உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955
பொதுமக்களின் நலன் கருதி, குறிப்பிட்ட சில பண்டங்களின் உற்பத்தி, வழங்கல், விநியோகம், அவற்றின் மீதான வர்த்தகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வகை செய்யும் ஒரு சட்டம்.
சான்றுNo. 10 of 1955
நிலப்பரப்பு எல்லைஇந்தியா
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்
சம்மதிக்கப்பட்ட தேதி1 ஏப்ரல் 1955
ரத்து செய்யப்படுபவை
அத்தியாவசியப் பொருட்கள் அவசரச் சட்டம், 1955 (1955-ன் 1)

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 ( Essential Commodities Act, 1955 ) என்பது இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். பதுக்கல் அல்லது கள்ளச்சந்தை விற்பனைக் காரணமாக, குறிப்பிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபடும்போது, ​​அது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால்; அத்தகைய பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காகவே இச்சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின் வரம்பிற்குள் உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருட்கள் ( பெட்ரோலியப் பொருட்கள் ) போன்றவை அடங்கும். [1] [2] இந்தச் சட்டம் 2020 இந்திய வேளாண் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020 மூலம் திருத்தப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-இல் இயற்றப்பட்டது. நுகர்வோருக்குப் பொருட்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் பொருட்டு, 'அத்தியாவசியமானவை' என அறிவிக்கப்பட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தி, விநியோகத்தைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் இச்சட்டத்தை அப்போதிலிருந்து பயன்படுத்தி வருகிறது. மேலும், அரசாங்கம் ஒரு பொருளை 'அத்தியாவசியப் பொருள்' என அறிவித்தால், அதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிருணயிக்கும் அதிகாரமும் அதற்கு உண்டு.

இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள பொருட்களின் பட்டியலில் மருந்துகள், உரங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், அத்துடன் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களும் அடங்கும். தேவை ஏற்படும்போதெல்லாம் ஒன்றிய அரசு இப்பட்டியலில் புதிய பொருட்களைச் சேர்க்கலாம்; நிலைமை சீரடைந்ததும் அப்பொருட்களைப் பட்டியலிலிருந்து நீக்கவும் செய்யலாம்.

பயன்பாடு

[தொகு]

ஒரு குறிப்பிட்ட பண்டத்தின் விநியோகத்தில் பற்றாக்குறை இருப்பதையும், அதன் விலை கடுமையாக உயர்ந்து வருவதையும் ஒன்றிய அரசு கண்டறிந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பண்டத்தை எவ்வளவு இருப்பு வைக்கலாம் என்பதை நிர்ணயித்து அது குறித்த அறிவிப்பை வெளியிடலாம். அந்த அறிவிப்பின் அடிப்படையில் மாநில அரசுகள் அதன் இருப்பு வரம்புகளைத் தீர்மானிப்பதோடு, அவ்வரம்புகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. இதனால் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் என, அப்பொருளை வணிகம் செய்யும் எவரும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதனை இருப்பு வைப்பது தடுக்கப்படுகிறது.

இருப்பினும், அரசு எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காமலும் இருக்கலாம். ஆனால் கட்டுப்பாடு விதித்தவுடன், வணிகர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி தங்களிடம் உள்ள சரக்குகளை உடனடியாகச் சந்தையில் விற்க வேண்டும். இது விநியோகத்தை மேம்படுத்தி, விலையைக் குறைக்கிறது. எல்லாக் கடைக்காரர்களும் வணிகர்களும் இதைக் கடைப்பிடிப்பதில்லை என்பதால், அரசு முகமைகள் அனைவரையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திடீர் சோதனைகளை நடத்துகின்றன, மேலும் விதிமீறுபவர்கள் தண்டிக்கப்படுகிறனர். உபரியாக இருந்து கைப்பற்றபட்ட சரக்குகள் ஏலம் விடப்படுகின்றன அல்லது நியாயவிலைக் கடைகள் மூலம் விற்கப்படுகின்றன.

