்டார். அத்துடன் இலாப நோக்கமற்ற சேவைகளிலும் ஈடுபட்டார்.

முதலில் இங்கிலாந்து, ஆக்சுபோர்டு மாநகரில் உள்ள செயின்ட் அந்தோனி கல்லூரியில் (St Antony's College, Oxford) ஆசிரியர் பதவியை வகித்தார். அங்கு அவர் விரிவுரையாளராகவும், மூத்த இணை உறுப்பினராகவும் (Senior Associate Member) பணியாற்றினார்.

கல்வியாளராகச் சேவைகள்

[தொகு]

அடுத்து, அமெரிக்கா, வாஷிங்டன் மாநகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சர்வதேச ஆய்வுப் பள்ளியில் (Johns Hopkins University's School of Advanced International Studies) ஒரு சிறப்புமிக்க மூத்த வருகை தரும் கல்விமானாக (Distinguished Senior Visiting Fellow) பணி புரிந்தார்.

2005-2006-ஆம் ஆண்டுகளில், அமெரிக்கா, வாஷிங்டன் மாநகரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் (Georgetown University) வெளிநாட்டுச் சேவைப் பள்ளியில் (School of Foreign Service) முசுலீம்-கிறிஸ்தவ புரிதலுக்கான மையத்தில் (Prince Alwaleed Center for Muslim–Christian Understanding) வருகை தரும் பேராசிரியராக பணி புரிந்தார்.[33]

2006 மார்ச் மாதம், லண்டன் மாநகரைத் தளமாகக் கொண்ட சமூக மற்றும் நெறிமுறை கணக்குத் திறன் நிறுவனத்தின் (Institute of Social and Ethical AccountAbility) கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[34]

ஜூலை 2006-இல், வாஷிங்டன் மாநகரைத் தளமாகக் கொண்ட எதிர்காலத்திற்கான அறக்கட்டளையின் தலைவராக (Chair of the Washington-based Foundation For the Future) அன்வார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[35]

மீண்டும் அரசியல் வாழ்க்கை

[தொகு]

மலேசிய அரசியலில் 14 ஏப்ரல் 2008 வரை, அன்வார் ஈடுபடக் கூடாது என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அந்தத் தகுதி நீக்கம் காலாவதியானதும், நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடத் திட்டமிட்டு உள்ளதாக அன்வார் அறிவித்தார்.

இருப்பினும் அன்வார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அரசாங்கக் கொள்கைகளை விமர்சித்து வந்தார். குறிப்பாக புதிய பொருளாதாரக் கொள்கை (New Economic Policy). இந்தக் கொள்கை பூமிபுத்ரா மக்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கியது. இந்தக் கொள்கை சில அலகுகளைக் கொண்டு உள்லது. பல்லினத்தவருக்கும் பற்பல ஒதுக்கீடுகளையும் நிர்ணயித்து உள்ளது. அந்த ஒதுக்கீடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.[36]

மாற்று முன்னணி உருவாக்கம்

[தொகு]

ஏற்கனவே செயல்பட்டு வந்த மக்கள் நீதிக் கட்சிக்கு, கெடிலான் என்ற பெயரில் (மலாய்: Parti Keadilan Nasional; ஆங்கிலம்: National Justice Party) (KEADILAN); பல்லின அடிப்படையிலான ஒரு புதியக் கட்சியை உருவாக்குவதற்கு, இந்த ரிபார்மசி (Reformasi) சீர்திருத்த இயக்கம் வழிவகுத்துக் கொடுத்தது.

1999-இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட கெடிலான் கூட்டணி; ஏற்கனவே இருந்த மலேசிய இஸ்லாமிய கட்சி (Pan-Malaysian Islamic Party (PAS); மற்றும் ஜனநாயக செயல் கட்சி (Democratic Action Party (DAP) ஆகியவை ஒன்றிணைந்து ’மாற்று பாரிசான்’ (Barisan Alternatif) அல்லது ’மாற்று முன்னணி’ (Alternative Front) எனும் ஒரு முன்னணியை உருவாக்கின.

அந்தப் புதிய முன்னனி உருவாக்கம், ஆளும் பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணி அரசாங்கத்தை மாற்றுவதற்கான ஓர் ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதப் பட்டது.

