உள்ளடக்கத்துக்குச் செல்

அனுமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுமானம் (Inference) என்பது மெய்யியல் மரபில் உண்மையை நிறுவுவதற்குக் கையாளப்படுகின்ற வழிமுறைகளில் ஒன்றாகும். இஃது ஊகம், உத்தேசம், கருதலளவை, உய்த்துணர்வு எனப் பொருள் கருதி பலவாறு அழைக்கப்படுகின்றது.

அறிந்த ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அறியாத ஒன்றை ஊகித்து அறிந்து கொள்ளலாகும். அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற வேளையில் யாதாயினும் ஒரு நிகழ்ச்சிையக் கொண்டு மற்றைய நிகழ்ச்சியை அனுமானித்துக் கொள்ளுதலாகும். எ.கா - நிலம் நனைந்திருப்பதை மாத்திரம் பார்த்துவிட்டு மழை பெய்திருக்க வேண்டும் என ஊகித்தல் ஆகும்.

சைவசித்தாந்தமும் அனுமானமும்

[தொகு]

சைவசித்தாந்தம் கடவுள் உண்மையை நிரூபிப்பதற்கு அனுமானத்தினை கைக்கொள்கின்றது.

  • மண் பானையைப் பார்த்து அதனை செய்தவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று ஊகிப்பதைப் போல இச் சடஉலகினைக் கொண்டு அதனைத் தோற்றுவித்தவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று இறை இருப்பினை நிரூபிக்கின்றது.

காட்சியானது நேரடியறிவாக அமைகின்றபோது அனுமானமானது நேரே அறியப்படுவதன்றி சாதித்துப் பெறற்பாலதாய், மறைந்துநின்ற பொருளை அப் பொருளோடு விட்டு நீங்காது உடனாய் இருக்கின்ற ஏதுவைக் கொண்டு உணர்வதான அறிவாகின்றது. அதாவது நெருப்பையும் புகையையும் ஒரிடத்தில் கண்ட அறிவானது, பின்னர் புகையைக் காணும்போது நெருப்பை அனுமானித்து அறிவதாகும்.

அனுமானத்தின் வகை

[தொகு]

அனுமானம் தன்பொருட்டனுமானம், பிறர்பொருட்டனுமானம் என இரண்டாக பிரித்து நோக்கப்படுகின்றது.

  1. தன்பொருட்டனுமானம் - சுவார்த்த அனுமானம் எனப்படும். இயல்பு, காரியம், அநுபலப்தி என்ற மூன்று ஏதுக்களில் ஓர் ஏதுவுடைய பொருளை பக்கம், சபக்கம், விபக்கம் எனும் மூன்றில் வைத்து தான் அறிவதாகும்.[1]
  2. பிறர்பொருட்டனுமானம் - பரார்த்த அனுமானம் எனப்படும். உடன்பாடு, எதிர்மறை எனும் இருவகையில் எடுத்தாளப்படுகின்றது. இதனை அன்னுவயம், வியதிரேகம் எனவும் அழைப்பர்.[2]

அனுமானத்தின் முடிவுகள்

[தொகு]

அனுமானம் வழியாக பெறப்படுகின்ற முடிவுகள் ஒருபோதும் 100% உண்மைத் தன்மையுடையவாய் இருப்பதல்ல. அனுமானத்தின் சாத்தியத் தன்மையும், வலிதுடைமையும் அதன் வியாபகத் தன்மையிலேயே தங்கியுள்ளது என்பர்.

அனுமானப் போலி

[தொகு]

அனுமானத்தில் ஏற்படுகின்ற வழுக்கள் அனுமானப் போலி எனப்படுகின்றன. பக்கப்போலி, ஏதுப்போலி, உவமைப்போலி, தோல்வித்தானம் என போலிகளை எடுத்துக்கூறி போலிகள் மொத்தம் அறுபத்தைந்து என சிவஞானசித்தியார் சுட்டுகின்றது.

"ஈண்டு பக்கப் போலிநான் கேதுப்போலியொரு மூன்றாய்
வேண்டு மெழுமூன்றாகும் விளங்குவமைப் போலி யீரென்பான்
காண்டுந் தோல்வித்தான மிரண்டிருபத்திரண்டாங்கருதிலிவை
ஆண்டு மொழிவ ரவையெல்லா மளக்கிலறுபத் தைந்தாகும்"[3]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. (பேராசிரியர். ஞானகுமாரன். ந., சைவசித்தாந்தத்தெளிவு. ப-116)
  2. (பேராசிரியர். ஞானகுமாரன். ந., சைவசித்தாந்தத்தெளிவு. ப-116)
  3. (சிவஞானசித்தியார், சுபக்கம். பாடல 20)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமானம்&oldid=3478694" இலிருந்து மீள்விக்கப்பட்டது