அந்திமந்தாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அந்தி மந்தாரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அந்திமந்தாரை
உயிரியல் வகைப்பாடு e
திணை: தாவரம்
உயிரிக்கிளை: பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை: மெய்இருவித்திலி
வரிசை: கரியோபிலாலெசு
குடும்பம்: நிக்டாஜினச்சே
பேரினம்: மிராபிலிசு
இனம்: M. jalapa
இருசொற் பெயரீடு
Mirabilis jalapa
லி.
ஒரே செடியில் பல வண்ணப் பூக்கள்
மிராபிலிஸ் ஜலாபா

அந்திமந்தாரை (ஒலிப்பு) (Mirabilis Jalapa) அந்தியில் மலர்வதால், இது அந்திமந்தாரை அல்லது அந்திமல்லி என்று அழைக்கப்படுகின்றது. இது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவைக் கொண்ட தாவரம் ஆகும். இதுவே பெருவின் அதிசயம் ((Marvel of Peru) என்றும், நான்கு மணித்தாவரம் ( Four O’ Clock Plant), நாலு மணிப்பூ அல்லது அஞ்சு மணிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது.

இதற்குத் தாவரவியலில் மிராபிலிஸ் ஜலாபா Mirabilis Jalapa Linn என்று பெயர். ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். ‘ஜலாபா’ என்ற சிற்றின அடைமொழி (Specific Epith). இதன் வேர்க்கிழங்கிலிருந்து கிடைக்கும் பேதி மருந்தைக் குறிப்பதாகும். இது ஒரு பூவிதழ் வட்டமுடைய (Monochlamydae) இருவித்திலைக் குடும்பங்களில் ஒன்றான நிக்டாஜினெசியைச் (Nyctaginacae) சார்ந்தது, இதன் தாயகம் தென் அமெரிக்கா என்று கூறப்படுகின்றது.

இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர். இந்தத் தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.

இதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். குருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும். இதன் இலைச்சாறு காயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாகக் கருதப்படுகிறது.[1] ̩

சிறப்புப்பண்புகள்[தொகு]

இது நிமிர்ந்து வளரும் பலபருவக் குறுஞ்செடி அல்லது சிறு புதர்ச்செடியாகும். இது 60-90 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. விரைவில் வளரும் தன்மை உடையது. இதற்கு நில அடிக்கிழங்கு (Tuber) உண்டு. கிழங்கு ஏறக்குறைய 10 செ.மீ. விட்டத்தையடையும். இதிலிருந்து புதுச்செடிகள் தோன்றும். இதன் கணுக்கள் (Nodes) பருத்திருக்கும். இலைகள் முட்டை (Ovate) அல்லது ஈட்டிவடிவிலும் (Lanceolate), கூரிய நுனி அல்லது நீள் கூரிய நுனியோடும் (Acute or Acuminate) இருக்கும். ஏறக்குறைய 12 செ.மீ. நீளமுடையவை. பூக்கள் கொத்துக்களாக, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வண்ணங்களிலும், வரிகளுடனும், புள்ளிகளுடனும் அல்லது இவை இல்லாமலும் காணப்படும். இவை மாலையில் மலர்ந்து காலையில் மூடிக்கொள்ளும், அல்லி இதழ்கள் கிடையாது. இவற்றின் வண்ணமிகு அழகிய பகுதி புல்லி வட்டமாகும்.

பொருளாதாரச் சிறப்பு[தொகு]

இதன் வேர்க்கிழங்குகளுக்குப் பேதி உண்டாக்கும் தன்மை சிறிதளவு உண்டு. வேர்த்தூளுக்கு (Powder) குறிப்பிட்ட மணமும், உவர்ப்பு அல்லது கசப்புத் தன்மையும் உண்டு. இது உணர்ச்சியைக் குறைக்கக்கூடியது. உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். இதன் ஈரமான தூள் தோலையும், மூக்கு சவ்வையும் (Mucous membrane) பாதிக்கும். சீன நாட்டில் இதன் இலை, தண்டுகளைப் பன்றிக் கறியுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவார்கள். விதைகள் என்று கூறப்படுகின்ற கனிகள் மிளகுடன் கலப்படம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. கட்டிகளுக்கும் கொப்புளங்களுக்கும் இதன் இலைகள் பற்றாகப் (Poultice) பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலைச்சாறு காயம், புண், நமைச்சல் ஆகியவற்றைப் போக்குவதற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. இது அழகு தரும் செடியாகவும் வளர்க்கப்படுகின்றது. மரபியல் ஆராய்ச்சிகளில் பயன்படுகின்றது.

உசாத்துணைகள்[தொகு]

  1. Lawrence, G.H.M. The Taxonomy of Vascular Plants. pp.823, the Macmillan Co., New York, 1951.
  2. Rendle, A.B. The classification of Flowering plants. Vol. II. pp 640, (Repr) Cambridge Univ. Press, London, 1975.
  3. The Wealth of India. Vol. VI. pp 483, CSIR Publ., New Delhi, 1962.
  4. Willis, J.A Dictionary of Flowering Plants & Ferns. (7th ed. Airy Shaw H.K.) pp. 1214. Cambridge Univ. Press, London, 1966.
  5. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு அறிவியல் களஞ்சியம், பக்கம் எண்:838

மேற்கோள்கள்[தொகு]

  1. "h2g2 – Four O' Clocks – Night Blooming Beauties". Bbc.co.uk. 2002-08-20. {{cite web}}: Unknown parameter |access date= ignored (|access-date= suggested) (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்திமந்தாரை&oldid=3708042" இலிருந்து மீள்விக்கப்பட்டது