அனுமதிக்கும் மென்பொருள் உரிமம்
அனுமதிக்கும் மென்பொருள் உரிமம் (Permissive_software_license) என்பது இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள் உரிமங்களில் (FOSS) ஒருவகையாகும். இது மென்பொருளைப் பயன்படுத்துபவர்களுக்கு, அதனை மாற்றியமைக்கவும், மறுவழங்கல் செய்யவும், மிகக் குறைவான கட்டுப்பாடுகளையே விதிக்கிறது. இவ்வகை உரிமங்கள், மென்பொருளின் உரிமையைப் பாதுகாப்பதை விட, அதன் பயன்பாட்டைப் பரப்புவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் "கல்வியாளர் சார்ந்த" (Academic-style) உரிமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.[1].
உரிம நிலைகள்
[தொகு]அனுமதி வழங்கும் உரிமங்களின் கீழ் வெளியிடப்படும் மென்பொருட்களை, எவர் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து, மாற்றங்கள் செய்து, மீண்டும் வழங்க முடியும். அளிப்புரிமை அல்லது குனூ பொதுமக்கள் உரிமம் போன்ற உரிமங்களைப் போலன்றி, இவை மாற்றியமைக்கப்பட்ட மென்பொருளையும், அதே உரிமத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. இதனால், இவ்வகை மென்பொருட்களை தனிநபர் அல்லது நிறுவனம் தனது தனியுடைமை மென்பொருள் கொண்ட வணிக அடிப்படையிலான மென்பொருட்களில் தடையின்றிப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.[2].
முக்கியக் கூறுகள்
[தொகு]அனுமதி வழங்கும் உரிமங்கள் பொதுவாக பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளன.
- மறுபயன்பாடு: மென்பொருளை வணிக அடிப்படையாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பயன்படுத்த முழு விடுதலையுரிமம் உண்டு.
- குறைந்தபட்சக் கட்டுப்பாடுகள்: மூல மென்பொருளை உருவாக்கியவருக்கு உரிய அங்கீகாரம் (Attribution) அளிப்பதையும், பொறுப்புத் துறப்பு (Disclaimer) அறிவிப்பைச் சேர்ப்பதையும் மட்டுமே இவை நிபந்தனைகளாகக் கோருகின்றன.
- தனியுரிம இணக்கம்: இவ்வகை உரிமம் கொண்ட மென்பொருட்களைத் தனியுரிம மென்பொருட்களுடன் (Proprietary software) இணைத்து விற்க முடியும்.
புகழ்பெற்ற அனுமதிக்கும் உரிமங்கள்
[தொகு]தற்போது புழக்கத்தில் உள்ள சில முக்கியமான அனுமதி வழங்கும் உரிமங்கள், கீழே விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வுரிமங்கள் புதிய மென்பொருள் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. இன்றைய இணையத்தின் பெரும்பகுதி நுட்பங்கள, இத்தகைய உரிமங்களின் கீழேயே இயங்குகின்றன. ஒரு மென்பொருள் மிக அதிகமான பயனர்களைச் சென்றடைய வேண்டும் என்று கருதும் மென்பொருள் உருவாக்குநர்கள், இவ்வகை உரிமங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். எடுத்துக்காட்டாக, என்சினெக்சு (Nginx), இரியாக்டு (ReactJS) போன்ற பல இணைய நுட்பங்கள் கட்டற்ற உரிம வகையாகவே உள்ளன.
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழக உரிமம்
[தொகு]இது மிகவும் எளிமையானதும், பிரபலமானதும் திகழும் உரிமமாகும். இதில் மென்பொருளைப் பயன்படுத்துபவருக்குப் பதிப்புரிமை அறிவிப்பை மட்டும் வழங்கினால் போதுமானது என்ற நிபந்தனை உள்ளது. இந்த உரிமத்தினை, மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியது ஆகும்.[3]
பெர்க்லி மென்பொருள் பரவல் உரிமம்
[தொகு]பெர்க்லி மென்பொருள் வழங்கல் (Berkeley Software Distribution) மூலம் இது உருவானது. இதில் இரண்டு அல்லது மூன்று உட்பிரிவுகள் கொண்ட பதிப்புகள் உள்ளன. இது மென்பொருள் குறியீட்டை வணிகத் தயாரிப்புகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது.[4].
அப்பாச்சி அனுமதி உரிமம்
[தொகு]அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட இந்த உரிமமானது, பதிப்புரிமையுடன் காப்புரிமை (Patent) உரிமைகளையும் தெளிவாக வழங்குகிறது. இது பெரிய நிறுவனங்களிடையே மிகவும் பிரபலமானது.[5].
நன்மைகளும் குறைபாடுகளும்
[தொகு]- நன்மைகள் :
- மென்பொருள் மிக வேகமாகப் பரவ உதவுகிறது.
- நிறுவனங்கள் தங்களது வணிகத் தயாரிப்புகளில் தடையின்றிப் பயன்படுத்த முடிவதால், பெருநிறுவனங்களின் ஆதரவு எளிதில் கிடைக்கிறது.
- சட்ட அடிப்படையில் சிக்கல்களும், ஆவணப் பணிகளும் மிகக் குறைவு.
- குறைபாடுகள்
- 'மென்பொருள் விடுதலை' காலப்போக்கில் பறிக்கப்படலாம். அதாவது, ஒருவர் திறந்த மூலக் குறியீட்டை எடுத்து, அதில் மாற்றங்கள் செய்து, அதை மூடிய மூல மென்பொருளாக மாற்றிவிட முடியும்.
- இதனால் முதலில் மென்பொருளை தோற்றுவித்த சமூகம், அந்தப் புதிய மேம்பாடுகளைப் பெற முடியாமல் போகும் சூழ்நிலையே மேலோங்குகிறது. இதனால் பின்னாளில் சிறுமாற்றம் செய்து அதனை தனது தனியுரிமை என்று கூறுவோர் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Permissive Licenses". Open Source Initiative. Retrieved 2026-04-16.
- ↑ "What is a permissive license?". Free Software Foundation. Retrieved 2026-04-16.
- ↑ https://tlo.mit.edu/understand-ip/exploring-mit-open-source-license-comprehensive-guide
- ↑ "The 3-Clause BSD License". Open Source Initiative.
- ↑ "Apache License, Version 2.0". Apache Software Foundation.