அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவி புதுக்கோட்டை அருகிலுள்ள திருக்கோகர்ணத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்தார்.

சமய, சமூகப்பணிகள்[தொகு]

திலகவதியார் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீனமாக விளங்கியவரும், சமூக சேவகராகப் பணியாற்றியவரும், நகர மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவரும், பள்ளிக்குத் தாளாளராக பணியாற்றியவரும் ஆவார். இவர் மாவட்ட சமூக நலக்குழுத் தலைவியாக தமிழ்நாட்டு ஆளுநரால் நியமிக்கப்பட்டும் பணியாற்றியாற்றினார். பிருந்தாதேவி காங்கிரசு பேரியக்கத்தில் பெருந்தலைவர் காமராஜரின் அன்பிற்கிணங்க கட்சிப்பணியில் ஈடுபட்டார். இவர் இலக்கிய நயத்தோடு கட்சிப்பணிகளை மேடைதோறும் எடுத்துப் பரப்பினார். பிருந்தாதேவி ஏழை அனாதைக்குழந்தைகள், விதவைகள் ஆகியோருக்காக வைத்தியர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரில் மகளிர் இல்லம் அமைத்து, 5000த்திற்கும் மேற்பட்ட மங்கையர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் ஆவார். மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றிவந்தார். பிருந்தாதேவி பல்வேறு சமய சமுதாய நிகழ்ச்சிகளைப் புதுக்கோட்டையில் நடத்தினார். இவர் திருநூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். அவற்றுள் மனிதன் எங்கே போகிறான்?, இந்து மதம், மனிதன் தெய்வமாகலாம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் வீணை வாசிக்க கற்றுத் தந்தவரும் ஆவார். பிருந்தாதேவி சமூக சேவகராக, அரசியல்வாதியாக, கல்வியாளராக, இலக்கியவாதியாக, இசையினை அறிந்தவராகப் பரிணமித்து, ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையினைப் பெற்றுச் சிறந்த பெண்மணியாக வலம்வந்தவர்.

வெளிநாட்டில்[தொகு]

சைவ சமயத்தின் கருத்துக்களையும், திருநெறியத் தமிழ், இலக்கிய பண்பாட்டு நெறிகளையும் தமிழகம் மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பயணம் செய்து இவர் பரப்பியுள்ளார்.

ஆதீனம்[தொகு]

இவரின் திலகவதியார் திருவருள் ஆதீனம், அருள்மிகு சாயிமாதா சிவ பிருந்தாதேவி கல்வி சமூக அறக்கட்டளை (பதிவு) 1120, மச்சுவாடி, புதுக்கோட்டை 622 001 என்ற முகவரியில் இயங்கி வருகின்றது.

பொற்கிழி விருது[தொகு]

ஆதீனத்தைத் துவக்கிய அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் பெயரால் தமிழ், இலக்கிய, ஆன்மீகப்பணிக்காகச் சேவையாற்றிவரும் ஒருவருக்கு பொற்கிழி விருது, அன்னையின் கல்வி சமூக அறக்கட்டளையால் 2000ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. குன்றக்குடி பெரியபெருமாள், குன்றக்குடி (2000), கலைமாமணி. டாக்டர் விக்கிரமன், சென்னை (2001), புலவர்.பொன். தெய்வநாயகி ஜோதி, சென்னை (2002),எம்,என்.சங்கரநாராயணன் , சென்னை (2003),கலைமாமணி.திருச்சி பரதன், திருச்சி (2004), மு.பெ.சத்தியவேல் முருகனார், சென்னை (2005), டாக்டர் . அய்க்கண் (2006), தமிழாகாரர். தெ. முருகசாமி, புதுச்சேரி (2007), முனைவர். கு.வெ.பாலசுப்பிரமணியன் (2008), பேராசிரியர். பா.நமசிவாயம், திருப்புத்தூர் (2009), டாக்டர். சரஸ்வதி இராமநாதன் (2010), பேராசிரியர். டாக்டர்.சுப. திண்ணப்பன் (2011) போன்றோர் இதுவரை பொற்கிழி விருதினைப் பெற்றுள்ளனர்.

ஆதீன வெளியீடுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]