அனைத்துலக சதுரங்க நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்துலக சதுரங்க நாள்
International Chess Day
சதுரங்கம்
கடைபிடிப்போர்பல்வேறு நாடுகள்
நாள்20 சூலை
நிகழ்வுஆண்டு
முதல் முறை1966
தொடர்புடையனபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு, சதுரங்கம்

அனைத்துலக சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.[1][2]

1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளை அனைத்துலக சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதன்படி சூலை 20 ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.[3] 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.[4]

இந்நாளில் பல்வேறு சதுரங்கப் போட்டிகள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன. 2013 ஆம் ஆண்டு 173 நாடுகளில் இந்நாளில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றதாக பிடே தலைவர் ஒரு நேர்காணலின் போது தெரிவித்தார்.[5]

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு[தொகு]

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் சூலை 20, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 181 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.[6] உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.

சதுரங்கம்[தொகு]

புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.

மூளைக்கு வேலைத்தரும் விளையாட்டு[தொகு]

சதுரங்கம் மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.

சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு. நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுகிறது. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.

ஆட்டத்தின் எதிர்பார்க்கை[தொகு]

இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார்.

சதுரங்கக் காய்கள்[தொகு]

சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

புகழ் பெற்ற சில வீரர்கள்[தொகு]

உலக சதுரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு: ஸ்டைநிட்ஸ், லாஸ்கர், காப்பபிளான்கா, அலேஹின், இயூவ், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந்த்

மேற்கோள்கள்[தொகு]

  1. காமராஜ், மு ஹரி. "செஸ் விளையாடுங்க... ஹேப்பியா இருங்க". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "History of International Chess Day". Chess-teacher.com. 2012-07-21. Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2015-07-07.
  4. UN adopts July 20 as World Chess Day, FIDE, 13 December 2019, பார்க்கப்பட்ட நாள் 2 May 2020
  5. "Interview by Kirsan Ilyumzhinov - in Russian". Vesti.ru. பார்க்கப்பட்ட நாள் 2015-07-07.
  6. "FIDE Membership". FIDE.com. பார்க்கப்பட்ட நாள் 2015-07-01.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்துலக_சதுரங்க_நாள்&oldid=3704395" இலிருந்து மீள்விக்கப்பட்டது