உள்ளடக்கத்துக்குச் செல்

அதிரியான் வான் மானன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அதிரியான் வான் மானன்
Adriaan van Maanen
பிறப்பு(1884-03-31)மார்ச்சு 31, 1884
சுனீக், நெதர்லாந்து
இறப்புசனவரி 26, 1946(1946-01-26) (அகவை 61)
பசதேனா, அமெரிக்கா
தேசியம்டச்சுக்காரர்
துறைவானியல்
பணியிடங்கள்மவுண்ட் வில்சன் வான்காணகம்
யெர்க்கேசு வான்காணகம்
குரொனிங்கன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்உட்ரெச்ட்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆல்பர்ட்டசு அந்தோனி நிழ்லாந்து
அறியப்படுவதுவான் மானன் விண்மீன்

அதிரியான் வான் மானன் (Adriaan van Maanen) (மார்ச் 31, 1884,சுனீக் - சனவரி 26, 1946, பசதேனா) ஒரு நெதர்லாந்து டச்சு அமெரிக்க வானியலாளர் ஆவார்.

வான் மானன் பிரீசுலாந்தில் ஒரு செல்வ வளமுள்ள குடும்பத்தில் பிறந்தார். இவர் உட்ரெச்ட்டு பல்கலைக்கழகத்தில் வானியல் பயின்று 1911 இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். பின்னர் சிலகாலம் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். பின் 1911 இல் இவர் அமெரிக்கவுக்குச் சம்பளமில்லாமல் யெர்க்கேசு வான்காணகத்தில் பணிபுரிய புலம்பெயர்ந்தார். ஓராண்டிற்குள் மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் ஒரு பதவியைப் பெற்றுள்ளார். அங்கே இவர் 1946 இல் இருந்து தன் இறப்புவரை பணியில் இருந்தார்.

இவர் வான் மானன் விண்மீனைக் கண்டுபிடித்தார்.

இவர் சுருள்வடிவ ஒண்முகில்களின் அக இயக்கங்களை வானளவையியல் முறையில் அளந்ததற்காகப் பரவலாக அறியப்பட்டவர். இவர் ஒண்முகில்களை நம் பால்வெளியில் உள்ள கள, உடுக்கணவெளி வளிமத் திரள்களாகக் கருதியதால், எட்வின் அபுளின் ஆந்திரமேடா, பிற புறச் சுருள் பால்வெளிகளின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இவரது அளவுகள் பிழைபட்டன என உணரப்பட்டது. இவர் கண்டறிந்த ஒண்முகிலின் இயக்கப்படி, செபீடு மாறிகளின் வேகமோ ஒளிவேகத்தைவிடக் கூடுதலாக இருந்தது. ஆனால் 1935 இல் எட்வின் அபுள் அளந்த செபீடு விண்மீன்களின் வேகம் சரியென அறியப்பட்டதால், இவரது அளவீடுகள் பிழைபட்டதெனக் கொள்ள நேர்ந்தது.

1924 இல் இவர் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

பிழைபட்ட முடிவுகளுக்குப் பெயர்போனவர்

[தொகு]

இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு பத்துகளில் நம் பால்வழி, புடவி, சுருள் பால்வெளிகள் ஆகியவற்றின் உருவளவுகள் குறித்த முரண்பட்ட கருத்துகள் நிலவின. இதனால் 1920 ஏப்பிரலில் வாழ்சிங்டன் நகரில் ஆர்லோ சாப்ளேவுக்கும் எபெர் தவுசுட்டு கர்டிசுவுக்கும் இடையில் மாபெரும் விவாதம் மூண்டது. சாப்ளே சுருள் பால்வெளிகள் நம் பால்வழியளவுக்குப் பெரிய அமைப்புகள் அல்ல என நம்பினார். தன் ஒரு விவாதத்தில் இவர் சுருள் பால்வெளிகளின் சுருள் கைச் சுழற்சியை அளந்த வான் மானனின் முடிவுகளைப் பயன்படுத்தினார். மேலும் அம்முடிவுகளைச் சற்றே விரிவாக்கி சுருள் பால்வெளிகளின் கையின் அலைவுநேரம் 105 ஆண்டுகளாகும் என்ற முடிவுக்கு வந்தார். அதே நேரத்தில் கர்டிசு சுருள் பால்வெளிகள், நம் பால்வழிப் பால்வெளியை ஒத்தவையே எனவும் அதனால் அதே உருவளவு உடையனவே எனவும் அதாவது, அன்று கருதப்பட்ட 5 கிலோபார்செக் அளவினவே எனவும் 2.5 கிலோபார்செக் ஆரமுள்ள அமைப்புக்கு இயக்க அலைவு நேரம் மிகவும் சிறிதே எனவும் கூறினார். மேலும், இந்த அலைவுநேரத்துக்கும் ஆரத்துக்கும் சுருள் கைகள் ஒளிவேகத்தினும் விரைவாக சுழல்வதாகக் கொள்ளவேண்டும் என்றார். வான்மானனின் முடிவுகள் சரியானவை என்றால், சாப்ளே சொல்வது சரியே என ஒப்புக்கொண்டார். ஆனால் கர்டிசு வான் மானனின் முடிவுகளின் துல்லியத்தை ஏற்கவில்லை. பின்னர் வானியலாலர்கள் வான் மானனின் அளவீடுகளை ஆய்வு செய்து அவை சீரிய பிழைகளைக் கொண்டவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

வான் மானனின் அளவீட்டுப் பிழைகள் அவர் வான் ஒளிப்படங்களை ஒப்பிட பயன்படுத்திய பருநிலை இமைப்பு ஒப்பீட்டளவியால் ஏற்பட்டிருக்கலாம். இவர் புதிய வான் ஒளிப்படங்களை 10 முதல் 20 அண்டுகளுக்கு முந்தைய ஒளிப்படங்களை ஒப்பிட்டு தன் முடிவுகளுக்கு வந்தார். இந்த இருகால ஒளித்தட்டுகளின் இமைப்பால் கிடைக்கும் வேறுபாடுகளால் அவர் இக்கால இடைவெளியிலான வான்பொருள்களின் இருப்பு மாற்றத்தை அளந்தார். இவரது மேற்கோள் வான்பொருள்கள் ஒளித்தட்டுகளின் விளிம்பில் உள்ள புல விண்மீன்களாகும். இவை இவற்றின் ஒளியியல் விளைவால் சற்றே விளிம்போரத்துக்கு இரு ஒப்பீட்டுத் தட்டுகளில் வெவ்வேறு அளவுகளில் நெருக்கப்பட்டுள்ளதைக் கருதிப் பார்க்கவில்லை. இந்த அமைப்புப் பிழைகள் கற்பனையான நகர்வை உருவாக்கிக் காட்டியுள்ளன.

மற்றொரு விளக்கம் இவர் காலங்காலமாக நிலவிய கண்ணோட்டத்தை மீறவியலாமையைச் சுட்டுகிறது. அந்நூற்றாண்டின் தொடக்கத்தில் சுருள் ஒண்முகில்கள் அருகில் அமைந்தவை எனவும் எனவே அவை கண்டுபிடிக்கத்தகும் சுழற்சியையே கொண்டவை எனவும் பரவலாக நம்பப்பட்டது. எனவே இக்கண்ணோட்டத்தை அவரால் புறந்தள்ள முடியவில்லை. ஆனால் இந்த விளக்கம் மவுண்ட் வில்சன், உலோவெல் வானகாணகம் ஆகியவற்றில் கண்ட அளவுகள் ஒத்தியைந்துள்ளமையை விளக்க வல்லதல்ல என்பது மிகத் தெளிவானது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
குறிப்புகள்
  1. "A. van Maanen (1884 - 1946)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.
  2. Marcia Bartusiak, The Day We Found the Universe (2009) [Vintage Books, page 162]
மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிரியான்_வான்_மானன்&oldid=3353733" இலிருந்து மீள்விக்கப்பட்டது