பின்னணி

[தொகு]

அத்தியாவசியப் பொருட்கள் ஒழுங்குமுறைச் சட்டம் 1955-ல் இயற்றப்பட்டது. அன்றிலிருந்து அரசாங்கத்தால் 'அத்தியாவசியமானவை' என அறிவிக்கப்பட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தி, பகிர்மாணம், விநியோகம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், அவற்றை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முக்கிய தயாரிப்புகளான முகக்கவசங்கள், கைத் தூய்மையாக்கிகள் (hand-sanitizers) ஆகியவை மக்களுக்குச் சரியான விலையிலும், சரியான தரத்திலும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு அப்பொருட்களை 2020 மார்ச் 14 அன்று, இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவந்தது. [3] இருப்பினும், 2020 சூலை 1 நிலவரப்படி, அரசாங்கம் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம் 2020

[தொகு]

2020 மே மாதம், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தச் சட்டம் திருத்தப்படும் என்றும், பஞ்சம் அல்லது பிற பேரழிவுகள் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே கையிருப்புக்கு வரம்பு விதிக்கப்படும் என்றும் பரிந்துரைத்தார். பதப்படுத்துபவர்கள் மற்றும் விநியோகச் சங்கிலி உரிமையாளர்களுக்கு அவர்களின் திறனின் அடிப்படையிலும், ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி தேவையின் அடிப்படையிலும் கையிருப்பில் எல்லை வரம்பு இருக்காது. [4] [5] இது சில தண்டனைகளை முடிவுக்குக் கொண்டுவரும். இது விவசாயிகளுக்கு நல்ல விலையைப் பெறுவதற்காக, பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற விவசாய விளைபொருட்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளையும் நீக்கும். [5]

அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) அவசரச் சட்டம் 2020 சூன் 5 அன்று பிறப்பிக்கப்பட்டது. [6] அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான அவசரச் சட்டத்தை மக்களவை 2020 செப்டம்பர் 15 அன்றும், மாநிலங்களவை 2020 செப்டம்பர் 22 அன்றும் நிறைவேற்றியது [7] 2020 செப்டம்பர் 27 அன்று, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் ஒப்புதல் பெற்ற பிறகு, இந்த மசோதா ஒரு சட்டமாக உருவெடுத்தது. இச்சட்டம் ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது. [8]

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தைத் திருத்துவதன் மூலம், குறிப்பிட்ட சில பொருட்களை 'அத்தியாவசியப் பொருட்கள்' பட்டியலிலிருந்து நீக்க இந்திய அரசாங்கத்திற்கு அவசரச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது; இச்சட்டக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பொருட்களில் தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கும். [9] முன்னரே குறிப்பிடப்பட்ட அந்த அசாதாரணச் சூழல்களில் மட்டுமே, தனிமனிதர்கள் இருப்பு வைத்துக்கொள்ளக்கூடிய அப்பொருட்களின் அளவின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதன் வாயிலாக, இவற்றை அரசால் ஒழுங்குபடுத்த இயலும். பொருட்களின் இருப்புகள் மீதான அரசின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் விலையேற்றத்தை அடிப்படையாகக் கொண்டே அமையும் என்றும்; சில்லறை விலையில் 100% உயர்வு (தோட்டக்கலைப் பொருட்களின் விஷயத்தில்) அல்லது 50% உயர்வு (நீண்ட நாட்கள் கெடாத வேளாண் உணவுப் பொருட்களின் விஷயத்தில்) ஏற்பட்டால் மட்டுமே இக்கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்றும் இந்த அவசரச் சட்டம் குறிப்பிடுகிறது. இந்தியாவில் பொது விநியோகத்திற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களுக்கு இக்கட்டுப்பாடுகள் பொருந்தாது. [10]

2021 ஆம் ஆண்டில், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகம் தொடர்பான நாடாளுமன்றக் குழு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 2020-ஐ அமல்படுத்துமாறு பரிந்துரைத்து ஒன்றிய அரசுக்கு ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. 2020-2021 காலகட்டத்தில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு வழிவகுத்த, சர்ச்சைக்குரிய மூன்று இந்திய வேளாண் சட்டங்களில் 'அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 2020'-ம் ஒன்றாகும். 2020 சூன் 5 அன்று நடைபெற்ற அக்குழுவின் கூட்டத்தின்போது தான் வெளியிட்டிருந்த அறிக்கையை பகவந்த் மான், பொதுவெளியில் வெளியிட்டார். தனது அந்த அறிக்கையில், இந்த வேளாண் சட்டங்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைக்கும் போக்கை அதிகரிக்கும் என்று மான் கவலை தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீக்குவது, சட்டவிரோதமாகப் பொருட்களைப் பதுக்கி வைத்து விலையை செயற்கையாக உயர்த்தி, பின்னர் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு வழிவகுக்கும்; இதன் விளைவாக அப்பொருட்களின் விலை உயரும். இது ஏழை எளிய மக்களுக்குப் பெரும் இன்னல்களை ஏற்படுத்தும். மேலும், உருளைக்கிழங்கைப் பதுக்கி வைக்கும் பிரச்சினையையும் அவர் சுட்டிக்காட்டினார். [11]

