அன்கிதா பாகத்

அங்கிதா பாகத்து (Ankita Bhakat) (பிறப்பு: 17 சூன் 1998) என்பவர் வளைவில் (Recurve bow) விளையாட்டு வீராங்கனை ஆவார். இந்தியாவைச் சேர்ந்த இவர், பாரிசில் நடைபெற்ற 2024 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றுள்ளார். இப்போட்டிகளில் கலப்பு அணிகள் பிரிவில், அரை இறுதி வரை முன்னேறி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வியடைந்தார். மேற்கு வங்காளத்தில் பிறந்த இவர் சிறுவயது முதலே வில்வித்தையில் ஆர்வம் காட்டி, பல தேசிய, பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகளில், இந்திய அணிக்காகப் பல முறை பதக்கங்களை வென்றுள்ளார்.[1]
இளமைக்காலம்
[தொகு]இவர் 1998 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் தேதி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார். சாந்தனு பகத், சிலா பகத் ஆகியோர் இவருடைய பெற்றோர் ஆவார். இவருடைய தந்தை ஒரு பால் வியாபாரி ஆவார். குடும்பத்தின் பொருளாதார நிலை சவாலாக இருந்தபோதிலும், இவர் தனது பத்தாவது வயதிலேயே வில்வித்தை விளையாட்டில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கினார். தொடக்கக் காலத்தில் கொல்கத்தா வில்வித்தை மன்றத்தில் அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றார். பின்னர், 2014 ஆம் ஆண்டில் ஜாம்செட்பூரில் உள்ள டாடா வில்வித்தை அகாதமியில் இணைந்து, தனது திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டார். அங்கு இவருக்குத் தர்மேந்திர திவாரி, பூர்ணிமா மகாதோ, ராம் அவதேசு ஆகியோர் பயிற்சி அளித்து, இவரை ஒரு சிறந்த வீராங்கனையாக உருவாக்கினர். இந்த அகாதமியில் பெற்ற முறையான பயிற்சியின் காரணமாக, மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கினார். இதன் விளைவாகத் தேசிய அளவிலான தேர்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.[2]
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]இவர் 2015 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற பன்னாட்டு இளைஞர் வில்வித்தைப் போட்டியில், இந்திய அணியின் சார்பாகப் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றார். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சீன தைபேயில் நடந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில், முகேசு போரோவுடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அர்கெந்தீனாவில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இளைஞர் சாம்பியன்சிப் போட்டியில்ர செம்சன் சிங்குடன் இணைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் உலக அளவிலான போட்டிகளில், இந்தியாவின் சிறப்பான நிலையை உறுதி செய்தார். அதன்பிறகு பல உலகக்கோப்பை தொடர்களிலும், ஆசியப் போட்டிகளிலும் இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.[3]
ஒலிம்பிக் போட்டிகள்
[தொகு]இவர் தனது முதல் ஒலிம்பிக் பயணத்தை, 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் தொடங்கினார். மகளிர் தனிநபர் பிரிவின் தொடக்கச் சுற்றில் போலந்து நாட்டின் வீராங்கனை வயோலெட்டா மிசோரிடம் 4-6 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். பின்னர், பஜன் கவுர், தீபிகா குமாரி ஆகியோருடன் இணைந்து, மகளிர் அணிகள் பிரிவில் காலிறுதிச் சுற்று வரை முன்னேறி, நெதர்லாந்து அணியிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து தீரச் பொம்மதேவராவுடன் இணைந்து கலப்பு அணிகள் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரை இறுதிச் சுற்று வரை தகுதி பெற்றார். இந்திய வில்வித்தை வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிகளின் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இணை என்ற தரவைப் பதிவு செய்தனர். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அமெரிக்க அணியுடன் மோதிய இவர்கள் 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paris 2024 Olympics archery". Olympics.
- ↑ "Olympic dreams, but no bow for archer Ankita Bhakat". The Times of India.
- ↑ "Indian pair win junior recurve world title". World Archery.
- ↑ "Ankita Bhakat and Dhiraj Bommadevara miss medal". Hindustan Times.