பாக்காத்தான் ராக்யாட் உருவாக்கம்

[தொகு]

2003 ஆகஸ்டு மாதம், கெடிலான் கட்சி; மலேசிய மக்கள் கட்சியுடன் (மலாய்: Parti Rakyat Malaysia; ஆங்கிலம்: Malaysian People's Party) ஆகிய கட்சிகளுடன் ஒன்றிணைந்து மக்கள் நீதிக் கட்சியை (Parti Keadilan Rakyat - PKR) உருவாக்கியது. இந்தக் கட்சிக்கு வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

2008 பொதுத் தேர்தலில் மக்கள் நீதிக் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. 31 இடங்களை வென்று மலேசிய நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய எதிர்க்கட்சியானது.

ஏப்ரல் 2008-இல், மக்கள் நீதிக் கட்சி; மலேசிய இஸ்லாமிய கட்சி; மற்றும் ஜனநாயக செயல் கட்சி; ஆகிய மூன்றும் இணைந்து பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat - PR) என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாக்கின.[37]

இடைக்கால ஆண்டுகள் (1998-2008)

[தொகு]

1999-ஆம் ஆண்டு மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிம் ஊழல், ஒழுக்கக் கேடு காரணமாகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில் அவருடைய மனைவி டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில், மக்கள் நீதிக் கட்சியைத் தோற்றுவித்தார்.[38]

2004ஆம் ஆண்டு, அன்வார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அந்தத் தடை 14 ஏப்ரல் 2008-இல் நீக்கப்பட்டது. அதற்குள் 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் நடந்து முடிந்தது.

2003-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்தைப் பிடித்த கெடிலான் எனும் மக்கள் நீதிக் கட்சி, 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்), மக்கள் நீதிக் கட்சி (பி.கே.ஆர்), ஜனநாயக செயல் கட்சி (ஜ.செ.க) ஆகியவை உறுப்புக் கட்சிகளாக பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் 81 இடங்களைப் பிடித்தது.[39] அது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் 2008

[தொகு]

அந்தக் கட்டத்தில் அவருடைய மனைவி வான் அசீசா வான் இஸ்மாயில், மலேசிய நாடாளுமன்றத்தின் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். அன்வார் விடுதலையானதும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வான் அசீசா வான் இஸ்மாயில், அதாவது அன்வார் மனைவி, தன் நாடாளுமன்றப் பதவியை ராஜிநாமா செய்தார்.

அதன் விளைவாக, பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் 2008 ஆகஸ்டு 26-இல் ஓர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அன்வார்க்கு 31,195 வாக்குகள் கிடைத்தன. 15,671 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி (மலேசியா) கூட்டணி எனும் பாரிசான் நேசனல் வேட்பாளர் அரிப் ஷா ஒமார் ஷாவிற்கு 15,524 வாக்குகளும், சுயேட்சையாகப் போட்டியிட்டவருக்கு 92 வாக்குகளும் கிடைத்தன. சுயேட்சை வேட்பாளர், தன் வைப்புத் தொகையையும் இழந்தார்.[40]

வழக்கு தள்ளுபடி

[தொகு]

ஜூன் 29, 2008-இல் இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் தன்னை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கூறி வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கு அரசியல் காரணங்களால், பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரது மனைவியின் தூண்டுதலில் பேரில் புனையப்பட்டு உள்ளது என்று எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா கூறினார்.

எனினும் இதனைக் காவல்துறை மறுத்து; தக்க ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.[41] இதன் தீர்ப்பு சனவரி 9, 2012 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென்றும், அவருக்கு எதிரான டி. என். ஏ. சான்று நம்பக் கூடியதாக இல்லை என்று தீர்ப்பு கூறிய நீதிபதி அவரை விடுதலை செய்தார்.

