உள்ளடக்கத்துக்குச் செல்

அத்ருதி இலட்சுமிபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்ருதி இலட்சுமிபாய்
சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)
பதவியில்
1937–1952
துணை பேரவைத் தலைவர் ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
29 மே 1946 – 20 பிப்ரவரி 1952
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 அக்டோபர் 1899
பெர்காம்பூர், கஞ்சாம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய ஒடிசா, இந்தியா)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

அத்ருதி இலட்சுமிபாய் (Adruti Laxmibai) (பிறப்பு 12 அக்டோபர் 1899 - இறந்த தேதி மற்றும் ஆண்டு தெரியவில்லை) ஒரு இந்திய சுதந்திர இயக்க ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் கல்கத்தாவில் உள்ள தயாசிசியன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார், பின்னர் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார் . இவர் 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் பெர்ஹாம்பூர் தொகுதியில் ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1946 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகப் பணியாற்றினார். இவர் குறிப்பாக ஒடிசாவில் பெண்களுக்கான இலவசக் கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

ஆரம்ப கால வாழ்க்கை, கல்வி மற்றும் திருமண வாழ்க்கை

[தொகு]

இலட்சுமிபாய் 1899 அக்டோபர் 12 அன்று இந்தியாவின் பெர்ஹம்பூரில் வராஹகிரி வெங்கட ஜோகேஷ் (தந்தை) மற்றும் வராககிரி சோவமா (தாய்) ஆகியோருக்குப் பிறந்தார். இவர் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் வி. வி. கிரியின் தங்கையும் ஆவார். இலட்சுமிபாய் தனது இடைநிலைக் கல்வியை பெர்ஹாம்பூரில் முடித்தார், பின்னர் காசியில் உள்ள பிரம்மஞான சபையில் சேர்ந்தார். இவர் அந்நாளைய கல்கத்தாவில் தயாசிசியன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் மருத்துவம் படிக்கும் பொருட்டு வேலூர், கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார். இவர் உடல்நிலை சரியில்லாமல் போனதால் இவரால் மருத்துவப் படிப்பை முடிக்க இயலாமல் போனது. இறுதியில் இவர் பெர்ஹாம்பூர் திரும்பினார். இவர் பெர்ஹாம்பூருக்குத் திரும்பிய பிறகு, ராஜமுந்திரியைச் சேர்ந்த அத்ருதி வெங்கடேஸ்வர் ராவை மணந்தார். திருமணமான ஓராண்டில் கணவர் இறந்து விட்டதால், பெர்ஹாம்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பினார். [1]

இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கேற்பு

[தொகு]

இவரது கணவர் இறந்த பிறகு, லட்சுமிபாய் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றார். இந்திய விடுதலை இயக்கத்தில் இவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே ஈடுபட்டிருந்தனர். காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் இராசேந்திர பிரசாத் போன்ற தேசிய தலைவர்கள் பெர்ஹாம்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது கிரியின் இல்லத்தில் தங்கியிருந்தனர். வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தல் மற்றும் மதுபானக் கடைகளின் முன் மறியல் போன்ற நடவடிக்கைகளில் இவர் பங்கேற்றார். இந்த நடவடிக்கைகளில் இவரது பங்கேற்பு 18 ஜனவரி 1932 அன்று முதல் கைதிற்கு வழிவகுத்தது. சத்ரபூர் நீதிமன்றம் இவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 700 இந்திய ரூபாய் அபராதமும் விதித்தது. பின்னர் அவர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். 1935 ஆம் ஆண்டில், கஞ்சாமின் குலாடாவில் ராயட்ஸ் மகாசபாவின் தலைவராக பணியாற்றினார். இவர் காதி இயக்கத்தின் முக்கிய செயல்பாட்டாளராக இருந்தார் மற்றும் ஏழைகளுக்கு இலவசமாக காதி விநியோகித்தார். இவர் 1942 ஆம் ஆண்டிலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அவர் கட்டாக்கில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். அங்கு சுயராச்சிய இயக்கத்தின் போது பல குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். [1] இவ்வாறான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான நினைவுச்சின்னம் 2010 ஆம் ஆண்டில் ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கால் கட்டாக்கில் உள்ள சிறைச்சாலையில் திறக்கப்பட்டது. ஆனால், பின்னர் இதன் வளர்ச்சி நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.[2]

பின்னர் அரசியலில் ஈடுபாடு

[தொகு]

இலட்சுமிபாய் 1930 முதல் 1940 வரை ஒடிசாவில் இந்திய தேசிய காங்கிரஸின் தீவிர உறுப்பினராக பணியாற்றினார். இவர் கஞ்சம் மாவட்டத்தின் துணைத் தலைவர், காங்கிரஸ் கமிட்டி மற்றும் பெர்ஹாம்பூர் நகர காங்கிரஸ் தலைவர் பதவிகளை ஏற்றுக்கொண்டார். இலட்சுமிபாய் 1937 ஆம் ஆண்டில் முதல் தேர்தலில் பெர்காம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கடுத்து 1953 ஆம் வரை சட்டமன்ற உறுப்பினராகக் தொடர்ந்தார்.[3]

பெண்களுக்கு அதிகாரமளித்தல்

[தொகு]

கேரளாவில் நடந்த துணை சபாநாயகரின் தேசிய மாநாட்டில் வழங்கப்பட்ட கல்விக் கொள்கையை இலட்சுமிபாய் விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்தார். ஒடிசாவில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஆர்வத்தின் ஒரு பகுதியாக அவர் பெண்களுக்கு இலவசக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இந்தக் கொள்கை அப்பகுதியில் உள்ள மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தியது. ஒடிசாவில், கஸ்தூரிபா நினைவு நிதியின் உள்ளூர் கிளையின் தலைவராக அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி குழுவின் ஆலோசகராகவும், மாநில சமூக நல வாரியத்தில் உறுப்பினராகவும் பணியாற்றினார். ஏழை மாணவர்களுக்கு உதவும் பொருட்டு கஞ்சாம் மாவட்டம், பௌது மாவட்டம் மற்றும் புல்பானி மாவட்டத்திற்கும் அவர் பயணம் செய்தார். அத்தோடு இவர் ஜெய மங்கலம் ஆசிரமத்தில் பெண் மாணவர்களுக்கு உதவி செய்தார்.

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. 1.0 1.1 Dr Dasarathi Bhuyan. "Participation of Women of Ganjam District in the Freedom Movement of India" (PDF) (in English). pp. 19–20. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)Dr Dasarathi Bhuyan. "Participation of Women of Ganjam District in the Freedom Movement of India" (PDF). pp. 19–20. Retrieved 18 November 2018.
  2. "British-era jail in Cuttack wallows in neglect". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.
  3. "Brief History of Odisha Legislative Assembly Since 1937 ,SECOND PRE-INDEPENDENT ASSEMBLY THE LINK ASSEMBLY - 1946". ஒடிசாவின் சட்டமன்றம். பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்ருதி_இலட்சுமிபாய்&oldid=3287641" இலிருந்து மீள்விக்கப்பட்டது