அனதாரியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனதாரியப்பன் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். சுந்தரபாண்டியம், என்னும் பெயரில் சிவபெருமானின் திருவிளையாடல் கதைகளைப் பாடியவர். இவர் தொண்டைநாட்டு வாயற்பதி [1] என்னும் ஊரில் பிறந்தவர்.[2]

வாழ்வும் வரலாறும்[தொகு]

வாயற்பதியில் வடுகநாத முதலியார் என்பவர் வாழ்ந்துவந்தார். இவர் அப்பூதி அடிகள் போலத் தன் தம்பி இறந்துகிடந்ததை மறைத்துத் தன்னை நாடிவந்த ஒரு புலவருக்கு அன்னமிட்டுப் போற்றியவர்.[3] இவரால் பேணி வளர்க்கப்பட்டவர் இப் புலவர். இவர் சோழமண்டலத்து உறத்தூரில் தமிழ்மேகம் என்னும் போற்றுதலுடன் வாழ்ந்த அந்தணர் ஒருவரிடம் கல்வி பயின்றார். இவரது பெருமையை உணர்ந்த கன்றாப்பூர் [4] சிங்கராயன் இவரது திறமையை உணர்ந்து, வாயற்பதி வடுகநாத முதலியார் வறுமையுற்றிருந்தபோது, அவரது வறுமையைப் போக்கப் பணம் கொடுத்துவிட்டு அனதாரியப்பனை வாங்கிக்கொண்டு வந்து போற்றிவந்தார்.

அனதாரியப்பன் பெருமை[தொகு]

கம்பன் போன்ற பெருமக்கள் காலத்தில் அனதாரியப்பன் வாழ்ந்திருந்தால் அனதாரியப்பனின் சிறப்பு விளங்கியிருக்கும் என ஒரு பாடல் இவரைப் போற்றுகிறது.[5]

 • அனதாரியப்பன் சீட்டுக்கவி

இவர் வாழ்ந்த கல்லையில் சிங்கராயன் என்னும் செல்வப் பெருமகன் வாழ்ந்துவந்தான். அவன் தன் பகைவன் ‘தண்டாயுதன்’ என்பவனை இகழ்ந்து சீட்டுக்கவி ஒன்று எழுதி அனுப்புமாறு அனதாரியப்பனை வேண்டினான். புலவரும் அவ்வாறே எழுதி அனுப்பினார்.[6] இந்தப் பாடலைப் படித்த தண்டாயுதன் புலவரின் பெருமையைப் போற்றி சீட்டுக்கவிக்கு விடையாக மற்றொரு சீட்டுக்கவி எழுதி அனுப்பினான்.[7] இந்தச் செய்திகளைச் சோழமண்டல சதகம் குறிப்பிடுகிறது.[8]

கல்லை மன்று [9] வாழ்க்கை[தொகு]

கன்றாப்பூரை விட்டு சீங்கிய பின் இப் புலவர் கல்லை மன்று எனப்பட்ட மண்ணச்சநல்லூரில் வாழ்ந்தார். அக்காலத்தில் அவ் வூரின் தலைவராக விளங்கிய திருவிருந்தான் என்னும் புலவர் இவரைப் பேணிப் பாதுகாத்துவந்தார். புலவர் தம் சுந்தரபாண்டியம் நூலில் ஒருபாடலில் மலையத்துவச பாண்டியன் விமானத்தில் செல்கையில் திருவரங்கத்துக்கு வடபால் உள்ள கல்லைமன்று என்னும் ஊரையும் காட்டிச் செல்வதாகப் பாடியுள்ளார்.[10] கம்பன் சடையப்ப வள்ளலைப் போற்றியது போன்ற நன்றியுணர்வுப் பாடல் இது.

சுந்தர பாண்டியம் என்னும் நூல் இவரால் இயற்றப்பட்டது.

கருவிநூல்[தொகு]

 • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

 1. தொண்டைநாட்டுச் செங்காட்டுக் கோட்டப் பகுதியில் சேயாற்றின் கழிமுகமாக விளங்கும் வயலூர்
 2. மிண்டரை வெல்லும் வளர் சிங்கராசன் விலை கொடுப்ப
  தண்டமிழ் பேசும் உறத்தூரில் வேதியன் தானும் விற்பக்
  கொண்டவன் பின்சென்று மண்டலத்தே புகழ் கொண்ட பிரான்
  வண்டமிழ்க் குப்பன் அனதாரியும் தொண்டை மண்டலமே (தொண்டை மண்டல சதகம் 51)

 3. தொண்டைமண்டல சதகம் 58
 4. திருவாரூருக்கு அருகிலுள்ள ஊர். மனுநீதிச் சோழன் வரலாற்றில் வரும் பசு தன் கன்றை இழந்த ஊர்.
 5. கம்பன் என்றும் தாதன் என்றும் காளி ஒட்டக்கூத்தன் என்றும்
  கும்பமுனி என்றும் பேர் கொள்வரோ – அம்புவியில்
  மன் நாவலர் புகழும் வாயல் அனதாரியப்பன்
  அந் நாளிலே இருந்தக்கால்.

 6. திரம் பெறு கன்றாப்பு உடைய சிங்கப் பெருமான்
  உரம் பெறு தண்டாயுதக் கோனை – பெரும் பகலே
  அந்தி வரும் நீ தினைந்தால் அல்ல என்றாலும் காலம்
  பிந்தி வரும் முந்தி வரும் பேச்சு (சொற்பிரிப்பு செய்ய்ப்பட்டுள்ள வெண்பா)

 7. கனத்து இருந்த கடல் புடை சூழ் கன்னைத் தண்டாயுதனை கன்றாப்பு உடையான்
  நினைத்திருந்த நன்மையினால் குறைவில்லை என்று எழுதும் நிருபருக்கு
  முனைத் திருந்த வாணிய அயன் அனதாரியான் சிவன் தாள் முகுந்தனேதான்
  உனைத் திருந்த நினைத்திருந்தும் மடப்புறத்தும் இத்தினை என்னும் பாதி தானே
  (பாடல் பொருள்நோக்கில் செற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது)

 8. காட்டில் பொலிய ஆன்பசு என்று எழுதும் கன்றாப்பு உடை ராயன்
  சீட்டுக் கவிதை அனதாரி செய்யும் தமிழின் திறம் அறிந்தேன்
  காட்டில் புகழ் கன்னைக் குடையான் நாளும் தண்டாயுதன் பெருமை
  வாட்டுப் படுமோ அவன் காணி உணர்ந்தோர் சோழ மண்டலமே.

 9. மண்ணச்சநல்லூர்
 10. ‘திடத்தொடு செவந்தி துணைவன் திருவிருந்தான்
  அடர்த்த செயலில் பொரு தடாகை’ (உற்பத்தி காண்டம், சருக்கம் 15, பாடல் 20)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனதாரியப்பன்&oldid=2718262" இருந்து மீள்விக்கப்பட்டது