2020 செப்டம்பரில் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 2020–2021 இந்திய விவசாயிகள் போராட்டத்தை விவசாய சங்கங்கள் தொடங்கின. வேளாண் மசோதாக்கள் [12] என்றழைக்கப்படும் இச்சட்டங்களை, பல விவசாய சங்கங்களும், [13] [14] எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் "விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள்" என்று வருணித்தனர்; இச்சட்டங்கள் விவசாயிகளை "பெருநிறுவனங்களின் தயவை" எதிர்பார்க்கும் நிலைக்கு கொண்டு வரும் என்று அவர்கள் கூறினர். [15] [16]

திசம்பர் மாத நடுப்பகுதியில், தில்லியைச் சுற்றி போராட்டக்காரர்களால் உருவாக்கப்பட்ட சாலைத் தடைகளை அகற்றக் கோரிய மனுக்களின் தொகுப்பு இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தன. [17] 2021 சனவரியில் இந்திய உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களை அமலாக்குவதற்கு தடை விதித்தது. இத்தடை உத்தரவை விவசாயத் தலைவர்கள் வரவேற்றனர், இந்த உத்தரவு இன்னும் நடைமுறையில் உள்ளது. [18] [19] உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு தனது இரகசிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. [20]

ஆறு மாநில அரசுகள் ( கேரளம், பஞ்சாப், சத்தீசுகர், இராசத்தான், தில்லி , மேற்கு வங்காளம் ) வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றின. [21] மேலும் மூன்று மாநிலங்கள் (பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான்) தத்தமது மாநில சட்டமன்றங்களில் மாற்றுச் சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்தன. [22] இந்த மாற்றுச் சட்ட மசோதாக்கள் எதற்கும் அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதலை அளிக்கவில்லை. [23] [24] [25]

