அதிபரவளைவு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதிபரவளைவுப் பின்னல் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட 37 மீட்டர் உயரமான நீர்த்தாங்கிக் கோபுரம். இதுவே உலகின் முதலாவது அதிபரவளைவு அமைப்பு. 1896 ஆம் ஆண்டில் விளாடிமிர் சுக்கோவ் என்னும் பொறியியலாளரால் அனைத்து உருசியக் கண்காட்சிக்காக அமைக்கப்பட்டது.

அதிபரவளைவு அமைப்பு (Hyperboloid structure) என்பது, அதிபரவளைவு வடிவத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கட்டிடக்கலை அமைப்பு ஆகும். இவ்வடிவத்துக்கு இயல்பாக இருக்கக்கூடிய அமைப்பியல் வலுவைப் பயன்படுத்துவதற்காகப் பெரும்பாலும் உயரமான கோபுரங்கள் இவ்வடிவில் வடிவமைக்கப்படுகின்றன. அமைப்பியல் பயனுக்காக மட்டுமன்றி அழகுக்காகவும் கட்டிடங்களை இவ்வடிவில் அமைப்பது உண்டு. அதிபரவளைவு அமைப்பொன்றை முதன் முதலாக உருசியப் பொறியியலாளரான விளாடிமிர் சுக்கோவ் (1853 - 1939) என்பவர் கட்டினார். உலகின் முதல் அதிபரவளைவுக் கோபுரம் உருசியாவின் லிப்பெட்சுக் ஒப்லாஸ்த்தில் உள்ள பொலிபினோவில் உள்ளது.

அதிபரவளைவு அமைப்புக்களின் இயல்பு[தொகு]

அதிபரவளைவு அமைப்புக்கள் எதிர்மறைக் காசிய வளைமை (Gaussian curvature) கொண்டவை. அதாவது இவை நேராகவோ அல்லது வெளிப்புறம் வளைந்தோ இல்லாமல் உட்புறமாக வளைந்து இருப்பன. இரட்டை வரிப் பரப்புக்களாக (doubly ruled surfaces) இருப்பதால் நேரான வளைகளால் அமைந்த பின்னல்களாக இவற்றை உருவாக்க முடியும். இதனால் இவற்றைக் கட்டுவது இலகுவானது என்பதுடன், வளைந்த வளைகளால் அமைக்கப்படவேண்டிய வளைந்த மேற்பரப்பு அமைப்புக்களைவிட இவை உறுதியானவையாகவும் உள்ளன. தட்டையான மேற்பரப்புக்களைக் கொண்ட நேரான அமைப்புக்களைவிட அதிபரவளைவு அமைப்புக்கள் கூடிய உறுதி கொண்டவை. எனினும் இத்தகைய அமைப்பில் கட்டிடங்களைக் கட்டும்போது அவற்றில் பெருமளவு இடம் வீணாவதால், நீர்த்தாங்கிகள் போன்ற தேவைகளுக்கான அமைப்புக்களும், அழகியல் தேவைகளுக்காக அமைக்கப்படும் கட்டிடங்களுமே பெரும்பாலும் இவ்வாறு கட்டப்படுகின்றன.

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஜப்பானிலுள்ள அதிபரவளைவு அமைப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிபரவளைவு_அமைப்பு&oldid=2267152" இருந்து மீள்விக்கப்பட்டது