அதானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதானி (Athani) இந்தியாவின் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இது பெல்காம் நகரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலும், விஜயபுராவிலிருந்து 70 கிலோமீட்டரிலும், மீராஜிலிருந்து 55 கிலோமீட்டரிலும், கோலாப்பூரிலிருந்து 100 கிலோமீட்டரிலும், ஹுப்லியில் இருந்து 200 கிலோமீட்டரிலும், பெங்களூரிலிருந்து 624 கிலோமீட்டரிலும் அமைந்துள்ளது. இங்கு முக்கிய தொழில் விவசாயமாகும். குறிப்பாக கரும்பு மற்றும் திராட்சை என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நகரத்தில் இருந்து கிருஷ்ணா நதி 18 கி.மீ தொலைவில் காணப்படுகின்றது. அதானி கர்நாடகாவின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி தாலுகா ஆகும். மேலும் தோல் பாதணிகளுக்கு பிரபலமானது. அதானி கர்நாடகாவின் பழமையான நகராட்சி நகரமாகும். இது 1850 ஆம் ஆண்டின் நகராட்சி சட்டத்தின்படி 1853 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நகராட்சி மன்றம் 160 ஆண்டுகளை நிறைவு செய்தது.

காலநிலை[தொகு]

வடமேற்கு கர்நாடகாவின் உயரமான நிலப்பரப்பில் அமைந்துள்ள பெல்காம் மாவட்டத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள அதானி நகரம் வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. இது ஆண்டு முழுவதும் மிதமான காலநிலையை பெறுகின்றது. அதானி வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைகளில் இருந்து மழையைப் பெறுகிறது. ஈரப்பதமான மாதங்கள் சூன்-செப்டம்பர் ஆகும்.[1] சூன் மற்றும் ஆகத்து மாதங்களில் நன்றாக மழை பெய்யும். குளிர்காலம் மிகக் குறைவாகும். குளிரான மாதமான திசம்பரின் சராசரி குறைந்த வெப்பநிலை 25.3 °C ஆக காணப்படும். வெப்பமான மாதத்தின் சராசரி வெப்பநிலை 40 °C ஆக இருக்கலாம். குளிர்கால வெப்பநிலை அரிதாக 18 °C (54 °F) வரை குறைகிறது. வறண்ட மாதம் சனவரி மாதமாகும். சனவரியில் 10 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகும்.[2][3][4]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி அதானி நகரில் 63,625 மக்கள் வசிக்கின்றனர். இந் நகரம் அதன் அருகிலுள்ள இரு கிராமங்கள் உட்பட 15 கி.மீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆண்கள் மக்கட் தொகையில் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் உள்ளனர்.

அதானி மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 74% ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 69% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 79% வீதமாவும் காணப்படுகின்றது. மக்கட் தொகையில் 14% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.[5]

பொருளாதாரம்[தொகு]

விவசாயம்[தொகு]

அதானியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மொத்த மக்கட் தொகையில் 60% வீதமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோதுமை , சூரியகாந்தி, கரும்பு , திராட்சை , நிலக்கடலை என்பன முக்கிய பயிர்களாகும். தக்காளி, கத்திரிக்காய், வெண்டிக்காய், கீரைகள், மிளகாய் போன்ற காய்கறிகளும் வளர்க்கப்படுகின்றன. மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் கிடைக்கக்கூடிய நீர் விநியோகத்திற்கு பம்ப்செட்டுகள் நடைமுறையில் உள்ளன. மேலும் முக்கிய வணிக பயிர் கரும்பாகும். அதானி கர்நாடகாவின் மிகப்பெரிய கரும்பு சாகுபடி தாலுகாக்களில் ஒன்றாகும். இப்பகுதியின் 70% வீதமான நிலம் வளமானதாகும். கிருஷ்ணா நதி மற்றும் அக்ரானி நதிக்கு அருகில் கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்பு தாலுகாவில் 1,50,000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்படுகிறது. அதானியில் உள்ள உயர் கிருஷ்ணா திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கால்வாய்கள் கட்டப்பட்டன. இது கரும்பு மற்றும் திராட்சை சாகுபடிக்கு உதவியாக இருக்கின்றது.

தொழிற்சாலைகள்[தொகு]

அதானி தாலுகாவில் சர்க்கரை தொழில், காலணி தொழிற்சாலைகள், இன்னும் பல தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

காலணி தொழிற்சாலைகள்[தொகு]

அதானியில் தோற் காலணிகள் உற்பத்தி நடைபெறுகின்றது. பாரம்பரிய தோல் உற்பத்தி தொழிலாளர்கள் இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். கிராம தொழில்துறை ஆணையம் "லிட்கர்" என்ற பெயரில் ஒரு காலணி உற்பத்தி மையத்தை நிறுவியது. இதனால் பாதணிகளின் உற்பத்தி அதிகரித்தது. நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் அதானியிடமிருந்து தோல் பொருட்களை தங்கள் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வாங்குகிறார்கள். ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் மூலம் இங்கு உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சர்க்கரை தொழிற்சாலை[தொகு]

முன்பு அதானி தாலுகாவில் சர்க்கரை தொழிற்சாலை காணப்படவில்லை. அதனால் விவசாயிகள் கரும்பை மகாராஷ்டிராவுக்கு கொண்டு சென்றனர். அதானி தாலுகாவில் தொழிலை நிறுவ விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். பின்னர் இந்த தாலுகாவில் பல சர்க்கரை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

அதானி தாலுகாவில் முதல் சர்க்கரைத் தொழில் உகாரில் உகர் சர்க்கரைகள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இங்கு 12,000 தொன்களுக்கு அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்றது.

சான்றுகள்[தொகு]

  1. "Indian Monsoon". archive.is. 2012-12-18. Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Wayback Machine". web.archive.org. 2015-09-24. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. ""Weather maps for surface temperature".
  4. "Wayback Machine". web.archive.org. 2015-09-24. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதானி&oldid=3806267" இலிருந்து மீள்விக்கப்பட்டது