மலேசியப் பொதுத் தேர்தல், 2013

[தொகு]

மலேசிய அரசியல் வரலாற்றில் பாரிசான் நேசனல் எனும் தேசிய முன்னணிக் கூட்டணியே, ஆளும் கட்சியாக ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று வந்துள்ளது. பாரிசான் நேசனல் 14 அரசியல் கட்சிகளின் கூட்டு அமைப்பைக் கொண்ட ஒரு கூட்டணியாகும். இதன் தலையாய பங்காளிக் கட்சிகளாக அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்திய காங்கிரசு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் மலேசிய இஸ்லாமிய கட்சி, மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சி ஆகியவை உறுப்புக் கட்சிகளாக உள்ளன.அன்வார் இப்ராகிம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், எதிர்க் கட்சிக் கூட்டணி ஏழு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியது.

ஐந்து ஆண்டு சிறை தண்டனை

[தொகு]

2008 ஓரினச்சேர்க்கை வழக்கில் விடுதலை பெற்று இருந்தாலும் 2014-ஆம் ஆண்டில் இவருடைய உதவியாளன் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவன் அன்வார் தன்னை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக கூறி உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடுத்தான்.[42] குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்ட பின்னர், அன்வார் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார்.

போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் 2018

[தொகு]

அன்வர் சிறையில் இருந்தபோது, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. சில நாட்களுக்குப் பிறகு, அன்வர் மாட்சிமை தங்கிய பேரரசர் மிருந்து அரச மன்னிப்பைப் பெற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் அவர் மலேசிய நாடாளுமன்ற உறிப்பினர் ஆனார்.

2020-2021 மலேசிய அரசியல் நெருக்கடி

[தொகு]

