உள்ளடக்கத்துக்குச் செல்

அனதர் தின் மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனதர் தின் மேன்
சுவரொட்டி
இயக்கம்டபிள்யூ. எஸ். வான் டைக்
தயாரிப்புஹன்ட் ஸ்ட்ரோம்பர்க்
திரைக்கதை
  • பிரான்சஸ் குட்ரிச்
  • ஆல்பர்ட் ஹாக்கெட்
  • அனிதா லூஸ்[a]
இசைஎட்வர்ட் வார்ட்
நடிப்பு
  • வில்லியம் பவல்
  • மிர்னா லாய்
  • வர்ஜீனியா கிரே
  • ஓட்டோ குரூகர்
  • சீ. ஆப்ரே சிமித்
  • ரூத் ஹஸ்ஸி
  • நாட் பெண்டில்டன்
  • பேட்ரிக் நோல்ஸ்
  • டாம் நீல்
ஒளிப்பதிவு
  • ஆலிவர் டி. மார்ஷ்
  • வில்லியம் டேனியல்ஸ்
படத்தொகுப்புஃபிரெட்ரிக் ஒய். ஸ்மித்
கலையகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
விநியோகம்லோவ்ஸ் சினிப்ளெக்ஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியீடுநவம்பர் 17, 1939 (1939-11-17)
ஓட்டம்103 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1,107,000[1]
மொத்த வருவாய்$2,223,000[1]

அனதர் தின் மேன் (Another Thin Man, இன்னொரு மெலிந்த மனிதன்) என்பது 1939-ஆம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க நகைச்சுவை மருமத் திரைப்படமாகும். டபிள்யூ.எஸ். வான் டைக் இயக்கிய இப்படம் தின் மேன் திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகமாகும். இதில் வில்லியம் பவல் , மைர்னா லாய் ஆகியோர் நிக் மற்றும் நோரா சார்லஸ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது டேஷியல் ஹேமெட் எழுதிய கான்டினென்டல் ஓப் தொடர் கதையான "தி ஃபேர்வெல் மர்டர்" என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது. [2] இத்திரைப்படத்தில்தான் சார்லஸ் இணையரின் மகனான நிக்கி ஜூனியர் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறார். இப்படத்தின் நடிகர்கள் பட்டியலில், அத்தம்பதியரின் 'டெரியர்' வகை நாயான ஆஸ்டா, வர்ஜீனியா கிரே, ஓட்டோ குரூகர், சீ. ஆப்ரே சிமித், ரூத் ஹஸ்ஸி, நாட் பெண்டில்டன் (1934 ஆம் ஆண்டு வெளியான த தின் மேன் திரைப்படத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார்), பேட்ரிக் நோல்ஸ் மற்றும் டாம் நீல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பின்னர் திரீ ஸ்டூஜஸ் குழுவில் இணைந்த ஷெம்ப் ஹோவர்ட், இப்படத்தில் வேக்கி என்ற கதாபாத்திரத்தில் தனது பெயர் குறிப்பிடப்படாத சிறிய பாத்திரத்தில் தோன்றியுள்ளார். [3] [4]

இந்தப் படத்திற்கு ரிட்டர்ன் ஆஃப் த தின் மேன் என்று பெயரிட முடியவில்லை ஏனெனில் உண்மையான "தின் மேன்" (இவர் பெரும்பாலும் துப்பறிவாளர் நிக் சார்லஸுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறார்) முதல் படத்தில் இறந்துவிடுகிறார். [5] இப்படத்தைத் தொடர்ந்து ஷேடோ ஆஃப் தி தின் மேன் (1941) என்னும் படம் வெளியானது.

கதை

[தொகு]

நோராவின் தந்தையின் முன்னாள் வர்த்தகப் பங்குதாரரான கர்னல் பர் மெக்ஃபே, நீள் தீவில் உள்ள தனது மாளிகையில் வார இறுதி விருந்துக்கு வருமாறு நிக் மற்றும் நோரா சார்லஸை அழைக்கிறார். அதைத் தொடர்ந்து, அவர்களும் செல்ல நாய் ஆஸ்டா, தங்கள் கைக்குழந்தையான நிக்கி ஜூனியருடன் நீள் தீவு மாளிகைக்கு வருகின்றனர். அங்கு மெக்ஃபேயின் வளர்ப்பு மகள் லோயிஸ், அவளது வருங்காலக் கணவர் டட்லி ஹார்ன், மெக்ஃபேயின் செயலாளர் ஃப்ரெடி கோல்மன் ஆகியோரும் உள்ளனர். மெக்ஃபே தனது சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் பயன்படுத்தபட்டதன் காரணமாக அவரது முன்னாள் ஊழியரான ஃபில் சர்ச் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். மெக்ஃபே கொல்லபடுவதாக சர்ச்சுக்கு கனவு வருவதாக கூறி தன்னைக் கோபப்படுத்திவருவதாக மெக்ஃபே கூறுகிறார். மேலும் மெக்ஃபேயின் மரணம் குறித்துத் தான் மூன்று முறை கனவு கண்டதாகவும், அத்தகைய கனவுகள் மூன்றாவது முறை தோன்றினால் அது நிஜமாகிவிடும் என்றும் சர்ச் கூறி வருகிறார்.