2021 நவம்பர் 19 அன்று, அந்த மசோதாக்களை இரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவெடுத்தது. [26] அதனைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டிற்கான 'வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை' நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நவம்பர் 29 அன்று நிறைவேற்றப்பட்டது. [27] வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், விவசாயிகள் சங்கங்கள் தங்களுக்கு உத்தரவாதமான குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அத்துடன் 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற அரசின் இலக்கையும், 2004-ஆம் ஆண்டில் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய விவசாயிகள் ஆணையத்தின் அறிக்கைகளையும் அவை அரசுக்கு நினைவூட்டின. [28]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ministry of Consumer Affairs of the Government of India. Official Website. Annual Report 2005 - 2006, Chapter IV, 'Essential Commodities Act 1955'". Archived from the original on 5 November 2011. Retrieved 9 May 2012.
  2. "ECA, 1955". Archived from the original on 25 September 2012. Retrieved 10 October 2013.
  3. "Masks, sanitizers put under Essential Commodities Act" (in en). @businessline. https://www.thehindubusinessline.com/news/masks-sanitisers-put-under-essential-commodities-act/article31062832.ece.
  4. NEWS, OMMCOM (15 May 2020). "Centre To Amend Essential Commodities Act; Deregulate Pulses, Onion". ommcomnews.com. Archived from the original on 8 November 2022. Retrieved 2020-05-19.
  5. 1 2 "Explained | Amendments to Essential Commodities Act". Moneycontrol. Retrieved 2020-05-19.
  6. Ministry of Law and Justice (Legislative Department), Government of India (5 June 2020). "Essential Commodities (Amendment) Ordinance" (PDF). E-Gazette of India. Retrieved 30 July 2020.
  7. "Lok Sabha clears bill to amend Essential Commodities Act". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/lok-sabha-clears-bill-to-amend-essential-commodities-act/articleshow/78131275.cms.
  8. Parliament, Indian. "Essential Commodities (Amendment) Act 2020" (PDF). egazette.nic.in. Retrieved 26 December 2020.
  9. "Cabinet amends Essential Commodities Act, approves ordinance to ease barrier-free trade". The Indian Express (in ஆங்கிலம்). 2020-06-03. Retrieved 2020-07-30.
  10. "The Essential Commodities (Amendment) Bill, 2020". PRSIndia (in ஆங்கிலம்). 2020-06-06. Retrieved 2020-07-30.
  11. "Bhagwant Mann releases statement before House panel, dares Harsimrat to come clean" (in en). The Indian Express. 24 March 2021. https://indianexpress.com/article/cities/chandigarh/bhagwant-mann-releases-statement-before-house-panel-dares-harsimrat-to-come-clean-7242303/.
  12. "Farm Bills have potential to represent significant step forward for agriculture reforms in India: IMF" (in en-IN). The Hindu. 15 January 2021. https://www.thehindu.com/business/Economy/farm-bills-have-potential-to-represent-significant-step-forward-for-agriculture-reforms-in-india-imf/article33577480.ece.
  13. "Here's Why Farmers Are Protesting the 3 New Agriculture Ordinances". The Quint. 21 September 2020. https://www.thequint.com/news/india/farmers-protesting-the-3-new-ordinances.
  14. "Angry Farmers Choke India's Capital in Giant Demonstrations" (in en-US). The New York Times. 30 November 2020. https://www.nytimes.com/2020/11/30/world/asia/india-farmers-protest.html.
  15. "Ordinance to put farmers at mercy of corporates" (in en). தி டிரிப்யூன். 15 June 2020. https://www.tribuneindia.com/news/punjab/ordinance-to-put-farmers-at-mercy-of-corporates-99720.
  16. "Now, farmers will be back to serfdom, at the mercy of big corporates: Manish Tewari" (in en). டெக்கன் ஹெரால்டு. 22 September 2020. https://www.deccanherald.com/national/national-politics/now-farmers-will-be-back-to-serfdom-at-the-mercy-of-big-corporates-manish-tewari-891010.html.
  17. Vaidyanathan, A (16 December 2020). Sanyal, Anindita (ed.). "Centre-Farmers' Committee, Suggests Supreme Court, Or "Talks Will Fail"". NDTV. Archived from the original on 17 December 2020. Retrieved 17 December 2020.
  18. Iftikhar, Fareeha (12 January 2021). "Farmers reject SC committee, demand repeal of farm laws". Hindustan Times (in ஆங்கிலம்). Archived from the original on 19 January 2021. Retrieved 15 January 2021.
  19. "Government will abide by Supreme Court order on farm laws: President Kovind" (in en-IN). 29 January 2021. https://www.thehindu.com/news/national/government-will-abide-by-supreme-court-order-to-stay-rollout-of-farm-laws-president-kovind/article33692792.ece.
  20. "Supreme Court-appointed farm laws committee invites views, suggestions before February 20". India Legal (in அமெரிக்க ஆங்கிலம்). 28 January 2021. Retrieved 9 February 2021.
  21. Rai, Arpan, ed. (2021-01-28). "West Bengal passes resolution against three farm laws, sixth state to do so". Hindustan Times (in ஆங்கிலம்). Retrieved 2021-03-26.
  22. "Toeing Punjab and Chhattisgarh, Rajasthan introduces three bills to counter Centre's farm laws". The Indian Express (in ஆங்கிலம்). 2020-10-31. Retrieved 2021-03-26.
  23. "Will move SC if President doesn't give assent to Punjab amendments: CM". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-03-18. Retrieved 2021-03-26.
  24. Bhandari, Prakash (2020-12-26). "Congress government in Rajasthan upset with Governor for withholding farm Bills passed by Vidhan Sabha". National Herald (in ஆங்கிலம்). Retrieved 2021-03-26.
  25. "Chhattisgarh governor returns government's proposal to hold Assembly session to negate farm laws". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). 20 October 2020. Retrieved 2021-03-26.
  26. Saaliq, Sheikh (19 November 2021). "India to repeal controversial farm laws that led to protests". AP NEWS (in ஆங்கிலம்). Retrieved 2021-11-19.
  27. "Parliament clears Farm Laws Repeal Bill without a debate". https://www.thehindu.com/news/national/parliament-clears-farm-laws-repeal-bill-without-a-debate/article37762376.ece. பார்த்த நாள்: 2021-11-30.
  28. Mishra, Dheeraj (27 December 2020). "Reality Belies Modi Govt Claims of Implementing Swaminathan Commission's Report". The Wire. Retrieved 2021-11-26.