24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பின் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து 26 எம்.பி.க்களைக் கொண்ட பிபிபிஎம் விலகியது. கூடுதலாக, பிகேஆரைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் கட்சியை ராஜினாமா செய்து சுயேச்சையான கூட்டணியை உருவாக்கினர். இதன் மூலம் பக்காத்தான் ஹராப்பான் அரசு கவிழ்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Anwar Ibrahim". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
 2. "Anwar disqualified as MP since Mar 16, says speaker". The Malaysian Times. 1 April 2015. Archived from the original on 6 April 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.
 3. "Anwar Ibrahim appointed as Malaysia's 10th Prime Minister". Bernama. 24 November 2022. https://pru15.bernama.com/news-en.php?id=2141779. 
 4. Keat Gin Ooi (2004). Southeast Asia : a historical encyclopedia, from Angkor Wat to East Timor. Santa Barbara, Calif.: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-770-5. இணையக் கணினி நூலக மைய எண் 54528945.
 5. "Anwar Ibrahim – London Speaker Bureau Asia" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-12-20. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
 6. "Malaysia: Charges against Anwar politically motivated". Amnesty International (in ஆங்கிலம்). 2008-08-06. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
 7. Kumar, Kamles. "Is it time for Anwar Ibrahim to step aside?". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
 8. "Malaysia's political turmoil: everything you need to know". The Guardian (in ஆங்கிலம்). 2020-02-25. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
 9. Ellis-Petersen, Hannah (2018-05-11). "Malaysia: Mahathir Mohamad says Anwar Ibrahim to be given royal pardon". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2018-05-11.
 10. Ellis-Petersen, Hannah (2018-05-16). "Malaysia: Anwar Ibrahim released from prison". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2018-05-16.
 11. "Malaysia election 2022: Anwar Ibrahim named PM, swearing in at 5pm". South China Morning Post. 24 November 2022. https://www.scmp.com/week-asia/politics/article/3200790/malaysia-election-2022-decision-anwar-or-muhyiddin-pm-nears-sultans-meet. 
 12. 07 Ogos 2008, "Mampukah Anwar membuat 'come-back'?" Hafizah Kamarudin, பெர்னாமா
 13. Alias Muhammad (1994), p. 177
 14. Allers, Charles, The Evolution of a Muslim Democrat: The Life of Malaysia's Anwar Ibrahim (New York: Peter Lang, 2013), 57.
 15. Growing popularity of conservative Islam in Malaysia linked to overseas students South China Morning Post, 2 April 2015
 16. "Development Committee – Former Chairmen of the Development Committee". The World bank. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
 17. "Mahathir Returns After Two Months Holiday" (PDF). பெர்னாமா. 22 July 1997 – via Perdana Leadership Foundation Library.
 18. Roger Mitton (30 November 2000). "A Day in the Life". Asiaweek.
 19. 19.0 19.1 Wong Chin Huat (17 August 2007). "Splits in Umno and Opposition unity". The Sun (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 29 September 2021 – via Malaysian Bar.
 20. O'Brien, Timothy L. (6 December 1998). "soros public enemy&st=cse&pagewanted=1". The New York Times. https://www.nytimes.com/1998/12/06/business/he-s-seen-the-enemy-it-looks-like-him.html?scp=5&sq=george. 
 21. "Judge gives reasons for ruling in favour of Anwar". Daily Express (UK). 26 January 2005 இம் மூலத்தில் இருந்து 21 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110621232024/http://www.dailyexpress.com.my/news.cfm?NewsID=32237. 
 22. Hartcher, Peter (23 February 2010). "Outdated political thuggery embarrasses Malaysia". The Sydney Morning Herald. https://www.smh.com.au/opinion/politics/outdated-political-thuggery-embarrasses-malaysia-20100222-ornl.html. 
 23. "Apology ends Anwar's suit over beating". nytimes.com. 4 August 2005. https://www.nytimes.com/2005/08/03/world/asia/03iht-malaysia.html. 
 24. 24.0 24.1 Alvin Ung CBS-489A Stain Upon Anwar's Defense, The Associated Press (via CBS News). 30 December 1998
 25. 25.0 25.1 Anwar trial hears DNA evidence 30 December 1998, BBC News
 26. Anwar Ibrahim’s integrity while in office, that the authorities have not been able to level any charges of monetary corruption against him after more than a year of sacking as Deputy Prime Minister and Finance Minister, although the authorities must have gone through his records with a fine-tooth comb.
 27. Canadian Lawyers Defend the Independence of the Bar in Malaysia
 28. Specialist Speakers Profile. "Anwar Ibrahim". பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
 29. "Court to allow Anwar appeal". BBC News. 7 September 2004. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/3633336.stm. 
 30. "What is RM100 million?". Malaysian Insider. 28 May 2009 இம் மூலத்தில் இருந்து 15 ஜூலை 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090715084833/http://www.themalaysianinsider.com/index.php/opinion/jameschin/27869-what-is-rm100-million. 
 31. "Anwar vs Dr M: Two of three judges recuse themselves (Updated)". The Star. 1 March 2010. http://thestar.com.my/news/story.asp?file=/2010/3/1/nation/20100301133142&sec=nation. 
 32. "Anwar's Sacking From Cabinet Posts In 1998 Is Valid, Federal Court Rules". Bernama. 8 March 2010. http://www.bernama.com/bernama/v5/newsindex.php?id=480510. 
 33. "From August 2005-December 2006, he was the Malaysia Professor of Islam in Southeast Asia at the Prince Alwaleed Center for Muslim-Christian Understanding where he lectured on contemporary politics in Southeast Asia focusing on the role of Islam in shaping the region's political evolution". Archived from the original on 29 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 26 November 2022.
 34. "Setting The Standard For Sustainability". www.accountability.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 November 2022.
 35. "Foundation for the Future Holds its First Board Meeting in Doha, Qatar". Archived from the original on 16 June 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-10-10.
 36. Malaysia's Anwar Says He Plans to Run for Parliament. 30 November 2006, Bloomberg.
 37. "Archives". பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
 38. The Birth of Parti Keadilan Nasional: As Good As It Gets.
 39. "Keadilan won 31 seats in Parliament, with DAP and Pas making substantial gains as well with 28 seats and 23 seats respectively". Archived from the original on 2014-06-28. பார்க்கப்பட்ட நாள் 2014-11-02.
 40. Anwar Ibrahim wins decisively with a 15,671 majority.
 41. "afp.google.com,Malaysian opposition leader Anwar charged with sodomy". Archived from the original on 2008-08-10. பார்க்கப்பட்ட நாள் 2008-08-10.
 42. "Malaysia: Anwar Ibrahim sodomy acquittal overturned". BBC News. 7 March 2014. http://www.bbc.co.uk/news/world-asia-26479642. பார்த்த நாள்: 7 March 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_இப்ராகீம்&oldid=3905786" இலிருந்து மீள்விக்கப்பட்டது