இரவு விருந்தின் போது, அடையாளம் தெரியாத ஒரு மனிதர் மெக்ஃபேயின் நீச்சல் குளத்திற்கு அருகில் தீ வைத்து, லோயிஸின் நாயையும் கொன்றுவிடுகிறார். நிக், அருகிலுள்ள சர்ச்சின் மாளிகைக்குச் செல்கிறார். அவரிடம் கனவு பற்றிக் கேட்கிறார். சர்ச் தான் இன்று காலையில் மூன்றாவது கனவு கண்டதாகவும், அதில், மெக்ஃபே கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார் என்று கூறுகிறார். மேலும் தன் கனவில் நோரா, நிக்கி ஜூனியரும் வருவதாக சர்ச் கூறியபோது, நிக் சர்ச்சின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். அன்று இரவு அந்த வீட்டில், துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. மெக்ஃபே தனது படுக்கையறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடக்கிறார். சர்ச் மீது சந்தேக நிழல் படர்கிறது. நிக் வெளியே வரும்போது, டட்லி ஹார்ன் அவனைச் சுட முயற்சிக்கிறான், ஆனால் லோயிஸ் நிக்கைத் தள்ளிவிட்டுக் காப்பாற்ற, காவல்துறையினர் ஹார்னைக் சுட்டுக் கொல்கின்றனர்.

நிக், உதவி மாவட்ட வழக்கறிஞர் வான் ஸ்லாக், லெப்டினன்ட் கில்ட் ஆகியோர் சர்ச்சின் காதலி ஸ்மிட்டியை நியூயார்க் நகரத்தில் உள்ள அவளது வீட்டில் விசாரிக்கின்றனர். ஆனால், முந்தைய இரவு சர்ச் தன் கியூப அடியாள் டம்-டம்முடன் கியூபாவிற்குச் சென்றுவிட்டார் என்றும் அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் அவள் கூறுகிறாள். டம்-டம் ஸ்மிட்டியின் வீட்டிற்கு வருகிறான், ஆனால் வான் ஸ்லாக், கில்ட் ஆகியோர் அவனைப் படிக்க முயல, அவன் தப்பி ஓடிவிடுகிறான். ஸ்மிட்டியின் வீட்டில் வெஸ்ட் இண்டீஸ் கிளப் அட்டை இருப்பதை கவனித்த நிக், அந்த கிளப்புக்குச் செல்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் கிளப்பில், நிக், டம்-டம் மற்றும் சர்ச்சின் குடிகார நண்பன் ஒருவனைச் சந்திக்கிறான். அந்த நண்பன், சர்ச்சிற்கும், லிண்டா மில்ஸ் என்ற பெண்ணுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி அவனிடம் கூறி, அவன் கியூபாவிற்குச் சென்றதே இல்லை என்பதையும் தெரிவிக்கிறான். சர்ச்சின் நண்பன் மேலும் கூறுவதற்குள், டம்-டம் அவனைத் தாக்கி மயக்கமடையச் செய்கிறான். நிக் லிண்டா மிஸ்சை சந்திக்க அவளின் வீட்டிற்கு செல்கின்றான். அப்போது அங்கு சுவரில் ஒரு துப்பாக்கிக் குண்டு துளையையும், படுக்கைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் கறைகளையும் காண்கிறான். இரண்டு குண்டர்கள் தீயணைப்புப் படிக்கட்டு வழியாக உள்ளே ஏறிவந்து, நிக்கைத் துப்பாக்கி முனையில் மிரட்டுகிறனர், ஆனால் முன்னெச்சரிக்கையாகத் தன்னைப் பின்தொடருமாறு நிக் கில்டிடம் கேட்டிருந்ததால், காவல்துறை அவனைக் கைது செய்ய அங்கு வருகிறது.

அடுத்த நாள், நிக், நோரா, லோயிஸ், ஃப்ரெடி, அத்துடன் நிக்கின் முன்னாள் குற்றவாளி நண்பர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் தங்கள் விடுதி அறையில் நிக்கி ஜூனியரின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகிறனர். சர்ச் பதுங்கி உள்ளே நுழைந்து, படுக்கையறையில் நிக்கையும் நோராவையும் மடக்கி, வழக்கைக் கைவிடாவிட்டால் நிக்கைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான். சர்ச் பால்கனி வழியாகத் தப்பிக்கும்போது, ​​அவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். காவல்துறை ஸ்மிட்டியையும் டம்-டம்மையும் விசாரணைக்காக சார்லசின் அறைக்கு அழைத்து வருகிறது. கொலைக்காகத் தான்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டு, கடைசி நிமிடத்தில் ஒரு வலுவான சாட்சியத்தை அளித்துவிட்டு விடுதலையாகிவிடுவதே கொலையாளியின் திட்டம் என்று நிக் விளக்குகிறான்.

கொலையாளி மெக்ஃபேயை கொன்ற பிறகு, ஐந்து நிமிடங்கள் கழித்துதான் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இது கொலையாளி தப்பிப்பிப்பதற்காக ஏற்படுத்திய நேரம். அது கொலையாளிக்கு, தான் வேறு இடத்தில் இருக்கவில்லை என்பதை நிரூபிக்க ஐந்து நிமிடங்கள் அவகாசம் அளிளிப்பதாகும். அந்த குறிப்பிட்ட சாட்சியத்தைப் பயன்படுத்திய ஒரே மனிதர் லோயிஸ் மட்டுமே. லோயிஸ் மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, சர்ச் தன் கூட்டாளியாக நடிக்க ஸ்மிட்டியை நியமித்தார். லோயிஸ் சர்ச்சுடன் வேலை செய்கிறாள் என்ற சந்தேகத்தை தவிர்ப்பதற்காக, அவளின் நாய் கொல்லப்பட்டது. மெக்ஃபேயை லோயிஸ்தான் கொன்றாள் என்று சந்தேகித்த ஹார்ன், அவளைப் பாதுகாக்க நிக்கைக் கொல்ல முயன்றான். ஹார்ன் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவான் என்று அஞ்சிய லோயிஸ், தற்காப்புக்காக நிக் ஹார்னைச் சுட்டுவிடுவான் என்று யூகித்து, அவன் சுடப்படுவதைத் தடுத்தாள்.

மெக்ஃபேயின் சொத்தை அடைவதற்காக அவரை லோயிஸ் கொலை செய்துவிட்டாள். லோயிஸ் லிண்டா மில்ஸ் என்ற பெயரில் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். பின்னர், ஸ்மிட்டியுடனான சர்ச்சின் கள்ள உறவைக் கண்டுபிடித்த பிறகு, அவள் அவரைக் கொன்றாள். லோயிஸ் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு, நிக்கி ஜூனியரைக் கடத்திவிட்டதாகக் கூறி தப்பிக்க முயற்சிக்கிறாள். இருப்பினும், நோரா லோயிஸின் அறைக்குள் சென்று, நிக்கி ஜூனியரின் இடத்தில் மற்றொரு குழந்தையைக் காண்கிறாள். நிக்கின் முன்னாள் குற்றவாளி நண்பர்களில் ஒருவரான வேக்கி, தவறான குழந்தையுடன் சென்றிருந்ததை லோயிஸ் தற்செயலாகக் கவனிக்கிறாள். மாற்றப்பட்ட குழந்தையின் வேதனையுற்ற தாய், நிக்கி ஜூனியருடன் திரும்பி வந்து, தன் சொந்தக் குழந்தையை மீட்டுக்கொள்கிறாள். லோயிஸ் கைது செய்யப்படுகிறாள், மேலும் நிக் மற்றும் நோரா, ஆஸ்டா மற்றும் நிக்கி ஜூனியருடன் சிறிது காலம் அமைதியாகக் கழிக்கின்றனர்.

வரவேற்பு

[தொகு]

திரைப்பட விமர்சனத் திரட்டு வலைத்தளமான அழுகிய தக்காளிகள், 22 தொழில்முறை விமர்சகர்களின் விமர்சனங்களின் அடிப்படையில் இப்படத்தின் மதிப்பெண் 86% எனச் சுட்டிக்காட்டுகிறது. [6]

டொராண்டோ திரையரங்கம் ஒன்றின் முகப்பில், ரிச்சர்ட் ஆர்லனின் ' மிஸ்ஸிங் டாட்டர்ஸ்' திரைப்படத்துடன் 'அனதர் தின் மேன்' திரைப்படமும் இரட்டைத் திரையிடலாகக் காட்டப்பட்டது.

அனதர் தின் மேன் என்பது, நிக் மற்றும் நோரா சார்லஸ் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆறு திரைப்படங்களில் மூன்றாவது படம் ஆகும்.

வணிகம்

[தொகு]

அனதர் தின் மேன் திரைப்படம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மொத்தம் $2,223,000 வசூலித்தது: அமெரிக்காவிலும், கனடாவிலும் $1,523,000 தொகையும், மற்ற இடங்களிலிருந்து $700,000 வசூலித்தது. இது $394,000 லாபத்தை ஈட்டியது.

குறிப்புகள்

[தொகு]
  1. ↑ எழுத்தில் பங்களித்துள்ளார் (பெயர் குறிப்பிடப்படவில்லை)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "The Eddie Mannix Ledger". Margaret Herrick Library, Center for Motion Picture Study (Los Angeles).
  2. ↑ Library of Congress Copyright Office (1938). Catalog of Copyright Entries. p. 269. Retrieved 2012-07-30.
  3. ↑ "Another Thin Man". The Three Stooges Online Filmography. Retrieved 1 July 2017.
  4. ↑ "Another Thin Man (1939)". AFI Catalog of Feature Films. Retrieved January 1, 2022.
  5. ↑ "Another Thin Man". Derek Winnert. 14 March 2015. Retrieved 24 July 2025.
  6. ↑ "Another Thin Man". அழுகிய தக்காளிகள். Fandango Media. Retrieved June 28, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனதர்_தின்_மேன்&oldid=4527272" இலிருந்து மீள்விக்கப்பட்டது